Monday 28 December 2015

விளையாட்டில் இஸ்லாம்

 
இறைவன் உலகை அறிமுகப்படுத்தும் போது இவ்வாறு கூறுகிறான்.
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
29:64. இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.

إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ ۚ وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ
47:36. திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
57:20. அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

மேற்கூறிய வசனங்களின் மையக்கருத்தை ஆழ்ந்து கவனித்தால் ஒரு விசயம் புரிய வரும்.  அதாவது : விளையாட்டோடு ஒப்பிடும் அளவுக்குத்தான் இவ்வுலகம் இருக்கிறது. மனித வாழ்வில் உலகம் எவ்வளவு தவிர்க்க முடியாததோ, அது போன்று விளையாட்டும் தவிர்க்க முடியாதது. இறைவனிடத்தில் உலகம் எவ்வளவு மதிப்பில்லாததோ, அதுபோல விளையாட்டும் மதிப்பில்லாதது. மறுமையில் வெற்றி பெற்ற ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தோற்றால் அதனால் அவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மனித வாழ்வில் வெகு குறைவான இடத்தைப் பிடிக்கும் இவ்விளையாட்டுகளில் சில வகைகளை சில நிபந்தனைகளும் இஸ்லாம் அனுமதித்துள்ளது.
"உக்பதுப்னு ஆமிர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி ஸல் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மனிதனின் அனைத்து விளையாட்டுகளும் வீணானவை தவறானவை. மூன்றைத்தவிர :
1. குதிரைப் பயிற்சி.
2. அம்பெறியும் பயிற்சி.
3. மனைவியிடத்தில் விளையாடுவது.
என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்."

                     குதிரைப் பந்தயம்.
குதிரைப் பயிற்சியிலே குதிரைப் பந்தயங்களும் ஒட்டகப்பந்தயங்களும் இடம் பெறுகின்றன. நபியவர்களே இந்த பந்தயங்களை நடத்தியிருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் ப்னு அம்ரு ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் குதிரைகளுக்கு மத்தியிலே ஒட்டகப்பந்தயம் நடத்தினார்கள். கொழுத்த குதிரைகளுக்கு "ஹஃப்யா" என்ற இடத்திலிருந்து "ஸனிய்யதுல் வதா" என்ற இடம் வரைக்கும் எல்லை நிர்ணயித்தார்கள். இரண்டுக்கும் இடையே ஆறு மைல் தொலைவு இருந்தது. மெலிந்த குதிரைகளுக்கு "ஸனிய்யதுலி வதா" விலிருந்து "மஸ்ஜிதுன் பனீ ஸரீக்." என்னும் இடம் வரைக்கும் எல்லை அமைத்தார்கள். இரண்டுக்கும் இடையேயான தொலை தூரம் ஒரு மைல் அளவாகும்.
                       நூல்.  புகாரி முஸ்லிம்.

                  ஒட்டகப் பந்தயம்.
ஹஸ்ரத் அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் ஒட்டகப் பந்தயம் நடத்துவார்கள். அதில் நபியின் ஒட்டகமான "அழ்ஃபா" கலந்து கொண்டு தவறாமல் வெற்றி பெறும். ஒருமுறை ஒரு காட்டரபி ஒரு ஒட்டகத்தை கொண்டு வந்து ஓடவிட்டார். என்ன ஆச்சரியம்...!  அன்றைக்கு அது ஜெயித்து விட்டது. தோழர்களுக்கு நபியின் ஒட்டகத்தை விட அவரின் ஒட்டகம் முந்திச் சென்றதில் கடுமையான வருத்தம். அதை கண்ட நபியவர்கள் இவ்வுலகில் எந்த ஒன்றும் உயர்ந்த நிலையில் இருந்து வருமானால் ஒருநாள் அதை வீழ்த்தாமல் அல்லாஹ் விட மாட்டான். இது அல்லாஹ்வின் நியதி என்றார்கள்.
                                      நூல், புகாரி.
ஜெயித்துக் கொண்டே இருப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற உண்மையை அதன் மூலம் உணர்த்திய நபியவர்கள் விளையாட்டுகளில் வெற்றியும் தோல்வியும் சகஜமே என்பதை உணர்த்தினார்கள்.

                       பயனுள்ள விளையாட்டு.
குதிரையை பயிற்றுவிக்குதல், ஒட்டகப் பயிற்சி அளித்தல், அம்பெறிந்து பழகுதல் போன்றவற்றில் மனிதன் இரண்டு விதமான பயனை பெறுகிறான். ஒன்று அவனது உடலுக்கு உரம் சேர்க்கிறது. மற்றொன்டு அவனை போர் பயிற்சி பெற்றவனாக ஆக்குகிறது. இந்த அடிப்படையிலே தான் உடலை வளப்படுத்தும் எல்லா வகையான விளையாட்டுகளையும் ஷரீஅத் அனுமதிக்கின்றது.

               வகைவகையான விளையாட்டுக்கள்.
இன்றய உலகில் பலவிதமான விளையாட்டுகளைக் காண முடிகிறது. செஸ், ட்ராட், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்கள் (Indoor Games.)  மற்றும், கூடைப் பந்து, கால் பந்து, இறகுப் பந்து, மல்யுத்தம், கிரிக்கெட், ஹாக்கி, போலோ, பனிச்சறுக்கு, நீச்சல், கபடி, ஓட்டப்பந்தயம் போன்ற வெளிரங்க விளையாட்டுக்கள் ( Outdoor Games.)  போன்றவைகள் உள்ளன.
உள்ளரங்க விளையாட்டுக்களைப் பொறுத்தவரையிலே உடலுக்கு எவ்வித ஊட்டமும் தருவதில்லை. முழுக்க முழுக்க அது மூளை சம்பந்தப்பட்டது. வெளிரங்க விளையாட்டுக்களைப் பொறுத்தவரையில் அது உடலுக்கு உரமேற்ப்படுகிறது. இவ்வகையிலே தான் இவ்வகை விளையாட்டுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனாலும் இவ்வகை விளையாட்டுக்களிலே அளவுக்கு அதிகமான ஆர்வமும் மற்றும் மார்கத்திற்கு முரணான சூதாட்டம், போட்டி, பொறாமை, கர்வம் போன்றவையும் கலந்து விடும் போது இவைகளும் தடையாகி விடுகின்றன.

                   "கிறுக்" கெட்.
கிரிக்கெட்டைப் பார்க்க உட்கார்ந்தால் இகாமத் சப்தம் கேட்டாலும் எழுந்தரிக்க மனம் வருவதில்லை என்பது உண்மையல்லவா...?
உலகில் அதிகளவு ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்து தான். இந்நிலை இன்றைக்கு கிரிக்கெட்டிற்குக் கிடைத்திருக்கிறது. மீடியாக்களின் அதிகளவு விளம்பரங்களினால் இந்நிலை கிரிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் உதவிடும் விளையாட்டு அல்ல மேற்கத்திய மனிதர்களுக்கு குறிப்பாக சூரிய வெளிச்சம் தேவைப்படும் தோல் உடையவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கிரிக்கெட்டில் கால்பந்தை போல் சுறுசுறுப்பு இல்லாமல் மிக நிதானமாக விளையாடப்படும். இவ்விளையாட்டினால் உடலுக்கு எவ்வித பயனுமில்லை. அறிஞர் பெர்னாட்ஷா இதைப் பற்றிக் கூறும் போது இப்படிச் சொன்னார்.

பதினொரு முட்டாள்கள் விளையாடுவதை பதினொரு ஆயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்றார். அப்படிப்பட்ட விளையாட்டில் இப்போது சூதாட்டமும் புகுந்துள்ளது என்பதை அறிகின்றோம். இந்த சூதாட்டம் தான் கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் வெற்றி தோல்வியை நிர்ணயித்திருக்கிறது என்ற செய்தியறிந்து விளையாட்டு ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். விளையாட்டு வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏமாற்றியுள்ளனர் என்பதை இப்போதாவது உணர்வார்களா...?  இப்படி விளையாட்டில் சூதாட்டம் சேர்ந்தால் அது அப்பட்டமாய் ஹராம் தான் அதிலே சந்தேகமே இல்லை. எனவே இன்றைய நிலையில் கிரிக்கெட் ஹராம் என்று கூறலாம்.

                 மனைவியுடன் விளையாடுவது :
நபியவர்கள் அனுமதித்த மூன்றாவது வகை விளையாட்டு மனைவியுடன் விளையாடுவதாகும். இது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. சோர்வை நீக்கி புத்துணர்ச்சி ஏற்ப்படுத்துகிறது. இவ்வகை மகிழ்ச்சி தனது தோழர்களுக்கும் டைத்திட வேண்டும் என்பதில் நபியவர்கள் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள்.

ஜாபிர் ப்னு அப்துல்லாஹ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபியிடத்தில் திருமணமானவன் எனச் சொன்ன போது நீ மணமுடித்தது கன்னியா...? விதவையா...? எனக் கேட்டார்கள். நான் விதவைப் பெண்ணை என்றேன். அதற்கு அவர்கள் கன்னிப் பெண்ணை மணந்திருந்தால் நீர் அவளிடம் விளையாடலாம், அவள் உன்னுடன் விளையாடுவாள். நீர் அவளை சிரிக்க வைக்கலாம். அவள் உம்மை சிரிக்க வைப்பாள். என பாசத்துடன் சொன்னார்கள். நான் சொன்னேன். என் தந்தை ஷஹீதான போது ஏழு பெண் மக்களை விட்டுச் சென்றார். இந்நிலையில் ஒரு கன்னிப் பெண்ணை நான் மணமுடித்தால் அவளால் குடும்பத்தை பராமரிக்க முடியாது. விதவையை மணமுடித்தால் அவள் பொறுப்புள்ள குடும்ப தலைவியாக இருப்பாள் என நினைத்து இவ்வாறு செய்தேன்.
இதை கேட்ட நபியவர்கள் மகிழ்ந்து "பாரகல்லாஹு லக்க" என்று வாழ்த்தினார்கள் உமக்கு அல்லாஹ் அபிவிருத்தியளிப்பானாக (புகாரி - முஸ்லிம்.)

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருமுறை ஹபஷிகள் பள்ளி முற்றத்தில் அம்பெறிந்து விளையாடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நபி தனது அறை வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக தனது மேலாடையால் என்னை மறைத்து நான் நபியின் தோளுக்கும், காதுக்கும் இடையில் பார்க்குமாறு செய்தார்கள். அப்படியே நீண்ட நேரம் எனக்காக நின்று கொண்டிருந்தார்கள். நானாக போதும் என்ற பிறகே அங்கிருந்து அகன்றார்கள்.
                       ( நூல் - புகாரி, முஸ்லிம்.)
ஒருமுறை நபி ஸல் அவர்களும் அன்னை ஆயிஷா ரலி அவர்களும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டார்கள். அப்போது ஆயிஷா ரலி அவர்கள் ஜெயித்தார்கள். பின்பு ஒருமுறை ஓட்டப்பந்தயம் நடைபெற்ற போது நபி ஸல் அவர்கள் ஜெயித்து விட்டார்கள். பிறகு சொன்னார்கள். அன்றைக்கு நீ ஜெயித்ததற்கு இது சரியாகிப் போய்விட்டது. (ஆட்டம் டிரா.) என்றார்கள்.
                            நூல்.  மிஷ்காத்.
இவற்றிலிருந்து மனதுக்கு மகிழ்வூட்டும் விளையாட்டுகளில் மனைவியுடன் ஈடுபடுவதும் விளையாட்டுகளை மனைவியுடன் ரசிப்பதும் ஆகும் எனத் தெரிய வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களின் கவனம் முழுக்க விளையாட்டுகளின் பக்கம் வெகுவாகத் திரும்பியுள்ள நிலையில் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. மனைவியை மகிழச் செய்யும் நோக்கில் மார்க்க வரம்புகளை மீறிவிடக்கூடாது.
உலகம் மறுமைக்காக பாடுபட வேண்டிய இடம் என்பதால் இபாதத்துகளில் மட்டுமே மூழ்கி ஒரேயடியாக விளையாட்டை ஒதுக்கவும் முடியாது. அதே போல் விளையாட்டுகளிலேயே மூழ்கி இவ்வுலகின் ஆசாபாசங்களில் அமிழ்ந்து இபாதத்துகளை மறந்து விடவும் கூடாது இவ்விரண்டுக்கும் நடுவே நடுநிலையோடு நபிவழியோடு நடப்பதே நமக்கு நல்லது.

நபி ஸல் அவர்கள் அனுமதித்த விளையாட்டுகளை உடலுக்கும், மனதிற்கும் தெம்பளிக்கும் விளையாட்டுகளை அனுமதித்து வீணான, ஈமானை பறிக்க கூடிய விளையாட்டுகளை விடுத்து வாழ்வை வளமாக்குவோம். வல்லவனின் அருளைப் பெறுவோம்.

மவ்லானா S. லியாக்கத் அலி மன்பஈ

No comments:

Post a Comment