Thursday 26 November 2015

ஆலிம்கள் ஆன்மீக அரசர்கள்


                                     - மௌலவி T.J.M. ஸலாஹுத்தீன் ரியாஜி.
நெல்லை.

லமாக்கள் ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர்கள். ஆலிம்கள் என்னும் இந்த ஆன்மீகத் தாரகைகளால் தான், சமுதாயம் சங்கை பெறுகிறது. இவர்களது அற்புதமான வழிகாட்டல்கள், மனித சமூகத்தையே நேர்வழியில் நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த பண்பாட்டுக் காவலர்களின் பயனுள்ள பேச்சுக்களால் பல தலைமுறைகள் தட்டியெழுப்ப பட்டுள்ளன. இவர்களது அயராத முயற்சிகளினால் தூங்கி கிடந்த பல மனித மனங்கள், தொழுகையின் பக்கம் துள்ளி எழுந்து வந்துள்ளன.


இருலோக இரட்சகர் எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது, இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று திருமறை. இரண்டு எனது வழிமுறை. என்று சொன்னார்கள். அந்த இரண்டையும் மக்களிடம் விளக்கிச் சொல்லி அவற்றின் பெருமையைப் பறைசாற்றி இஸ்லாம் என்னும் இணையற்ற ஜோதியை இவ்வுலகெங்கும் எடுத்துச் செல்கின்ற இனமானக் காவலர்கள் நம்முடைய ஆலிம்கள்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை, அன்றாட நடைமுறை வாழ்வில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கற்பித்துள்ளதோ அதை மக்களிடம் போதித்து நேர்வழி பாதையில் அவர்களை முன் நின்று அழைத்துச் செல்கின்ற அயராத பணியில் அன்றாடம் ஈடுபட்டுள்ளவர்கள் ஆலிம்கள்.

பிள்ளைக்கு பெயர் சூட்டுவதில் ஆரம்பித்து அவனுக்கு திருமணம் நடத்தி கொடுத்து மரணத்தையொட்டிய அத்தனை நிகழ்ச்சிகளிலும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களோடு கபன் பொதிந்து கல்லறைக்கு அனுப்பும் வரை அத்தனை கடமைகளுக்கும் அச்சாரமாக நின்று ஆணிவேராக அமைந்து கிடப்பவர்கள் ஆலிம்கள்.
சமுதாயத்தின் சகல சுக துக்கங்களிலும், ஏற்ற இறக்கங்களிலும் தலைமைப் பொறுப்பேற்று தைரியமாக செயல்படுபவர்கள் ஆலிம்கள்.

وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் ஆலிம்கள் ஆற்றும் ஜும்ஆபேருரைகள், அகில உலகிலும் அறிவு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான பல செய்திகளை சொல்லி அதன் மூலம் பல படிப்பினைகளை மக்களுக்கு போதித்து வருபவர்கள் ஆலிம்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஆலிம்கள் தொடுத்து வரும் போர், நம்மவர்களின் குருட்டுச் சிந்தனைகளைக் குழி தோண்டி புதைத்து வருகிறது.அரசியல் ரீதியான இவர்களது அலசல்கள் ஆராய்ச்சிகள் விமர்சனங்கள் விளக்கங்கள் நம்முடைய இளைஞர்களிடம் வேகத்தைக் குறைத்து விவேகத்தை வளர்த்து வருகின்றன.
« إن من البيان لسحرا »
சொற்பொழிவில் மந்திர சக்தி இருக்கிறது. என்று பெருமானார் (ஸல்) எடுத்துக் கூறியுள்ளார்கள். உலமாக்களின் பேச்சுக்களில் மட்டுமின்றி, எழுத்துக்களும் எண்ணற்ற பலன்களை இந்த சமுதாயத்திற்கு என்றென்றும் தந்து கொண்டிருக்கிறது. உலமாக்களின் பேனா மை, அறப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் உதிரத்திற்கு சமமானது என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆலிம்கள் நடத்தி வரும் பத்திரிக்கைகள் அவர்கள் எழுதி வரும் புத்தகங்கள் சமுதாயத்தின் சிந்தனையை செம்மைபடுத்தி சீர்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு ஊரிலும் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், இஸ்லாமிய கல்விக்கூடங்கள், மன்றங்கள், சேவை அமைப்புக்கள், ஆகியவற்றை உருவாக்குவதற்கு மூல காரணமாக இருந்து அதன் மூலம் சமுதாயத்தில் எழுச்சியை ஏற்படுத்தி வருபவர்கள் ஆலிம்கள். இவர்கள் சமுதாயத்தின் சிற்பிகளாக இருந்து சமூகத்தின் சீர்கேடுகளை செதுக்கித்தள்ளி, முற்போக்கு சமுதாயத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

மனிதர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள், சட்டப்பிரச்சனைகள், கருத்து மோதல்கள் அனைத்திற்கும் திருக்குர்ஆன் வழியில் தீர்வுகண்டு வருபவர்கள் ஆலிம்கள்.  கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் விவாகரத்து ஆகிய பிரச்சனைகளில் ஆலிம்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு சொல்கிறார்கள். சமுதாயத்தின் உயர்ந்த பீடத்தில் இருந்து நமது சமூகத்தின் உயிர்ப் பிரச்சனைகளில் இவர்கள் கவனமாக செயல்பட்டு உரிய கருத்துக்களை தைரியமாக வெளியிட்டு வருவதால் நமது சமுதாயம் தலை சிறந்து நிற்கிறது.

இறைவேதம் என்ன கூறுகிறதோ அதை மக்களிடம் அஞ்சாமல் இவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள். நபி வழி எதை போதிக்கிறதோ, அதை அச்சு பிசகாமல் அப்படியே மக்களிடம் விவரித்து கூறுகிறார்கள். எது ஹராம் எது ஹலால் என்பதை இவர்கள் தான் மார்க்க தீர்ப்பு அளிக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் ஒருமுறை மூலம் இல்லாத, தமிழ் மொழிப் பெயர்ப்பு மட்டுமே உடைய திருமறை அச்சிடப்பட்டு வெளிவந்தவுடன், அதை எதிர்த்து குரல் கொடுத்து, அந்த மொழி பெயர்ப்பை வெளிவர விடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் ஆலிம்கள். மூலம் இல்லாமல் வெறும் மொழிப் பெயர்ப்பு மட்டும் புழக்கத்துக்கு வந்து விட்டால், பின்னர் ஆளாளுக்கு மொழிப் பெயர்ப்பில் கை வைத்து அர்த்தத்தையே மாற்றத் துவங்கி விடுவார்கள். இதை உரிய நேரத்தில் அஞ்சாமல் தடுத்து அதற்கு முன்னுரை வழங்கிய அரசியல் தலைவரையே தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வைத்தவர்கள் ஆலிம்கள்.

ஆலிம்கள் இறை பணியாளர்கள் ஆவர். அவர்களை பள்ளிவாசல் பணியாளர்கள் என்றோ மதரஸா பணியாளர்கள் என்றோ அழைக்க கூடாது. இவர்கல் வெறுமனே சம்பளம் பெறும் ஊழியர்கள் அல்ல. இவர்கள் நினைத்திருந்தால் உலக கல்வியினை கற்று மற்றவர்களைப் போல் உயர்ந்த உத்தியோகங்களுக்கு சென்றிருக்கலாம். ஆனால் சம்பளம் குறைவாக கிடைக்கும் என்பது நன்கு தெரிந்திருந்தும் இவர்கள் இறைப்பணியை தேர்ந்தெடுத்தது வறுமையை பயந்து அல்ல மறுமையை பயந்தே என்பதை யாரும் மறக்ககூடாது.

ஆலிம்களுக்கு நமது சமுதாயம் உயர்ந்த கண்ணியத்தை வழங்கி கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஊதியம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. சாதாரண அரசு ஊழியர்கள் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் ஒரு சமூகத்தையே உரிய பாதையில் அழைத்து செல்கின்ற இந்த உத்தமர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நான்காயிரம் ஐந்தாயிரம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுடைய குடும்பம் பிள்ளை குட்டிகள், உற்றார் உறவினர் அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளார்கள்.

இதை சமுதாயம் நன்றாக சிந்தித்து பார்த்து இவ்வுல வாழ்விற்கும் மறு உலக வாழ்விற்கும் நமக்கு நல்வழி காட்டிக் கொண்டிருக்கிற இந்த இறைபணியாளர்களுக்கு நியாயமான வசதி செய்து கொடுக்க வேண்டும்.

கிருஸ்தவர்கள் பிஷப்புகளைத் தலைவர்களாக ஏறருக் கொண்டு கட்டுக் கோப்புடன் வாழ்வது போல், இந்துக்கள் மடாதிபதிகளை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு வாழ்வது போல் முஸ்லிம்களும் ஆலிம்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு ஜமாஅத் கட்டுக் கோப்பை வளர்த்துக் கொண்டால். நம்முடைய வெற்றியை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது.

ஆலிம்கள் என்னும் ஆன்மீக அரசர்களை தலைவர்களாக ஏற்று நல்ல குடிமக்களாக வாழ நமக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்.


No comments:

Post a Comment