Tuesday 22 December 2015

நவீன பிரச்சனைகளும் இஸ்லாமிய தீர்வும்

மௌலவி, அல்ஹாபிழ்  S.A. நிஜாமுத்தீன் யூசுபி பாஜில் தேவ்பந்தி.
     பேராசிரியர், தாருல் உலூம் யூசுபிய்யா, திண்டுக்கல்.


உலகப்பொதுமறை திருக்குர்ஆன் அல்லாஹ்வின் இறுதிமறை. அகிலத்தின் அருட்கொடையான முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி நபி. அவ்வாறே இஸ்லாம் சொல்லித்தரும் வாழ்க்கை நெறியும் இறுதியானது, நிரந்தரமானது, தீர்க்கமானது.

இது வெத்துவாதமல்ல. சத்தியமான நிகழ்வு என்பதற்கு சரித்திரமே சான்று. அதே சமயம் சமுதாயத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் மட்டும் தொடர்கதை.  குறிப்பாக "விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்துறையின் நவீன ஆய்வுகள் இஸ்லாத்திற்கு ஒரு சவால்"  என்று (தவறாக) நினைக்குமளவிற்கு முன்னேறிவிட்டன. எனினும் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு ஆய்வும் (அது சரியானதாக இருந்தால்) " இஸ்லாம் உண்மை" என்பதற்கே சான்றாக அமையும். அமைந்தும் இருக்கிறது.
"இந்த பூமிக்கு வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வருவார்கள்" என்று வெளியான ஆய்வின்படி நடந்து விட்டாலும் விஞ்ஞானத்துடன் இஸ்லாம் மோதிவிடாது.   "அல்லாஹ் நாடும் சமயத்தில் அதையும் செய்ய சக்தியுள்ளவன்" என்றே குர்ஆன் (42:29) கூறுகிறது.

                       நவீனயுகம்
விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மக்களின் புழக்கத்தில் வருகின்றன. அவற்றை முஸ்லிம்கள் எவ்விதம் கையாள வேண்டும். என்ற பிரச்சனையும் எழுகிறது. உதாரணமாக உறுப்பு மாற்றுதல், இரத்ததானம் செய்தல், சோதனைக் குழாய் குழந்தை, வாடகை தாய்மை, குளோனிங் இது போன்ற சிகிட்சை முறைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது. அவ்வாறே ஷரீஅத்துடைய சட்டங்களும் அவற்றோடு சம்பந்தப்படுகின்றன.
கேஸட், மற்றும் சீடி, கம்பியூட்டரில் ஆடியோவின் மூலம் ஸஜ்தா ஆயத்தை கேட்டால் ஸஜ்தா செய்ய வேண்டுமா.. இன்டெர்நெட்டில் தலாக் கொடுத்தால் நிகழுமா..? வேற்று கிரகத்திற்கு சென்று விட்டால் எத்திசையை நோக்கித் தொழுவது...?  இது போன்ற பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வு சொல்லியே ஆக வேண்டும். சொல்லியும் இருக்கிறது. அல்லாஹ் தனது திருமறையில் இஸ்லாத்தை எக்குறையுமில்லாமல் பரிபூரணமாக்கி விட்டதாக கூறுகிறான்.
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;  (5 : 3 )
கியாமத்நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும் நபியாக வந்த இறுதி தூதர் (ஸல்) அவர்களும் "குர்ஆனில் உங்களுக்கு முன் நடந்த செய்தியும் உங்களுக்கு பின் நடக்கப் போகும் செய்தியும் உங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைக்கும் தீர்வும் உள்ளது." நூல் திர்மிதி  : 2/118. என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

எனவே இஸ்லாமிய நெறிமுறை நிறைவானது, நிரந்தரமானது. நவீனயுகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கூறப்பட்டே இருக்கும். என்று ஈமான் கொள்வது அவசியம்.

                  இஸ்லாத்தின் தனித்தன்மை.
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் எத்தனையோ நபிமார்கள் வந்துள்ளனர். எத்தனையோ உம்மதுகள் வாழ்ந்து சென்றிருக்கின்றனர். ஆனால் இந்த உம்மத்துக்கு ஏற்பட்ட ஏற்படுகிற ஏற்படபோகும் பிரச்சனைகள் போல் எந்த உம்மத்திற்கும் ஏற்பட்டதில்லை. அவற்றை இந்த உம்மத் சமாளிப்பதற்காக அல்லாஹ் ஏற்பாடு செய்தமுறைகள் இரண்டு.
1. கியாமத்வரை காலாவதியாகாத மனிதனுடைய இயற்கைகுத்தோதுவான போதனைகளை வழிமுறைகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி நபியாக அனுப்பினான்.

2. ஒவ்வொரு காலத்திலும், இந்த தீனின் போதனைகளை ஆய்வு செய்து அமல்படுத்துவதற்காக ஃபுகஹாக்களை சட்ட வல்லுனர்களை இந்த உம்மத்தில் அல்லாஹ் ஏற்படுத்தினான். இதுபோல் முன் சென்ற எந்த உம்மத்திலும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக நான்கு இமாம்களின் ஆய்வை முழு உலகமும் ஏற்றுக் கொள்ள வைத்தான். குர்ஆன் ஹதீஸிலிருந்து அவர்கள் செய்த ஆய்வு இன்று வரை ( இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை) ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறிக்கொண்டிருக்கிறது.

எனவே குர்ஆனில் கமபியூட்டர் என்ற பெயர் இல்லை, குளோனிங் என்ற பெயர் இல்லை, சோதனை குழாய் குழந்தை என்ற பெயர் இல்லை, டெலஸ்கோப் என்ற பெயர் இல்லை, இன்டர்நெட் என்ற பெயர் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. இது இஸ்லாத்தின் தனி தன்மை.

                          இஜ்திஹாத் :
"நவீன யுகத்தின் விஞ்ஞானத்திற்கு முன்னால் இஸ்லாம் ஒன்றுமே இல்லை." (நவூதுபில்லாஹ்) என்று உளறுபவர்கள் சிலர்.
"நவீன யுகத்தின் பிரச்சனைகளுக்கு இமாம்களின் ஆய்வு வேலையாகாது. தக்லீத் பொய்யாகிவிட்டது. நாமே புதிதாக ஆய்வு செய்ய வேண்டும்." என்று தூற்றுபவர்கள் சிலர்.
முதலாவது "தவறு" என்பதை ஏற்கனவே விளக்கி விட்டோம். இரண்டாவதும் தவறே. இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விசயம் மூன்று. :
1. தக்லீதின் கருத்தை தவறாக விளங்கப்படுகிறது. குர்ஆன் ஹதீஸில் தெளிவாக வெளிப்படையாக கூறப்பட்டவற்றை யாரும் யாரையும் தக்லீத் செய்ய வேண்டியதில்லை. செய்யக்கூடாது.  உதாரணமாக "ஐந்து நேரத் தொழுகை கடமை" என்பதில் யாரும் எந்த இமாமையும் தக்லீத் செய்யவில்லை. "விபச்சாரம் ஹராம்" என்பதும் தெளிவானது.
2. இமாம்கள் இஜ்திஹாத் ஆய்வு செய்து அடிப்படை சட்டங்களை கூறியுள்ளனர். அச்சட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல முடியும்.
3. இமாம்கள் கூறிய அடிப்படை சட்டங்களை வைத்து பல பிரிவு சட்டங்களை பின்னால் வந்த ஃபுகஹாக்கள்  கூறியுள்ளனர். அந்த பிரிவு சட்டங்களும் உதாரணங்களும் நவீன பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

                       தஹ்கீகுல் மனாத்

நம்முன் உள்ள நவீன பிரச்சனைகளை ஃபிக்ஹ் கிதாபுகளில் உள்ள பிரிவு சட்டங்களில் அதிலுள்ள உதாரணங்களில் எந்த சட்டத்திற்கு தோதுவாக உள்ளது என்று பொருத்திப் பார்த்து அதற்குரிய தீர்வை சொல்லி விட முடியும். (உதாரணங்கள் பின்னால் கூறப்படும்.)

இப்படிப்பட்ட ஆய்வுக்கு  "தஹ்கீகுல் மனாத்" என்று சொல்லப்படும். இது போன்ற ஆய்வை ஒவ்வொரு காலத்திலுள்ள உலமாக்களும் செய்ய முடியும். இந்த ஆய்வின் வாசல் கியாமத் வரை திறந்திருக்கும். கியாமத்வரை  இந்த இந்த ஆய்வு நடைபெறும். இது பற்றிய விளக்கம் "மஆரிபுஸ்ஸுனன்" 1/62 ( திர்மிதி ஷரிபுடைய விளக்கவுரையில் கூறப்பட்டுள்ளது.)  எனவே இமாம்களின் ஆய்வை புறக்கணித்து விட்டு புதிய ஆய்வு செய்ய வேண்டிய அவசியமுமில்லை. இமாம்களின் ஆய்வை அறவே மறுக்கவும் முடியாது.

                          ஃபிக்ஹ் நூற்கள்

தற்காலத்தில் முன்வரும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஃபிக்ஹ் கிதாபுகளில் சொல்லப்பட்டிருக்கும், அது போன்ற ஒரு மஸ்லாவை ஒப்பாய்வு செய்து ஒரு முடிவுக்கு வர முடியும். இது ஃபிக்ஹ் கிதாபுகளை அக்கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே விளங்கும். உதாரணத்திற்காக இங்கு சில மஸ்அலாக்களை கூறப்படுகிறது. அவற்றை ஆய்வு செய்வது நோக்கமல்ல. அவற்றின் தீர்வுக்காக ஃபிக்ஹ் நூற்களிலிருந்து அதற்கு தோதுவான மஸ்அலாக்களை கூறுவதே நோக்கம்.

                    கம்ப்யூட்டரில் கிராஅத்.
கேஸட் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் ஸஜ்தாவுடைய ஆயத் ஓதும் போது ஸஜ்தா செய்யவேண்டியதில்லை. அத்துர்ருல் முக்தார் 2/108. ( ரத்து - உடன் உள்ளதி ) ல்.   "எதிரொலி மூலம் கேட்டால் ஸஜ்தா அவசியமில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
டேப், கம்ப்யூட்டரின் கிராஅத்தும் இவ்வாறே ஓதியவரின் சப்தத்தை வாங்கி திருப்புகிறது. மஹல்லி 1/207.  (ஷாபி ஃபிக்ஹ் )யில் பறவை  ( கிளி ) ஓதுவதினால் ஸஜ்தா செய்யத் தேவையில்லை. என்று கூறப்பட்டுள்ளது. கிளியை போலவே கேஸட்டும் ஓதியதை கேட்டு ஓதுகிறது. "நான் ஓதுகிறேன்" என்ற எண்ணமே அதற்கு இருக்காது.

                      கிட்னி திருடினால்

ஒரு மனிதனுக்கு இரண்டு கிட்னிகள் இருந்தும் ஒன்று மட்டுமே வேலை செய்யும். மற்றொன்றை அகற்றி விட்டாலும் எந்த மாற்றமும் தெரியாது. இதை சந்தர்ப்பமாக கருதி சில மருத்துவர்கள் "அறுவை சிகிட்சை செய்கிறேன்" என்று சொல்லி ஒரு கிட்னியை எடுத்து விற்று, பணம் சம்பாதிக்கின்றனர். இப்படி கிட்னி திருடியவனுக்கு என்ன தண்டனை..?  கையை வெட்ட வேண்டுமா என்றால்...
மஹல்லி 4/187.ல் "திருடப்பட்ட பொருள் விலை பொருளாக இருக்க வேண்டும் உயிருள்ளவற்றின் ( மனிதன் உட்பட ) ஒரு பகுதியை திருடி விட்டால் கை வெட்டப்படாது. ஏனெனில் அதுவிலை பொருளல்ல. மருத்துவர்கள் அதை விற்பதினால் அது விலை பொருளாகி விடாது. அது தவறான செயல். என்று கூறப்பட்டுள்ளது. எனவே கிட்னி திருடியவனின் கையை வெட்டமுடியாது என்றாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

               குழாய்க் குழந்தை ( டெஸ்ட் டியூப் பேபி )
ஆணின் விந்தையும் பெண்ணின் சினை முட்டையையும் கண்ணாடி தட்டுகளில் இணைத்து கருத்தரிக்க வைப்பது சோதனைக்குழாய் குழந்தை. இம்முறை 1978.ல் வெற்றி பெற்றது.
இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியவில்லையானால், விந்துவும் முட்டையும் கணவன் மனைவியுடையதாக இருந்தால் கூடும். இல்லையானால் அது விபச்சாரத்தை போல, விபச்சாரம் ஹராம் என்பது தெள்ளத் தெளிவு. ஒரு குழந்தைக்கு தாய் தந்தை மூலம் கிடைக்கும் உரிமை சட்டம் வருவதற்கு அது "இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க வேண்டும்" என்ற அவசியமில்லை. மேலும் குழாய்குழந்தை மற்ற குழந்தையை போல தன்னுடைய தாய் தந்தையிடம் வம்சம் மற்றும் வாரிசுரிமை சட்டம் ஏற்படுவதற்கும் இயற்கையான உறவு அவசியமில்லை.என்பதை கீழ்வரும் வாசகம் விளக்குகிறது.
இப்னு நுஜைம். மிஸ்ரி (ரஹ்) அவர்கள் அல்பஹ்ருர்ராயிக் 4/452.ல் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் ஒரு கூற்றை "அல் - முஹீத்" என்ற கிதாபில் எடுத்து எழுதப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.
அதாவது ஒருவன் தநது அடிமைப் பெண்ணுடன் (பிறப்பு உறுப்புக்கு கீழே) உறவு கொள்கிறான். அவனிடமிருந்து வெளிப்படும் விந்தை அவள் தனியாக எடுத்து வைத்து பிறகு தனது கருவறைக்குள் செலுத்தி அதன் மூலம் குழந்தை பிறந்து விட்டால் அந்த பெண் உம்முவலதாக (உரிமையானவளைப் போல்) ஆகிவிடுவாள்.

                                            உறுப்பு மாற்றம். :

1954.ல் ஆரம்பமான உறுப்பு மாற்றம் இன்று உச்சகட்டத்தை நோக்கி செல்கிறது. இதுபற்றியும் ஃபிக்ஹ் நூற்களில் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முன்,
1.        மனிதனை தவிர மற்ற மரணித்த
       விலங்குகள் அனைத்தும் நஜீஸ் அசுத்தம்.

2.  மனிதன் எந்த நிலையிலும் நஜீஸ் ஆகமாட்டான். ஏனெனில் அவன்       
  மாண்புமிக்கவன். சங்கையானவன் எனவே அவன் எந்த வகையிலும் இழிவு    
  படுத்தப்பட மாட்டான்.

3.       உண்ண ஹலாலான மிருகத்தை ஷரீஅத் முறைப்படி  
  அறுக்கப்பட்டிருந்தால் அதுவும் சுத்தமாகாது. இம்மூன்று விசயத்தையும்
   மனதிற்கொண்டு இப்போது ஃபிக்ஹ் கிதாபுகளின் வாசகங்களை
   பார்க்கலாம்.
 மஹல்லி 1/182. ( ஷாபியீ ஃபிக்ஹ் ) ல்    "ஒருவனுக்கு எலும்பு முறிந்து விட்டால் சுத்தமான எலும்பு கிடைக்காத பட்சத்தில் நஜீஸான எலும்பை இணைக்கலாம். பிறகு சுத்தமான எலும்பு கிடைத்து விட்டால் இணைக்கப்பட்ட அசுத்தமான எலும்பை அகற்றுவதன் மூலம் ( தயம்மத்தை ஆகுமாக்க கூடியவை - அதாவது தண்ணீர் கொண்டு கழுவும் போது ஒரு உறுப்பு செயலை இழந்து விடுதல் அல்லது உறுப்பே அழிந்து விடுதல் அல்லது உறுப்பில் விகாரமான குறை ஏற்படுதல் ) இது போன்ற ஆபத்து இல்லையானால் அகற்றி விட வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.
ஷெய்க் அஹ்மது ப்னு காஸிமில் அப்பாதி (ரஹ்) அவர்கள் துஹ்பதுல் முஹ்தாஜ் (ஷாபி சட்ட நூல் ) (2/126) ன் ஹாஷியா (ஓரக் குறிப்பில்) மேற்கூறப்பட்ட நஜீஸான எலும்பு கிடைக்கவில்லையெனில் அல்லது அதன் மூலம் சுகம் கிடைக்கவில்லையானால் இறந்த மனிதனின் எலும்பை இணைக்கலாம். என்று கூறியுள்ளார்கள்.
ஷெய்க் அப்துல் ஹமீது ஷர்வான் (ரஹ்) அவர்கள் துஹ்ஃபத்துல் முஹ்தாஜ் (2/125) ன் (ஓரக்குறிப்பில்)  "தன்னுடைய உடலில் ஏற்பட்ட எலும்பு முறிவை தன்னுடைய உடலிலிருந்தே சீர் செய்ய முடிந்தால் அது கூடும்." என்று புல்கீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாக சொல்லியுள்ளார்கள்.

                    மனித உறுப்பு மாற்றம்.
இவையனைத்தும் எலும்பு முறிவு சம்பந்தமாகவே கூறப்பட்டுள்ளது. எனினும் "உறுப்பு பயனிழந்து விடும் என்றிருந்தால் நஜீஸான மற்றும் மனிதனுடைய பாகத்தை உபயோகப்படுத்தலாம்." என்றிருக்கும் போது பயனிழந்து விட்ட ஒரு உறுப்பை அவைகள் மூலம் சீர் செய்ய முடிந்தால் அதுவும் கூடும் என்றே சொல்ல வேண்டும். ஃபிக்ஹ் கிதாபில் இதற்கு ஒரு உதாரணம் கூறப்பட்டுள்ளது.
மஹல்லி 1/49. (ஷாபி ஃபிக்ஹ்) உடைய ஓரக்குறிப்பில் "மற்றொருவனுடைய கையை துண்டித்து இரத்தத்தின் சூட்டோடு தன்னுடைய கையின் இடத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் அக்கையை அகற்றுவதில் (மேற்கூறப்பட்ட) தொல்லை இருந்தால் (ஒளு செய்யும் போது) அக்கையை கழுவுதல் கட்டாயம்." என்று கூறப்பட்டுள்ளது. எனவே மேற்கூறப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் (இறந்த) மனிதனின் உறுப்பையும் மாற்றுவது கூடும்.
அவ்வாறே தற்காலத்திலும் நஜீ(ஸல்)லாத சுத்தமான உறுப்புகளை பொருத்துவதாக இருந்தால் அதையே கையாள வேண்டும். அப்படிப்பட்ட உறுப்புகள் கிடைக்கவில்லையானால் அல்லது அவற்றின் மூலம் நோக்கம் நிறைவேறாது நமக்கு தொல்லை தரும் என்றிருந்தால் நஜீஸான (இறந்த மிருகங்களின்) உறுப்புகளையும் பொருத்தலாம். ஆனால் தற்காலத்தில் மிருக உறுப்பு மாற்றம் முழுமையாக வெற்றி பெறவில்லை. அப்படி மாற்றுவதினால் அந்த மிருகத்திடம் உள்ள கிருமி, உறுப்பு மாற்றப்பட்ட மனிதனிடம் வந்து விடுகிறது.  HIV  குரங்கிடம் இருக்கும் போது அதற்கு எந்த தொந்தரவும் இல்லை. அது மனிதனிடம் வரும் போது அவனையே அழிக்க முற்படுகிறது. உறுப்பு மாற்றப்பட்ட மனிதனிடம் நுழைந்த கிருமி மற்றவர்களுக்கும் பரவுகிறது. எனவே "இது போன்ற" உறுப்பு மாற்றம் குறிப்பிட்ட மனிதனை மட்டுமல்ல, சமூகத்தையே பாதிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

இப்படிப்பட்ட நிலை இருக்குமானால் மனித உறுப்பை தவிர வேறு வழியில்லை.

தற்காலத்தில் திசு பொறியாளர்கள் (Tissue Engineers)  "திசு இட்டுக்கட்டல்" என்ற முறையில் செயற்கை (வெளி) உறுப்புகளை தயாரிக்கின்றனர். அதாவது ஒருவருக்கு காதோ, மூக்கோ இல்லையானால் அவருடைய திசுவை எடுத்து காது அல்லது மூக்கு போல செய்யப்பட்ட ஒரு ஸ்பான்ச் பொம்மை மீது வைக்கப்படுகிறது. பிறகு ஒரு சில வாரங்களில் திசுக்கள் வளர்ந்து மூக்கு அல்லது காது போல் உருவாகிவிடும். இது அசல் மூக்கு போலவே இருக்கும்.

மேற்கூறப்பட்ட ஃபிக்ஹ் நூலின் வாசகத்திலிருந்து "தன்னுடைய திசுவின் மூலம் வளர்ந்த உறுப்பை பொருத்திக் கொள்வது கூடும்." என்று தெரிகிறது. ஆனால் இதுவரை வெளி உறுப்புகள் அவ்வாறு செய்யப்படவில்லை. "திசுக்கள் எப்படி உறுப்புக்களாகின்றன." என்ற சூட்சமம் தெரிந்து விட்டால் பின் நுரையீரல், கல்லீரல் ஆகியவை கண்ணாடி பாட்டில்களிலேயே உருவாக்கப்பட்டு விடும். என்று ஆய்வுகள் கூறுகின்றன. அப்படி உருவாக்கப்பட்டு விட்டால் இறந்த மற்றவரின் உறுப்பை விட தன்னுடைய உறுப்பையே முற்படுத்த வேண்டும்.

இம்முறையில் "ஒருவர் உயிரோடு இருக்கும் போது அவருடைய றுப்பை அகற்றக் கூடாது" என்றே ஃபிக்ஹ் கிதாபுகளில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் தன்னுடைய கஷ்டத்தை நீக்குவதற்காக மற்றொருவரை கஷ்டப்படுத்தக் கூடாது. எனினும் தற்கால உலமாக்கள் இப்படி மாற்றுவதில் உறுப்பை கொடுப்பவர்களுக்கு அதன் மூலம் தொல்லை ஏற்படும் பட்சத்தில் தான் அது தடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சிறுநீரகத்தை கொடுப்பதினால் என்த தீங்கும் ஏற்படுவதில்லை. எனவே "கூடும்" என்று கூறியுள்ளனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஹனபி மத்ஹபின் ஃபத்வா நூலாகிய "ஃபதாவா ஹிந்திய்யா" விலும் (4/354) எலும்பு முறிவு சமயத்தில் நஜீ(ஸல்)லாத சுத்தமான வஸ்துவைக் கொண்டு சிகிட்சை செய்யலாம். "மனிதனை இழிவு படுத்தக்கூடாது" என்ற காரணத்தினால் அவனுடைய பாகங்களை உபயோகப்படுத்தக்கூடாது. என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மௌலானா காலித் ஸைபுல்லாஹ் (ரஹ்)மானி போன்ற தற்கால ஹனபி உலமாக்கள்.) "இழிவு படுத்துதல்" என்பது செய்யும் நோக்கம் மற்றும் காலத்தின் சூழ்நிலைக்கு தகுந்தபடி மாறுபடும். இங்கு மய்யித்தை - இறந்தவரை இழிவுபடுத்துவதற்காக உறுப்பை எடுக்கவில்லை. மாறாக அவரை சங்கைபடுத்துவதற்காக இறந்தும் வாழ்வளிக்கிறார் என்ற வகையில் இப்படி செய்வது கண்ணியமாகவே கருதப்படுகிறது.

எனவே "அவசியமான நேரத்தில் உறுப்பு மாற்றம் செய்வது தவறில்லை" என்று கூறியுள்ளார்கள். இது தவிர "இறந்து விட்ட பெண்ணின் வயிற்றில் குழந்தை உயிரோடு இருக்கிறது என்று கருதினால் குழந்தையை பாதுகாப்பதற்காக மய்யித்தான பெண்ணின் வயிற்றை அறுப்பது கூடும்." என்று ஃபிக்ஹ் நூற்களில் கூறப்பட்டுள்ளது. இது அப்பெண்ணை இழிவுபடுத்துவதாக கருத முடியாது.

                           இரத்தம் ஏற்றுதல்.
இமாம் நவவி (ரஹ்) ரவ்ளத்துத் தாலிபீன் ( ஷாபியீ ஃபிக்ஹ் ) 1/381-ல் ( மேலே உறுப்பு மாற்றத்திற்காக கூறப்பட்ட காரணத்திற்காக ) தன்னுடைய உடம்பின் ஒரு இடத்தை பிளந்து அவ்விடத்தில் இரத்ததை வைக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.

ஃபதாவா ஹிந்திய்யா ( ஹனபி ஃபிக்ஹ்-4/355) விலும் "நோய் குணமாகும் என்று  ( நம்பத்தகுந்த திறமையான டாக்டர்) உறுதியாக கருதினால் இரத்ததை கொண்டு சிகிச்சை செய்யலாம்." என்று கூறப்பட்டுள்ளது.
நஜீஸான எலும்பை இணைப்பதில் கூறப்பட்டது போல் சுகமானபின் அந்த ரத்தத்தை வெளியாக்குவது அவசியமா...? ஹனபி மத்ஹபில் (ரத்துல் முக்தார் 1/330) "உடலோடு கலந்து விட்ட நஜீஸை வெளியாக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

ஷாபியீ மத்ஹபில் எந்த தொல்லையும் இல்லையானால் வெளியாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "இது அந்த இரத்தம் அப்படியே இருக்கிறது" என்ற நிலையில் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்றப்பட்ட இரத்தம் தனியாக பிரித்தறிய முடியாதவாறு கலந்து விடுகிறது. சில நாட்களில் புதிய இரத்தம் உண்டாகி விடுகிறது. எனவே ஹனபி மத்ஹபை போலவே வெளியேற்றத் தேவையில்லை என்றே சொல்ல வேண்டும். (அல்லாஹ் மிக அறிந்தவன்.) எனினும் உடலுக்கு ஆபத்து இல்லாத போது ஏற்றிய அளவுக்கு இரத்தத்தை வெளியாக்கி விட்டால் அது பேணுதல்.

(குறிப்பு ஃபிக்ஹ் கிதாபு வாசகங்கள் அப்படியே மொழிப் பெயர்க்கப்படவில்லை. கருத்தையே நோக்கமாக கொள்ளப்பட்டது.)
தற்கால பிரச்சனைகளுக்கு இவ்வளவு தெளிவாக ஃபிக்ஹ் கிதாபுகளில் தீர்வு கிடைக்கும் போது இந்த கிதாபுகளையும் இதன் ஆசிரியர்களான ஃபுகஹாக்களையும் இமாம்களையும் கீழ்தரமாக விமர்சிப்பது அவர்களின் அறியாமை மட்டுமல்ல காழ்ப்புணர்ச்சியும் காரணம். அல்லாஹ் மன்னிப்பானாக..! பாதுகாப்பானாக...!

                       கடைசி வார்த்தை
இவை சில உதாரணங்கள் தான். அனைத்து நவீன பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் தீர்வு கூறியுள்ளது. ஆனால் வெளிப்படையாக கூறவில்லை. "வெளிப்படையாக கூற இயலாது." என்ற காரணத்தால் அல்ல. நபி (ஸல்) அவர்கள் மூலம் கியாமத் நாளினுடைய அடையாளங்களெல்லாம் தெள்ளத் தெளிவாக முன்னறிவிப்புச் செய்த அல்லாஹ்வுக்கு இதையெல்லாம் கூற முடியாதா..?  நிச்சயம் முடியும். எனினும் அவற்றை மறைமுகமாக கூறுவதில் அல்லாஹ்வுக்கு "ஹிகமத்" இல்லாமலில்லை.
"லைலத்துல் கத்ரை" மறைத்து வைத்தான் ஏன்..அதை தேடிப் பெறுவதினால் அதிகமான இபாதத்தும் செய்ய முடியும். தேடியதற்கு நன்மையும் கிடைக்கும். அவ்வாறே நவீன மஸ்அலாக்களும் அதன் தீர்வு மறைமுகமாக சொல்லப்பட்டதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஆக ஒவ்வொரு நவீன பிரச்சனைக்கும் இஸ்லாம் தரும் தீர்வு
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;  (5 : 3 )

என்ற இறை வசனத்தின் மீதுள்ள ஈமானை மெருகூட்டவே செய்யும். அதுவே வாழ்க்கையின் இலட்சியம்.

1 comment:

  1. மாஷா அல்லாஹ் பயனுள்ள குறிப்புகள். அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் கல்வியில் அபிவிருத்தி செய்வாயாக ஆமீன்

    ReplyDelete