Monday 16 November 2015

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை போன்ற மனிதரல்ல.




قل انما انا بشر مثلكم يوحى الى انما الهكم اله واحد فمن كان يرجوا لقاء ربه فليعمل عملا صالحا ولايشرك بعبادة ربه  احدا

18:110. (நபியே!) நீர் சொல்வீராக: நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.

அவர்களும் மனிதர் நாமும் மனிதர். ஆனால் இரண்டு மனிதருக்கும் மத்தியில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது நபியவர்களின் சரிதை சொல்லும் தெளிவான செய்திகளாகும். பார்ப்பதற்கு நம்மை போன்று தெரிந்தாலும் ஏன் அகத்தில் மட்டுமல்ல முகத்திலும் கூட அவர்கள் நம்மை போன்றவர்களல்ல. மேற்படி வசனம் ஒரு வித்தியாசத்தை தொடர்ந்து கூறும் போது எனக்கு வஹி வருகிறது. அது உங்களுக்கு இல்லை என்பதை கோடிட்டுகாட்டுகிறது. இஃதல்லாமல் உடல் ரீதியாக பௌதீக அடிப்படையில் நாம் தெளிவாக அவர்களை பார்த்தால் கூட நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. அதில் சிலதை பார்ப்போம்.


                   வித்தியாசமான கை.

நமக்கு கரங்கள் உண்டு. அவர்களுக்கும் கைகள் உண்டு. ஆனால் இரண்டு கைகளுக்கும் மத்தியில் வித்தியாசப்படும் அம்சங்கள் அநேகம் உண்டு. நாம் நமது கையால் தாக்கினால் வலி ஏற்படும். காயம் கூட உண்டாகும். அவர்கள் அடித்தால் வலிக்குமோ வலிக்காதோ ஆனால் அதனால் உள்ளார்த்தமான பயன்பாடு விளையாமல் போகாது.


நாம் யாரின் நெஞ்சிலாவது அடித்தால் அவருக்கு வலிக்கும் அவர் நம்மை கோபிப்பார், ஏசுவார். ஆனால் நாயகம் (ஸல்) அவர்கள், ஹளரத் உமர் (ரலி) அவர்களை நெஞ்சில் அடித்த போது இதயம் விரிந்தது. அவர்களுக்கு விசயம் தெரிந்தது. வானளாவிய சங்கதிகள் வெளிச்சமானது.


ஹதீஸில் வந்துள்ளது. ஹளரத் கப்பாப் பின் அரத்து (ரலி) அவர்கள் ஒரு மஹல்லாவின் இமாமாக பணியாற்றி வந்தார்கள். அவர்கள் தங்களுடைய பள்ளியில் ஒருநாள் தொழ வைத்தார்கள். அப்போது உமர் பாரூக் (ரலி) அவர்கள் கப்பாப் (ரலி) அவர்களின் கிராஅத்தை கேட்டார்கள்.


அது அவர்கள் கோத்திரத்தார் பேசும் பாணியில் இருந்தது. உமர் (ரலி) அவர்கள் குரைஷிகளின் ஒலி வடிவ கிராஅத்தையே அறிந்து வைத்திருந்தார்கள். மேலும் அல்லாஹ் விசயத்தில் ரொம்ப வேகமானமானவராக இருந்தார்கள். எனவே கப்பாப் (ரலி) அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமூகத்தில் ஆஜர் படுத்தி அல்லாஹ்வின் தூதர் அவர்களே... தாங்கள் அனுமதி அளித்தால் இந்த முனாபிக்கின் தலையை கொய்து விடுகிறேன். ஏனெனில் இவர் குர்ஆனை தவறாக ஓதுகிறார் என குற்றம் சாட்டினார்கள்.


உடனே நாயகம் (ஸல்) அவர்கள் கப்பாபிடம் நீ ஓது, எப்படி ஓதுகிறாய் என்று பார்க்கலாம் என்றார்கள். அவர் குர்ஆனை தனக்கு தெரிந்த மாதிரி தனது பேச்சு மொழியிலே ஓதிக்காண்பித்தார். இப்படித்தான் குர்ஆன் இறக்கப்பட்டது என்று நபியவர்கள் சொன்னார்கள். இரண்டாவது உமர் (ரலி) அவர்களை ஓதச் சொன்னார்கள் அவர்களும் தங்களது பேச்சு மொழியில் ஓதினார்கள். இதற்கும் இப்படித்தான் குர்ஆன் அருளப்பட்டது என்றார்கள்.


குர்ஆன் ஏழு மொழிதல் படி அருளப்பட்டது என்பது நபிமொழி. அரபு மொழி ஒன்றாக இருந்தாலும் அதை மொழியும் விதம் இடத்துக்கு இடம் ஊருக்கு ஊர் வேறுபட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிகயிலும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். தமிழ் மொழி கூட பல பகுதிகளில் பலவிதமாக பேசப்படுகிறது.


சிலர் ஜீ மை யா வாக மொழிவார். இதன்படி மஸ்ஜித் என்பதை மஸ்யித் என்றும், ஸஜராத் என்பதை சாய்ராத் என்றும் உச்சரிப்பார். இவ்வாறே வேறு சிலர் காப் ஐ ஜீமாக மொழிவார். இதன்படி ஜெத்தாவை கெத்தா என்றும், ஜன்னாவை கன்னா என்றும், காஸிம் என்பதை ஜாஸிம் என்றும் மாற்றி உச்சரிப்பார்.


இவ்வாறு உச்சரிப்பதில் மாற்றம் இருந்தாலும் பொருளில் வித்தியாசம் இருக்காது. இதில் இலக்கிய தரமுள்ள பேச்சி மொழிகளாக குரைஷிகளின் மொழி, பனூதமீம் மொழி, தை கோத்திரத்தார் மொழி என பேச்சு மொழிகள் தாம் இருந்தன. இந்த ஏழு பேச்சு மொழிகளில் எந்த பேச்சு மொழியில் ஓதினாலும் செல்லத்தக்கதே. இதைதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.


கப்பாப் (ரலி) ஓதியபோது இப்படியும் இறங்கியது, உமர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய போதும் இப்படியும் இறங்கியது என்று சொன்னார்கள். எனினும் இந்த விளக்கம் உமர் (ரலி) அவர்களுக்கு பட்டென மனதில் சரியென படவில்லை. ஒருவகையான ஐயம் ஏற்பட்டது. இது என்ன குர்ஆன்.... யார் எப்படி வேண்டுமானாலும் ஓதிக்கொள்ளலாம். எப்படி ஓதினாலும் இப்படியும் இறங்கியது என்று சொல்லுமளவிற்குள்ளதே என ஒரு வகையான சலனம் அவர்கள் மனதில் ஏற்பட்டது.


இப்படி ஒரு ஊசலாட்டம் ஏற்பட்ட உடனேயே இதை தனது அக ஒளியைக் கொண்டு பார்த்த அண்ணலார் (ஸல்) அவர்கள் யப்னல் கத்தாப் - கத்தாபுடைய மகனே.. என விழித்து நெஞ்சில் ஒரு அறை அறைந்தார்கள். இந்த அடிதான் அவர்களுக்கு விமோச்சனம் வாங்கி கொடுத்தது. ஹஸ்ரத் உமர் பாரூக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எனது நெஞ்சிலே அடி பட்டதும் அது எந்தளவுக்கு விரிந்தது என்றால் வானம் எனக்கு வெளிச்சமானது. விசயம் யாவும் ஐயம் நீங்கி புரிந்தது. சந்தேகம் அகன்றது. இது தான் நமக்கும் நபி (ஸல்) அவர்களுக்கு மத்தியில் இருக்கிற வேறுபாடு.

                     
                      வித்தியாசமான நாக்கு.


நமக்கு நாக்கு இருப்பது போல, அவர்களுக்கும் உண்டு. இரண்டுமே இறைச்சியினால் உருவானது தான். ஆனால் நமது நாவு உணவின் ருசியைத்தான் அறியும். எனினும் அவர்களின் நாவோ ருசியை மட்டுமல்ல ஹலால் ஹராமையும் பிரித்தறியும்.


அன்சாரிகளின் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அடக்கம் முடிந்ததும் இறந்தவரின் வாரிசுகள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே... எங்களது வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செல்லுங்கள் என அன்பொழுக அழைத்தனர். நபியவர்களும் இதை ஏற்றுக் கொண்டு அங்கு சென்றார்கள். உணவில் இறைச்சி பரிமாறப்பட்டது. எல்லோரும் சாப்பிடத் தொடங்கினர். நபி (ஸல்) அவர்களும் வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்ததும் உடனே கூறினார்கள்.


இது அபகரிக்கப்பட்ட உரியவரின் அனுமதி பெறாத ஆட்டின் இறைச்சியாக தெரிகிறது.. உடனே சாப்பிடுவதை நிறுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் தெரிய வந்த உண்மையாதெனில், விருந்துக்கு அழைத்தவருடைய மனைவி தனது கணவரிடம் இன்ன இடத்திலிருந்து ஒரு ஆடு வாங்கி வாருங்கள் ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்க வேண்டியுள்ளது என கூறினாள்.


ஆனால் அவர் சென்று குறிப்பிட்ட இடத்தில் பார்த்த போது அங்கு ஆடு கிடைக்கவில்லை. உடனே தனது அண்டை வீட்டுகாரரிடத்தில் விலையை கொடுத்து ஒரு ஆடு வாங்கி வரச்சொன்னார். அவருக்கும் கிடைக்கவில்லை. உடனே தனது மற்றொரு அண்டை வீட்டாரின் மனைவியிடத்தில் எங்கிருந்தாவது ஒரு ஆடு வாங்கி வரச்சொல்ல அவள் தனது கணவருக்கு சொந்தமான ஒரு ஆட்டை அவரிடம் கேட்க்காமல்  பிறகு சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். பிடித்து அறுத்தார். இதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாவு கண்டுபிடித்து சொன்னது.


இது அபகரிக்கப்பட்ட பொருள். உரியவரின் அனுமதியின்றி அறுக்கப்பட்டுள்ளது. இதை கைதிகளுக்கு உண்ணக்கொடுங்கள் நாம் இதை சாப்பிட வேண்டாம் என்றார்கள். நமது நாக்கிற்கும் அவர்களது நாவுக்கும் இது தான் வித்தியாசம்.
இரண்டுமே சதை துண்டு தான் ஜடப்பொருள் தான் ஆனால் நமது நாவு சுவையை மட்டும் அறியும், புலனறிவு தன்மை வாய்ந்தது என்றால் அவர்களது நாக்கு ருசியை அறியும் மட்டுமல்ல புலனறிவுக்கு அப்பாற்பட்டு உணவின் தரத்தையறியும் பொருளறிவு பெற்றதாகும்.
                      

                       நோன்பு வித்தியாசம்.


நான் உங்களைப் போன்று மனிதன் தான் என்று அல்லாஹ் சொல்லச் சொன்னதால் அப்படி சொன்னார்கள். ஆனாலும் அவர்கள் தொடர் நோன்பு வைத்தார்கள். இதை பார்த்து ஸஹாபாக்களும் வைத்தபோது அதை நபியவர்கள் தடுத்தார்கள். நோன்பே திறக்காமல் இடைவிடாது தொடர்ச்சியாக நோன்பு பிடிக்க வேண்டாம். அப்படியானால் அவ்விதம் நீங்கள் தொடர் நோன்பு பிடிக்கிறீர்களே எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள் என தோழர்கள் கேட்டபோது அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா...


உங்களில் என்னை போல் யாரிருக்கிறீர்கள்...  எனக்கு எனது இரட்சகன் உணவளிக்கிறான். குடிப்பளிக்கிறான்.  அப்படியானால் என்ன பொருள் நான் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என அவர்கள் ஒரு கருத்தில் சொல்லலாம். ஆனால் அவர்கள் நம்மை போன்ற மனிதர் தான் என்று நாம் சொல்லக்கூடாது.. ஒரு வகையில் உங்களைப்போல மற்றொரு வகையில் என்னைப்போல யாருமில்லை. ஒரு கருத்துக்கு அவர்கள் நம்மை போன்றும் மற்ற கருத்தில் அவ்வாறில்லாமல் இருக்கிறார்கள்.

                      
                       கண் வித்தியாசம்.


நமக்கு கண் உள்ளது. அவர்களுக்கும் இருக்கிறது. இரண்டும் ஒன்றா.... நமது கண் நிறங்களை வடிவங்களை உருவங்களை பார்க்கிறது. அதுவும் முன்னாலிருக்கும் போது மட்டும். ஆனால் அவர்கள் பின்னாலுள்ளதையும் முன்னாலுள்ளதைப் போலவே பார்க்கிறார்கள். அதுமட்டுமல்ல நிறமற்ற உருவமே இல்லாதவனையும் இல்லாததையும் பார்க்கிறார்கள்.


நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கும் போது சிலர் செய்த தவறை சுட்டிக்காட்டி உணர்த்தினார்கள். நீங்கள் என்னை என்ன நினைத்துக் கொண்டீர்கள்.  எனக்கு பின்னாலுள்ளதை நான் பார்க்க மாட்டேன் என்றா விளங்கினீர்கள்..  அறிந்து கொள்ளுங்கள். நான் முன்னாலுள்ளதைப் பார்ப்பதை போல் பின்னாலுள்ளதையும் பார்க்கிறேன்.


நமது கண் ஒருபுறம் தான் பார்க்கும் என்றால் அவர்களது கண் இருபுறமும். முன்பும் பின்பும் பார்க்கும். எனவே கண் பார்வையிலும் அவர்கள் நம்மை போன்று இல்லை.

             
                       பிறப்பு வித்தியாசம்.


பொதுவாக குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து அழுது கொண்டே குப்புற விழுந்த நிலையில் பிறக்கிறது. ஆனால் ஹதீஸிலே வருகிறது நபி (ஸல்) அவர்கள் பிறக்கிற போது அவர்களின் பரக்கத்தான முகம் வானை நோக்கி இருந்தது. அவர்களின் கலிமா விரல் உயர்ந்து ஓறிறையை அறிவிக்கும் விதமாக அமைந்திருந்தது.


உடலில் அசுத்தம் இல்லை. தாயின் வயிற்றில் ஒன்பது மாதக் குழந்தையின் கணம் சுமையாக இல்லை மிகவும் லேசாக இருந்தார்கள். அவர்கள் பிறந்த போது வெளிப்பட்ட ஒளிகள் பரக்கத்துகள், எந்தளவுக்கு ஒளிர்தது. ஜொலித்தது என்றால் அன்னை ஆமினா (ரலி) கூறுவார்கள்.
நான் அந்த ஒளியில் அந்த சந்திரனின் வெளிச்சத்தில் ஷாம் தேச மாளிகைகளை பார்த்தேன். பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது இப்படி அதிசயங்கள் நிகழ்வதில்லை.

                 
                   வித்தியாசமான குழந்தை.


பொதுவாக எல்லா குழந்தைகளும் சிறு பிராயம் ஏற்படுகிறது. அது போல நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்படுகிறது. ஆனால் இந்த நபித்துவ சிறுபிராயத்தில் நடக்கும் அற்புதங்கள் பொதுவாக மற்ற பிள்ளைகளின் வாழ்க்கையில் இருக்காது. இந்த வகையில் நபியவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்டது, அவர்களின் மூலம் பரக்கத்துக்கள் வெளிப்பட்டது, அவர்களின் செவிலித்தாய் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) அவர்களின் ஒட்டகம் மெலிந்திருந்த போதிலும் நபியவர்களை பெற்று திரும்பும் போது மற்ற ஒட்டகங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்துமளவிற்கு அதிவேகமாக சென்றது. பஞ்ச காலம் பால் கொடுக்க நபியவர்களை கொண்டு வந்த போது அந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு விளைச்சல் பலன் கிட்டியது. இப்படி ஒன்றா இரண்டா அவர்களால் விளைந்த பரக்கத்துக்களை சொல்லி முடிக்க...


ஹகீமுல் இஸ்லாம் காரி தையிப் சாஹிப் ரஹ்.
துணைவேந்தர், தாருல் உலூம் தேவ்பந்த் - சர்வகலாசாலை. உ.பி. 

வெள்ளி விழா மலர். 2000. 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மஸ்லஹிகளிடமிருந்து ஊக்கத்தை மட்டுமல்ல ஆக்கங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

      அனுப்ப வேண்டிய முகவரி.
      manbaussalah@gmail.com

      Delete