Tuesday 29 December 2015

அல்குர்ஆன் ஓர் அற்புதம்


அரபியில் "முஃஜிஸா" என்றால் "மற்றவர்களை இயலாதவர்களாக்கும் காரியம்." என்று பொருள். அதைத்தான் தமிழில் "அற்புதம்" என்று கூறுகிறோம். முந்தய நபிமார்கள் செய்த அற்புதத்தை வெல்லுகிற செயலை மற்றவர்களால் செய்ய இயலவில்லை. எனவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எதிரிகள், "நீங்கள் நபி என்றால் முன்னர் இருந்த நபிமார்கள் காட்டிய அற்புத செயல்களை - முஃஜிஸாக்களை நீங்களும் காட்டுங்கள்." என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு அல்லாஹ் பின் வருமாறு பதிலளித்தான்.

وَقَالُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَاتٌ مِّن رَّبِّهِ ۖ قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ
29:50. “அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்என்று (நபியே!) நீர் கூறுவீராக.

أَوَلَمْ يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَىٰ عَلَيْهِمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَرَحْمَةً وَذِكْرَىٰ لِقَوْمٍ يُؤْمِنُونَ
29:51. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும் இவ்வேதத்தை நாம் உம் மீது இறக்கியிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் போதாதா? நிச்சயமாக அ(வ் வேதத்)தில் (ரஹ்)மத்தும், ஈமான் கொண்ட சமூகத்தாருக்கு (நினைவூட்டும்) நல்லுபதேசமும் இருக்கின்றன.

முன்னர் வாழ்ந்த நபிமார்கள் முஃஜிஸாக்களை - அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். அவர்களுக்கு பின்னால் அடுத்தடுத்து நபிமார்கள் வந்ததால் அவர்கள் காட்டிய  அற்புதங்கள் எல்லாம் தற்காலிகமானவையாகவே இருந்தன. ஆனால் அண்ணல் நபி (ஸல்) இறுதி நபியாக இருந்ததால் இனி எவரும் நபியாக வரப்போவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற அற்புதம் முஃஜிஸா இறுதி நாள் வரை நிரந்தரமாக இருக்க கூடிய பேரற்புதமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. எனவே அத்தகைய பேரற்புதமாக இறுதிநாள் வரை  அற்புதமாகவே திகழக் கூடிய குர்ஆனை அல்லாஹ் அருளினான்.

وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ
2:23. இன்னும், (முஹம்மது ((ஸல்)) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

மேற்கூறிய வசனத்தைப் படிக்கும் பொழுது அவரை அறியாமலேயே அவரது உடலில் மின் அதிர்ச்சி ஏற்படுவதை உணர்வார். காரணம் உலகில் இதுவரை எழுதப்பட்ட எந்த நூலும் எந்த நூலாசிரியரும்  இப்படிப்பட்ட ஒரு சவாலை - அறை கூவலை மனித இனத்துக்கு முன் வைத்ததில்லை. இந்த அறை கூவல் இதுவரை, பதினான்கு நூற்றாண்டுகளாக உலகின் முன் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்று வரை இந்த சவால் எவராலும் எதிர் கொள்ளப்படவில்லை. குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்த அறிவிப்பு திரும்ப திரும்ப இடம் பெற்றுள்ளது.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் ஐயமிருந்தால் - இது மனிதரால் இயற்றப்பட்ட நூல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவர்கள் இந்த வேதத்தைப் போன்று ஓர் அத்தியாயத்தையாவது கொண்டு வரட்டும். என்ற அறை கூவல் இன்னும் நம் முன் உள்ளது.

இது போன்று மனிதனை திகைப்பில் ஆழ்த்தக் கூடிய ஓர் அறைக்கூவல் விடுவதற்கு எந்த நூலாசிரியரும் துணிவு கொள்ள மாட்டார். ஏனெனில் ஒரு மனிதன் எழுதுகின்ற நூலைப் போல் இன்னொரு மனிதர் இயற்றி விட முடியும். எனவே மனித மூளை இது போன்ற ஒரு நூலை இயற்றி விட முடியாது. முடிந்தால் இயற்றட்டும் பார்க்கலாம். என்ற குர்ஆனின் இந்த அறைகூவலும், இந்த அறைகூவலிடப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இது போன்ற ஒரு நூலை எந்த மனிதனாலும் இயற்ற முடியவில்லை என்ற நிலையும் குர்ஆன் மனிதனால் இயற்றப்பட்டது அல்ல என்ற உண்மையைத் திட்டவட்டமாக வலியுறுத்துகின்றது.

இது மனிதனிடமிருந்து அல்ல, இறை ஊற்றிலிருந்து வெளிப்பட்ட வேதம். இறைவனிடமிருந்து எது வந்ததோ அதற்கு மனிதனால் விடை சொல்ல முடியாது.

குர்ஆன் பல்வேறு வழிகளில் பல்வேறு துறைகளில் தன்னுடைய அற்புத முத்திரையைப் பதித்திருக்கிறது. இலக்கியத்தில் குர்ஆனின் மொழி உயிர் வாழும் மொழியாக நிலை பெற்று இருப்பதில், அருளப்பெற்ற போது இருந்ததில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இன்று வரை பாதுகாப்பாக இருப்பதில் அதன் அறைகூவலை எவராலும் எதிர் கொள்ள முடியவில்லை என்பதில், அது கூறியுள்ள அறிவியல் நுட்பங்களை அறிந்து கொள்கின்ற அளவிற்கு அறிவியலில் இன்னும் வளர்ச்சி ஏற்பட வேண்டியதிருக்கிறது என்பதில் இப்படியும் - இன்னும் பல வகைகளிலும் குர்ஆன் தன்னுடைய அற்புதத்தை அற்புத முத்திரைகளை பதித்திருக்கிறது. இன்னும் பதித்துக் கொண்டே தான் இருக்கும் என்பது தான் உண்மை.
இதுவரை உலகில் யாருமே இப்படி ஒர் அறைகூவலை விடுத்ததே இல்லை. ஆனால் இந்த சவாலை எவரேனும் ஏற்றுக் கொண்டது உண்டா...?  எனப்பார்த்தால் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்த சவாலை ஒருவர் ஏற்றுக் கொண்டார் என வரலாறு கூறுகிறது.

ஆம்.  அரபு உலகிலே தனது ஆற்றல் மிகு கவிதைகளாலும், வீறு கொண்ட உணர்வுகளாலும் புகழ் பெற்றல் லபீத் என்பார் இதை ஏற்று போட்டியிட முன் வந்தார். அரபு நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கவிதை வெள்ளம் கரைபுரண்டு கொண்டிருந்த காலத்தில் கஃபாவில் தொங்கவிடப்படுகின்ற கவிதைகளுக்குத் தனிபுகழ் இருந்தது. மிகச் சிறந்த கவிதைக்கு மட்டுமே அந்த மரியாதை கிடைத்தது. எழுவர் கவிதைகளே அத்தகைய சிறப்பை பெற்றிருந்தன. ஏழு தொங்கல் கவிதைகள் (ஸப்அ முஅல்லகாத்.) என்பவை அரபு இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவையாகும்.

அந்த எழுவரில் ஒருவர் தான் இந்த லபீத். லபீத் ஒரு கவிதை எழுதி கஃபாவின் வாயிலில் தொங்கவிட்டார். இவ்வாறு அவர் தொங்கவிட்ட நிகழ்ச்சி நடந்த உடனே முஸ்லிம் ஒருவர் குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயத்தை எழுதி அதற்கு அருகிலேயே மாட்டி வைத்தார். இஸ்ஸாத்தை அது வரை ஏற்றுக் கொள்ளாதிருந்த கவிஞர் லபீத் மறுநாள் கஃபா ஆலயத்தின் வாயில் அருகே வந்தார். திருக்குர்ஆன் அத்தியாயத்தை வாசித்தார். அத்தியாயத்தி ஆரம்ப வரிகளிலேயே அவர் அசாதாரண முறையில் ஒருவித மாறுதலுக்கு ஆளானார்.

இவை மனிதனின் வார்த்தைகளே அல்ல. இவை இறைவசனங்கள் தாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று உரத்துக் கூறினார். ( MOHAMED THE HOLY PROPHET BY H.G SARWAR, P.448 )   அரபு உலகின் ஒர் ஒப்பற்ற கவிஞர் இவர். திருக்குர்ஆனின் இலக்கிய நடையால் மிகப்பெரிய அளவில் ஆட்கொள்ளப்பட்ட இவர் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டார்.

பின்னர் ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் இந்த கவிஞரிடம் கவிதை வேண்டிய போது லபீத் (ரலி) பின்வருமாறு பதிலளித்தார்கள்.
"அல்பகரா மற்றும் ஆல இம்ரான் போன்ற அத்தியாயங்களை அல்லாஹ் எனக்கு வழங்கியிருக்கும் போது கவிதையை தொடுவதே எனக்கு அழகல்ல."

பிற்காலத்தில் இன்னொருவர் இதை ஏற்றார். இப்னுல் முகப்பஉ என்பார் இந்தச் சவாலை ஏற்க முன் வந்தார். இவரைப் பற்றிய பிரபல கீழைக் கல்வியாளர் ஓல்ஆடன் என்பவர் வியப்புடன் குர்ஆன் ஒர் அற்புதம் என்பதைப் பற்றி முஹம்மது நபி பெருமிதத்தோடு கூறுவது உண்மைதான். பொய்யல்ல. இந்த உண்மையை இஸ்லாம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று உறுதிபடுத்துகிறது என்று எழுதுகின்றார்.

அந்த நிகழ்ச்சி இது தான். மதங்களையே மறுக்கும் ஒரு குழுவினர் குர்ஆன் வெகு வேகமாக தன் ஈர்ப்பதையும் அதனால் மக்கள் இஸ்லாத்தை தழுவதையும் கண்டு குர்ஆனின் சவாலை ஏற்று அதற்கு எதிராக ஒரு வேதத்தை உருவாக்க தீர்மானித்தார்கள்.  இந்த நோக்கத்திற்காக அவர்கள் இப்னு முகஃப்பஉ தங்கியிருந்த அறைக்குச் சென்றார்கள். அவர் உட்கார்ந்திருந்தார் அவரது கையில் பேனா இருந்தது. ஆழ்ந்த வாசிப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே ஒரு கூடை இருந்தது. எழுதி, எழுதி கிழிக்கப்பட்ட காகிதங்கள் பெரும் குவியலாக அதில் கிடந்தன. அங்கு மட்டுமல்ல அறை முழுவதுமே அத்தகைய குவியல்கள் காணப்பட்டன.

அவை வெறும் தாள்கள் ஒரு வரி கூட அதில் எழுதப்படவில்லை. அளவு கடந்த திறமையுடைய மிகச் சிறந்த மொழி அறிவு படைத்த அந்த ஈரான் நாட்டு மேதை தன்னுடைய எல்லா சக்திகளையும் பிரயோகித்து குர்ஆனுக்கு எதிராக ஒரு நூலை எழுதுகின்ற தமது முயற்சியில் ஈடுபட்டு ஒரு வரி கூட எழுத முடியாமல் தோற்றுப் போய் உட்கார்ந்திருந்தார். அவர் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொண்டார் ஒரு வரி எழுத முயன்று ஆறு மாதங்கள் ஆகியும் அவரால் எழுத முடியவில்லை. அவர் நம்பிக்கை இழந்து வெட்கமுற்று அந்த பணியை விட்டே ஒதுங்கிக் கொண்டார்.
(MOHAMED, HIS LIFE AND DOCTRINES BY WOLLATON. P.143 )

குர்ஆனின் சவால் அறை கூவல் இன்னும் இருந்து கொண்டே தானிருக்கிறது. நூற்றாண்டுக்கு மேல் நூற்றாண்டுகள் கடந்து சென்றும் இதுவரை அந்த சவாலுக்கு பதிலளிக்க எவரும் முன் வரவில்லை. இது குர்ஆனுக்கு மட்டுமே உள்ள, மனிதனை திகைக்க வைக்கிற தனித்தன்மையாகும். இந்த தனிச் சிறப்புத்தான்  இது மனிதனின் வார்த்தைகளல்ல. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒருவனின் வார்த்தைகள் - இறைவாக்குகள் என்பதை நிருபிக்கின்றது. மனிதனின் அகத்தில் சிந்திக்கும் திறன் உண்மையிலேயே இருந்தால் இந்த நிகழ்ச்சியே அவர் ஈமான் கொள்வதற்கு போதுமானதாகும்.

குர்ஆனின் இந்த அற்புதமான முஃஜிஸாவான வசனங்களால் அரபு உலகில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.அரபு மக்கள் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய இலக்கியத்தில் தங்களுக்கு நிகர் யாருமில்லை என இறுமாந்திருந்தனர். தங்களுடைய மொழியறிவு மிகமிக உயர்ந்தது என்ற உயர்வு மனப்பான்மை அவர்களில் மிதமிஞசி இருந்தது. அதனால் தான் தங்களைத் தவிர உலகிலுள்ள மற்றவர்கள் அனைவருமே ஊமைகள் என்று அவர்கள் நம்பியது மட்டுமின்றி வெளிப்படையாகவே அவர்களை அஜமிகள் ஊமைகள் என்று சொல்லவும் செய்தனர்.

ஆனால் அந்த உயர்ந்த இலக்கியவாதிகளோ குர்ஆனுடைய இலக்கியத்திற்கு முன்னால் மண்டியிட வேண்டிய நிற்பந்ததிற்கு ஆளானார்கள். அரபு மக்கள் அனைவருமே குர்ஆனின் உயர்ந்த இலக்கியத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமலாகி விட்டது.

ளம்மாது அஜ்தி என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் முஸ்லிமல்ல அவரிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்டவுடன் அவர் திகைத்து திகைத்தபடியே நின்று விட்டார். அவரை அறியாமலேயே அவருடைய நாவிலிருந்து "அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சோதிடர்களின் அடுக்குச் சொற்களையும் மந்திரவாதிகளின் ராகம் மிகுந்த மந்திரங்களையும் கவிஞர்களின் பாடல்களையும் செவிமடுத்துள்ளேன். ஆனால் உங்களுடைய வார்த்தைகள் -  அவை தனித் தன்மையுடையவைகளாக இருக்கின்றன. இவை சமுத்திரம் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியாக இருக்கின்றன.." என்ற சொற்கள் அவரையறியாமலேயே  வெளிப்பட்டன.

இவை போன்ற ஏராளமான ஏற்பு மொழிகள் ஏராளம் ஏராளம்.
பண்டைக் காலத்தில் மட்டுமல்ல அண்மைக்காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

குர்ஆன் கூறியுள்ள முன்னறிவுப்புகள் பல. இந்த முன்னறிவுப்புகள் எல்லாமே பிரமிக்கத்தக்க அளவிற்கு மிகச்சரியாக மிகத்துல்லியமாக நடந்து முடிந்திருக்கின்றன. ஆனால் வரலாற்றில் நாம் பல மனிதர்களை காண்கிறோம். அவர்கள் தங்களது மதியினால் தங்களைப் பற்றியோ பிறரைப் பற்றியோ துணிந்து சில முன்னறிவுப்புகளை வெளியிடுவார்கள். ஆனால் காலம் இவர்களோடு ஒத்துப் போனதில்லை என்பது வெளிப்படை. சாதகமான சில சூழ்நிலைகள் அவர்களுடைய திறமைகள் மிகுதியான படைபலம் நண்பர்கள் மிகப்பெரிய எண்ணிக்கை ஆரம்ப கால வெற்றிகள் ஆகிவற்றை காணுகின்ற மனிதன் இவையனைத்தும் இவனுடைய குறிக்கோளை நிறைவேற்றும் வகையிலேயே அமைந்திருப்பதாக கருதுகிறான். உடனே அவன் தனது முன்னறிவிப்பின் படி உறுதியானதொரு முடிவு எட்டிவிட்டதாக விவாதமே புரிய ஆரம்பித்து விடுகிறான். ஆனால் இறுதியில் வரலாறு எப்போதுமே இப்படிப்பட்ட இறுமாப்பான வாதங்களையெல்லாம் முறியடித்தே வந்திருக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது.

இதற்கு மாறாக ஆதரவே இல்லாத - நம்ப முடியாத சூழ்நிலையில் கூட குர்ஆனின் முன்னறிவுப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக நிகழ்ந்துள்ளன. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மனிதனின் அனுபவத்தைக் கொண்டு அதை புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்றாகும். எனவே இவை மனிதனின்  வார்த்தைகளல்ல இறைவனின் வார்த்தைகளே என ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நெப்போலியன் போனபாட் மிகப்பெரிய படைத்தளபதி அவனது ஆரம்ப கால வெற்றிகள், மகா அலெக்ஸாண்டர், சீசர் ஆகியோரை விட மிகப்பெரிய வெற்றி விரனாக திகழ்வான் என்பதைக் காட்டின. இந்த வெற்றிகள் நெப்போலியனின் மனதில் நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின அதனால், முடியாது என்ற வார்த்தையே எனது அகராதியில் கிடையாது என்றான். அதனால் தனது நெருக்கமான சகாக்களின் ஆலோனையைக் கேட்ப்பதையே கூட விட்டு விட்டான். முழு வெற்றியைத் தவிர எனக்கு வேறு முடிவு இருக்க முடியாது எனச் சொல்லத்துவங்கினான்.

ஆனால் அவனுக்கு ஏற்பட்ட என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். வாட்டர்லூ சண்டையில் பரிதாபமாக தோற்றுப் போனான். அமெரிக்காவுக்கு தப்பியோடும் முயற்சியிலும் தோற்றுப் போய் பிரிட்டிஸ் வீரர்களால் கைது செய்யப்பட்டான். நாடு கடத்தப்பட்ட அவன் செயின்ட் ஹெலீனா தீவில் தனிமைச் சிறையில் வாடி இறுதியில் இறந்து போனான்.

கம்யூனிஸத்தின் பிரபல "மேனிஃபாஸ்டோ கொள்கை விளக்க அறிவிப்பு" 1840-ல் வெளியானது. கம்யூனிஸப்புரட்சி முதன்முதலில் ஜெர்மனியில் தான் ஏற்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கம்யூனிஸம் தோன்றி 120 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அந்த புரட்சியைப் பற்றி ஜெர்மனி அறியாத நிலையில் தான் இன்றும் உள்ளது. 1849-ல் காரல்மார்கஸ் எழுதினார். சிவப்பு ஜனநாயகம் பாரிசின் மேல் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த "தீர்க்க தரிசனம்" சொல்லப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று வரை அங்கு சிகப்பு சூரியன் உதிக்க வழியில்லை.

அடல்ப் ஹிட்லர் தனது புகழ்மிக்க மியூனிச் சொற்பொழிவின் போது நான் முழு நம்பிக்கையோடு எனது வழியில் நடந்து கொண்டே இருக்கிறேன். வெற்றி எனது விதியில் எழுதப்பட்டு விட்டது என்றான். ஆனால் அவனது விதியில் மாபெரும் தோல்வியும் தற்கொலையும் தான் எழுதப்பட்டிருந்தன என்பதை பிறகு உலகம் தெரிந்து கொண்டது. இப்போது குர்ஆனின் முன்னறிவுப்புகளில் இரண்டை மட்டும் உதாரணத்திற்கு பார்ப்போம். ஒன்று ரோமப் பேரரசின் வெற்றி மற்றொன்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வெற்றி.

ரோமப் பேரரசின் எதிரியாக அன்று திகழ்ந்தது ஈரானியப் பேரரசாகும். இவை இரண்டும் அந்த காலகட்டத்தில் இரு பெரும் வல்லரசாகத் திகழ்ந்தன. ரோமப் பேரரசின் நாகரீகம் பிரசித்தப் பெற்ற ஒன்று ரோம சாமராஜ்யத்தின் வீழ்ச்சியைப் பற்றி எழுதப்பட்டதைப் போல வேறு எதனுடைய சரிவைப் பற்றியும் எழுதப்படவில்லை. ரோமப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலில் எட்வர்டு கிப்பன் அந்த காலகட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.

அப்போது ரோமப் பேரரசு தனது கிழக்கு மற்றும் தென் பகுதியின் எல்லா நடுகளையும் இழந்து கான்ஸ்டாண்டிக் நோபிளின் நான்கு சுவர்களுக்குள்ளே அடைபட்டுக் கிடந்தது. முற்றுகையின் காரணமாக அந்த நகரத்திற்கு வரும் வழிகள் எல்லாமுமே அடைபட்டுக் கிடந்தன. அதனால் நகரில் பஞ்சமும் நோயும் பரவின. தொழில்கள் எல்லாம் முடங்கி விட்டன. எதிரிப் படை எந்த நேரத்திலும் நகரினுள் நுழைந்து விடலாம் என நகர மக்கள் பீதியுடனிருந்தார்கள். இதனால் அங்கிருந்து ஆப்ரிக்காவுக்கு ஓடிவிட ரோமானியத் தளபதி ஹெராக்ளியஸ் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

இதே சமயத்தில் மக்கமா நகரில் ரோமின் வீழ்ச்சியும், ஈரானின் வெற்றியும் பரபரப்பான விசயமாகிக் கொண்டிருந்தது. ஈரானியர்கள் நெருப்பை ஒரு தேவதையாக வழிபட்டவர்கள். ரோமானியரோ வேதக்காரர்கள். ஈரான் - ரோம் போரில் முஸ்லிம்கள், வேதக்காரர்களான ரோமர்களையும், பல தெய்வ வழிபாடு கொண்ட மக்கா நகர முஷ்ரிக்குகள் ஈரானியர்களையும் ஆதரித்தனர். ஈரானின் வெற்றி மக்காவாசிகளை மகிழ்ச்சியிலும், ரோமர்களின் தோல்வி முஸ்லிம்களை கவலையிலும் ஆழ்த்தின.

ரோமர்களை ஆதரித்த முஸ்லிம்களை மக்காவாசிகள் குத்திப் பேசலாயினர். வேதக்காரர்கள் தோற்று, ஈரானியர்கள் வெற்றி பெற்றதைப் போல வேதம் கூறும் நீங்கள் தோற்று விடுவீர்கள் என்று கூறினார்கள். அந்த நேரத்தில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

غُلِبَتِ الرُّومُ

30:2. ரோம் தோல்வியடைந்து விட்டது.
فِي أَدْنَى الْأَرْضِ وَهُم مِّن بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ
30:3. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.
فِي بِضْعِ سِنِينَ ۗ لِلَّهِ الْأَمْرُ مِن قَبْلُ وَمِن بَعْدُ ۚ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ
30:4. சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
بِنَصْرِ اللَّهِ ۚ يَنصُرُ مَن يَشَاءُ ۖ وَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
30:5. அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
وَعْدَ اللَّهِ ۖ لَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
30:6. இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

இந்த முன்னறிவிப்பு முஸ்லிம்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குர்ஆனின் முன்னறிவிப்பு நடந்தே தீரும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மக்காவாசிகள் இந்த முன்னறிவிப்பை ஏளனம் செய்தார்கள். இந்த முன்னறிவிப்பைப் பற்றி கிப்பன் எழுதுகிறார். இந்த முன்னறிவிப்பின் படி நடப்பதற்கு அப்போது எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில் ஹெராக்ளியஸ் ஆட்சி செய்த ஆரம்ப கால பனிரெண்டு ஆண்டுகள் ரோமப் பேரரசின் முடிவுக்கு தான் கட்டியம் கூறிக் கொண்டிருதன.

ஆனால் இது மனிதர்கள் கூறும் முன்னறிவிப்பு அல்ல. குர்ஆனை அருளிய அல்லாஹ்வின் முன்னறிவிப்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பின்னர் என்ன நடந்தது...?  

சில ஆண்டுகளில் போர் ஆயத்தங்களோடு கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து ஹெராக்ளியஸ் படை புறப்பட்ட போது அது தான் ரோமப் பேரரசின் கடைசிப்படை என்ற எண்ணமே மக்களின் மனதில் ஏற்பட்டது. ஆனால் ஈரானிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டை காரணமாக நாலு ஆண்டுகளில் ஒன்பது அரசர்கள் ஆள வேண்டிய சூழ்நிலையில் ரோமப்படையிடம் ஈரான் மிக எளிதாக சரணடைந்தது.

ரோமானியர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். இவ்வாறு மீண்டும் ரோமர்கள் வெற்றி பெறுவார்கள் என்று குர்ஆன் வெளியிட்ட முன்னறிவிப்பு குர்ஆன் குறிப்பிட்ட சில வருடங்களிலேயே ( அதாவது பத்து ஆண்டுக்குள்) முழுமையாக நடந்து முடிந்தது. இதைப்பற்றி கிப்பன் தனது வியப்பை அந்த நூலில் எழுதியுள்ளார்.

அடுத்த முன்னறிவிப்பு நபி (ஸல்) அவர்கள் பெற்ற வெற்றியைப் பற்றியதாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது ஏறக்குறைய அரபகம் முழுவதுமே அண்ணலாருக்கு எதிரியாக மாறிவிட்டது. ஒரு பக்கம் அரபுகளிடம் முழுச்செல்வாக்குப் பெற்றிருந்த மக்காவாசிகளின் எதிர்ப்பு, மறுபுறம் முதலாளித்துவவாதிகளான யூதர்களின் பயங்கர எதிர்ப்பு மற்றொருபுறம் கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருந்த நயவஞ்சக முனாஃபிக்குகளின் ஐந்தாம் படை வேலை இப்படி சக்தி - முதலாளித்துவம் - அந்தரங்கச்சதி என மும்முனைத்தாக்குதல் இதற்கிடையே இஸ்லாம் மிகமிகப்பலவீனமான நிலையில் இருந்து கொண்டிருந்தது.

அன்று இஸலாமியரின் பலம் என்று எடுத்துக் கொண்டால் எந்த உரிமையும் இல்லாத சில அடிமைகள் பரம ஏழைகள், பலவீனர்கள் இவர்கள்தான் இஸ்லாமில் அன்று இருந்தவர்கள். மக்காவாசிகளில் எவராவது இஸ்லாமில் சேர்ந்து விட்டால், சேர்ந்தவரை விட்டு அவரது உறவினர்களே ஒதுங்கிடும் பயங்கர நிலை. இந்த கூட்டத்தார் அன்றாட உணவிற்கே சரியான வழியில்லாதவர்கள். இவர்கள் எந்த நேரத்திலும் நசுக்கப்பட்டு அழித்தொழிக்கப் பட்டுவிடலாம் என்ற சூழ்நிலை. நான்குபுறமும் ஆபத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர்.

يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

61:8. அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

என்ற முன்னறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த முன்னறிவிப்பு வெளியான சில வருடங்களிலேயே உலகமே நம்ப முடியாத அளவுக்கு அரபு நாட்டிலும், அண்டை நாடுகளிலும் மாபெரும் வெற்றி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இந்த வெற்றிக்கு உலகம் காணுகிற வெளிப்படையான காரணம் எதையும் கூறவழியில்லை. கைவிரல் எண்ணிக்கையிலிருந்த எநத வசதி வாய்ப்பும் இல்லாத ஏழைகள் தம்மை விடப் பன்மடங்கு அதிக எண்ணிக்கையில் வசதியில் சக்தியில் பெருளாதாரத்தில் ஆயுதபலத்தில் மிகைத்திருந்தவர்களை எப்படி வென்றார்கள்.

இதைப்பற்றி J.W.H  ஸ்டோபர்ட் பின் வருமாறு குறிப்பிடுகிறார். மிகமிக்க் குறைந்த சாதனங்களே கொண்டிருந்த நபிகள் நாயகம் எவராலும் சாதிக்க முடியாத மிகப்பரந்த பெரிய சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். இந்த வகையில் பார்த்தால் முழு மனித வரலாற்றிலும் இவ்வளவு உயர்ந்த அளவில் குறிப்பிடத்தக்க முறையில் ஒளிரும் பெயர் இவர்களுடையதைத் தவிர வேறு எவருடைய பெயரும் இல்லை.
இது பற்றி சர். வில்லியம் மூர் கூறுகிறார். "எதிரிகளின் திட்டத்தை நபிகள் நாயகம் மண்ணோடு மண்ணாக்கி விட்டார். கையளவு மனிதர்களுடனிருந்த அவர் இரவும் பகலும் தனது வெற்றியை எதிர் நோக்கிய வண்ணமே இருந்தார். முற்றிலும் பாதுகாப்பே இல்லாத நிலை. சிங்கத்தின் வாயின் உள்ளே இருந்தார் என்றே சொல்லலாம். அந்த நிலையிலிருந்தபடியே தான் இந்த வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்."
( LIFE OF MOHAMMED, P. 228.)

திருக்குர்ஆன் வேதம் எல்லாவற்றையும் தன்னுள் பொதிந்ததாகவே உள்ளது. குர்ஆனில் இல்லாதது எதுவுமில்லை. எந்த கல்வியானாலும் கலையானாலும் அதனுடைய அடிப்படை குர்ஆனில் இருக்கவே செய்கிறது. ஆச்சரியமூட்டும் படைப்பினங்கள், பூம் மற்றும் வானங்களின் ஆட்சி அதிகாரம், மண்ணுலகம் விண்ணுலகம் ஆகியவைப் பற்றிய தெளிவான தகவல்கள் குர்ஆனில் இருக்கின்றன. அதனை விளக்க வேண்டுமானால் ஏராளமான நூல் தொகுதிகள் தேவைப்படும் என அல்லாமா சுயூத்தி (ரஹ்) அவர்கள் தமது அல்இத்கான் என்ற நூலில் ( 2 : 138) குறிப்பிடுகிறார்கள்.

வேதங்களைப் பொறுத்தவரை குர்ஆன் மட்டுமே படைப்பினங்களையும், அகிலத்தின் ஒழுங்கமைப்பையும் சிந்தித்து படிப்பினை பெறுமாறு அழைப்பு விடுக்கிறது. தான் வெளியிடும் கொள்கை கோட்பாடுகள், போதனைகள் ஆகியவற்றின் உண்மைகளை உறுதிபடுத்துவதற்காக உலகையும் அதன் ஒழுங்கமைவுகளையும் ஆதாரமாக முன் வைக்கிறது. இதன் மூலம் இந்த அகிலம் முழுவதும் ஒரே இறைவனின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கின்ற நிலையை தெளிவுபடுத்திக் காட்டுகிறது.

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنفَعُ النَّاسَ وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

என இறைவன் இயம்புகிறான். இனி வரும் காலம் சிந்திக்க வேண்டிய நவீன அறிவியல் புரட்சி ஏற்படுகின்ற காலம் என்பதைப் பின்வரும் வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறிவிட்டது.

سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
41:53. நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?

குதிரைகளும், ஒட்டகங்களும், மாடுகளுமே மனிதனின் வாகனங்களாயிருந்த காலத்தில் இன்றய அறிவியலின் ஒரு பகுதியான கார் முதல் விண்வெளிக்கலம் வரை அக்கால மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத வாகனங்களையும், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும் இனி உலகம் காணப்போகிறது என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً ۚ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ
16:8. இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

1984 ஆம் ஆண்டின் கடைசியில் பல்வேறு நாளேடுகள் வெளியிட்ட செய்தி ஒன்று சுவையானதாகும். கனடாவின் "சிட்டிசன்" என்ற தினசரி "காலத்தை வென்று நிற்கும் 1300 ஆண்டுகளுக்கு முந்திய புனித வேதம்" என்று தலைப்பு வெளியிட்டிருந்தது. தில்லியிலிருந்து வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா (10/12/1984.)  நவீன அறிவியலை குர்ஆன் முந்துகிறது என்று தலைப்பிட்டிருந்தது.

டாக்டர் கெத்மோர் இன்றைய அறிவியலின் கண்டுபிடிப்பான மரபணுக்களைப் பற்றிய விபரம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. என்று கூறிய செய்தித்தாளைத்தான் பத்திரிக்கையெல்லாம் மேற்கண்ட தலைப்புகளுடன் வெளியிட்டு இருந்தன. அந்த அறிஞர் தம் கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

13 நூற்றாண்டுகளுக்கு முந்திய குர்ஆனில் மரபணுக்களின் பரிணாம வளர்ச்சியின் மிகத் தெளிவான விளக்கங்களை இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும் பொழுது குர்ஆன் வேதம் இறைவனால் அருளப்பட்டது தான் என்பதை முஸ்லிம்கள் அறிவுப்பூர்வமாக உறுதியாக நமபலாம் என்று கூறுகிறார்.

இவையெல்லாம் குர்ஆன் விளைவித்து வரும் நமது கால அற்புதங்களாகும். திருக்குர்ஆன் ஓர் நிரந்தர அற்புதம் தான் அதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதற்கு இவை சான்று கூறுகின்றன.

பேராசிரியர் முஹம்மது ஸதகத்துல்லாஹ் பாஜில் பாகவி
       (அல்பாகியாதுஸ்ஸாலிஹாத் - சர்வகலாசாலைவேலூர்.)

No comments:

Post a Comment