Monday 30 November 2015

சூபியிஸம் இஸ்லாத்தில் இல்லாததா.?


           மௌலவி அல்ஹாஜ் O.M. அப்துல் காதிர் பாகவி.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

3:164. நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.

 சூபியிஸம் என்பது ஒரு புதுமைக்குப் பெயரல்ல. ஒதுங்கி நிற்பதற்கு. சூபியிஸம் என்பது ஒரு பாவகாரியத்துக்கு பெயரல்ல. அதை விட்டு விலகி ஓடுவதற்கு. சூபியிஸம் என்பது எட்டாக் கனியல்ல. சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று கூறுவதற்கு. சூபியிஸம் என்பது அனைவரும் அவசியம் செயல்படுத்த வேண்டிய ஒரு அரும் பொருளாகும். அதன் முறையான செயல்பாடுகள் அருகி விட்ட காரணத்தால் அது தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டது.

பத்து கட்டளைகளை கொடுத்து மூஸா நபி அலை அவர்களை அல்லாஹ் யூத சமுதாயத்தின் பால் அனுப்பியதை போன்று நான்கு கட்டளைகளைக் கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இஸ்லாமிய சமுதாயத்தின் பால் அனுப்பியிருக்கிறான். இத்தகவலை மேற்காணும் வசனம் அறிய தருகிறது.
1. அல்குர்ஆனை பொருளை அறிந்தோ அறியாமலோ ஓத வைப்பது.
2. அவர்களை தூய்மைப் படுத்துவது.
3. அல்குர்ஆனின் பதவுரை தெளிவுரையை அவர்களுக்கு கற்று தறுவது.
4. நபிமொழி என்ற ஹிக்மத்தை கற்றுத் தருவது.
இந்த கட்டளைகளை கீழ் காணும் குர்ஆனின் வசனங்கள் ஊர்ஜிதம் செய்கிறது.

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
2:129. எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.

كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ
2:151. இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
62:2. அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.

இந்த நான்கு கட்டளைகளில் இடம் பெற்றுள்ள "தஸ்கியத்" என்பது தான் காலப்போக்கில் சூபியிஸம் என்று பெயர் கொண்டு சுட்டப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கல் தான் ஏற்று வந்த நான்கு கடமைகளையும் முழுமையாகச் சகவாசத்தை பெற்று விட்ட அனைவரும் ஏனைய மூன்று தன்மைகளையும் அறியப் பெற்றதைப் போன்றே தஸ்கியத்திலும் பரிபூரணத்துவம் பெற்றிருந்தார்கள்.

பின்னர் தோன்றிய மக்களில் எத்தகைய உயர்தரத்தவரும் கடைகோடி ஸஹாபிக்கு ஈடாக முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

(ரலி)யல்லாஹு அன்ஹும் ( அவர்கள் குறித்து அல்லாஹ்  மன நிறைவு கொண்டு விட்டான்.) என அல்குர்ஆன் சாட்சியம் பகருகிறது.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

கல்விக்கடலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களால் நான்கு கடமைகளையும் முழுமையாக செயல்படுத்த முடிந்தது. ஆனால் அவர்களுக்கு பின்னால் அந்நான்கு கடமைகளையும் ஒருங்கே செயலாற்ற எவராலும் முடியாது என்பதை அறிந்தே அண்ணலார் அந்த நான்கு கடமைகளையும் வெவ்வேறு நால்வரிடத்தில் பிரித்து ஒப்படைத்தார்கள். அந்த நால்வரின் மாணவர்கள் மாணவர்களின் மாணவர்கள் என்ற தொடர் உலகம் உள்ளளவும் இந்த நான்கு கட்டளைகளையும் மக்களுக்கு அறியதரும் என்பது அண்ணலாரின் சூசகமான அறிவிப்பாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை திருக்குர்ஆனின் விளக்கவுரையை பரப்பும் பணிக்கும், அபூஹுரைரா (ரலி) அவர்களை ஹிக்மத் என்ற நபி மொழியை பரப்பும் பணிக்கும், ஸைது ப்னு சாபித் (ரலி) அவர்களை திருக்குர்ஆனை எழுதுவது, மற்றும் கிராஅத் - அழகுற ஓதச் செய்வதன் பணிக்கும், அலி (ரலி) அவர்களை தஸ்கியத் செய்யும் பணிக்கும் அண்ணலார் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இந்த அறிமுகம் அண்ணலாரிடமிருந்து சூசகமாக வெளிப்பட்டதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கல் சிறு வயதில் அண்ணலாருக்கு சேவகம் செய்த போது, அந்த சேவை கண்டு மனம் குளிந்த அண்ணலார் அவருக்காக துஆ செய்தார்கள்.
كان رسول الله صلى الله عليه وسلم في بيت ميمونة فوضعت له وضوءا فقالت له ميمونة: وضع لك عبدالله بن العباس وضوءا، فقال: اللهم فقهه في الدين وعلمه التأويل
" யா அல்லாஹ்... இவரை மார்க்க சட்ட நிபுணராக ஆக்குவாயாக.. மேலும் திருக்குர்ஆனின் விரிவுரையையும் இவருக்கு கற்றுத் தருவாயாக. என்று துஆ செய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்களை அண்ணலார் ஒரு சமயம் மேலாடையை விரிக்கச் செய்து, அதில் தனது இரு கரங்களினால் மானசீகமாக எதையோ மூன்று பிடி அள்ளிப் போட்டு அதை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளச் செய்தார்கள். அவ்வாறு செய்ததிலிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிமொழியின் நினைவு பெட்டகமாக மாறிவிட்டார்கள். 
ஸைது ப்னு தாபித் (ரலி) அவர்களுக்கு, பத்ரு கைதிகளில் ஒருவரைக் கொண்டு அரபி எழுத படிக்க கற்றுக் கொடுத்து, அண்ணலார் அவரை தனது ஆஸ்தான எழுத்தாளராக அமர்த்திக் கொண்டார்கள். அல்குர்ஆனை பதிவு செய்து வைக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
" أنا مدينة العلم وعلي بابها ، فمن أراد العلم فليأتها من بابها "
" நான் ஞானத்தின் இருப்பிடம். அலி அதன் தலைவாயில்"
                            ( நூல். திர்மிதி, அறிவிப்பாளர். அலி (ரலி) )
என்று அண்ணலார் நவின்று அலி (ரலி) அவர்களை தஸ்கியத் என்ற கலையின் ஆசானாக அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அண்ணலாரால் சமிக்ஞை செய்யப்பட்ட அந்த நால்வரும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கலைகளை முறையாக பரப்பி வந்தார்கள். அலி (ரலி) அவர்களின் வழித்தோன்றல்கள் குறிப்பாக ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) மற்றும் அவர்களின் சந்ததிகளின் வாயிலாக தஸ்கியத் என்னும் கலை போதிக்கப்பட்டு வந்தது. இதனால் தான் இறைநேசர்களில் பெருவாரியனவர்கள் ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) இவர்களின் வழித்தோன்றலாகவே இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் வேதம் எனது மொழி ஆகிய இரு ஆதாரங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதை இறுக பற்றியிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறிடமாட்டீர்கள் என்று கூறிய அண்ணலார் அது போன்று இன்னொன்றைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். உங்களிடையே இருசெல்வங்களை விட்டுச் செல்கிறேன். அவற்றில் முதலாவது அல்லாஹ்வின் வேதமாகும். அதில் பேரொளியும், நேர்வழியும் இருக்கிறது. மற்றொன்று எனது புனித சந்ததி. எனது சந்ததி விசயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். என்று மூன்று முறை கூறினார்கள்.
 அறிவிப்பாளர். ஸைது ப்னு அர்கம் (ரலி) நூல் முஸ்லிம்.

அண்ணலாரின் இந்த அறிவிப்புக்கும், அலி (ரலி) அவர்கள் பற்றி அண்ணலார் குறிப்பிட்டதற்குமிடையில் சம்பந்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.

சூபியிசத்தின் முக்கியத்துவம்
ஒரு மூதாட்டி ஆப்பிள் பழம் விற்றுக் கொண்டு சென்றாள். ஒருவன் அவளுக்கு தெரியாமல் ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொண்டான். சற்று தூரம் சென்றதும் அவனிடம் ஒரு யாசகன் தனக்கு பசிக்கிறது என்று கூறி பிச்சை கேட்டான். திருடியவன் அந்த ஆப்பிள் பழத்தை யாசகனுக்கு கொடுத்தான். அவனை கண்காணித்து கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்த ஒருவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னால் சென்றவன் திருடன் திருடவும் செய்கிறான், தர்மமும் கொடுக்கிறான்.

பின் தொடர்ந்தவர் திருடனிடமே தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். "எல்லாம் நான் கணக்குப் பார்த்துதான் செய்கிறேன்." ஒரு பழம் திருடியதற்கு ஒரு குற்றம் தான் எழுதப்படும். ஆனால் ஒரு பழம் தருமம் கொடுத்தால் ஒன்றுக்கு பத்தாக நன்மை கிடைக்குமல்லவா..? அதில் திருடிய ஒரு குற்றம் போக, ஒன்பது நன்மை நிகர லாபம் தானே." என்று திருடன் விளக்கம் கூறினான். பின் தொடர்ந்தவர் மனதிற்குள் பேசிக் கொண்டார். தீமை எழுதப்பட்டு விட்டது. ஆனால் நன்மை ஒப்புக் கொள்ளப்பட்டதா..? என்று தெரியாதே. அப்படியிருக்கையில் லாப நஷ்ட கணக்கு எவ்வாறு போட இயலும்..?

காரியமாற்றுவது என்பது வேறு. ஒப்புக் கொள்ளப்படும் தரத்தில் அதை செய்வது என்பது வேறு. ஒவ்வொரு காரியத்தையும் ஒப்புக் கொள்ளப்படும் தரத்தில் செய்ய வைப்பதே சூபியிஸத்தின் நோக்கமாகும்.

தொழுகை ஒரு உரைகல்.
அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட அனைத்து கடமைகளிலும் மன ஒன்றுதல் இருப்பது அவசியமாகும். தொழுகையை எடுத்துக் கொண்டால் ஏதோ உடற்பயிற்சி போன்று ஐவேளை தொழுது விட்டால் விடுதலை கிடைத்து விடுமா..?

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏ 
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏ 
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏ 
107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
  وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ‏

107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا

4:142. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.

மேற்கண்ட திருவசனங்கள் மனம் ஒன்றித் தொழுக வேண்டும் என்றும் பிறர் மெச்சுவதற்காக செய்யாமல், முழுமனதுடன் இறைவனுக்காக செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டவில்லையா..?

إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي

20:14. நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ

7:205. (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். " உணவு தயார் நிலையில் இருக்கும் போது, மலஜல தேவைகள் அவசியமான நிலையிலும் தொழுதிடல் வேண்டாம்."
                 அறிவிப்பாளர். ஆயிஷா (ரலி) நூல் முஸ்லிம்.

மேற்கண்ட திருக்குர்ஆனின் வசனங்களும், நபிமொழியும் தொழுகையில் மன ஓர்மை அவசியம் என்பதை எடுத்துரைக்கவில்லையா..?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி தயம்மும்செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

ஆனால் போதையில் இல்லாத எத்தனையோ தொழுகையாளிகள் தொழுகையில் ஆரம்ப முதல் கடைசி வரை மனம் ஒன்றாமலேயே நிற்பதுண்டு. என்ன செய்கிறோம்..? எங்கிருக்கிறோம்.? என்பது கூட தெரியாத நிலையில் அவர்கள் கடமையாற்றுவது போதையை விட மோசமான நிலையாகும்.

ஒரு பெரியவர் தொழுது கொண்டிருந்தார். அவருக்கருகில் காவியத்தலைவன் மஜ்னு நின்று கொன்டிருந்தான். திடிரென அவன் கண் மண் தெரியாமல் ஓட ஆரம்பித்து விட்டான். அவன் அவ்வாறு ஓடியதால் பெரியவரின் தொழுகை விரிப்பு முழுவதும் மண் படிந்து விட்டது. பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது. தொழுகை முடியட்டும் அந்த மஜ்னு பயலை என்ன செய்கிறேன் பார்..? என்று மனதுள் பொறும ஆரம்பித்து விட்டார். தொழுது முடிந்ததும் முதல் வேலையாக மஜ்னூனை தேடிக் கண்டுபிடித்து அவனை திட்டி தீர்த்து விட்டார்.

பாவம் அந்த பெரியவருக்கு உண்மை புரியவில்லை. மஜ்னு தன் காதலி நினைவு வந்த உடன் அவன் உலகை மறந்து விடுகிறான். தன்னை என்ன நடக்கிறது...? தன்னால் என்ன கேடு விளைகிறது..என்பதை கூட அவனால் அறிய முடியாமல் போகிறது. ஆனால் அந்த பெரியவர் தனது காதலனாகிய இறைவனை நினைத்து வழிபடும் போது சுற்றப்புறத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரிகிறது. தனக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனால் கோபமும், ஆத்திரமும் ஏற்படுகிறது. அப்படியானால் அவரது காதல் உண்மை காதலா..?

"أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك‏"‏‏‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வை நீ பார்ப்பதை போன்று தொழுக வேண்டும். அவனை உன்னால் பார்க்க இயலவில்லை என்றாலும், அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
                            ( அறிவிப்பாளர்.: உமர் (ரலி) நூல்: புகாரி.)

டெலிபோன் உரையாடலின் போது நாம் சற்று கவனித்துப் பார்த்தால்ஒரு உண்மை புலனாகும். சிலர் கோபத்தால் செல்போனை முறைத்துப் பார்க்கிறார்கள். டெலிபோனை போட்டு உடைக்கிறார்கள். சிலர் செல்போனை முத்தம் கொடுக்கிறார்கள். குரலை உச்சமாக கொண்டு செல்கிறார்கள். டெலிபோனில் குளைக்கிறார்கள். ஜொள்ளு விடுகிறார்கள்.

இங்கு இல்லாத ஒரு ஆளை இங்கு இருப்பதாக கருதிக் கொண்டு உணர்வு பிழம்பாக ஒருவரால் மாற முடிகிறது. ஆனால் இங்கு இருக்கும் இறைவனை நினைவில் கொண்டு அவரால் உமர்ச்சி பிழம்பாக மாறமுடியவில்லை.

அதற்கு காரணம் உண்மையும் எதார்த்தமும் மனதிற்கு புரியாதது தான். உண்மையையும் எதார்த்ததையும் மனதிற்கு புரிய வைத்து விட்டால் அது மெழுகாக உருகிவிடும். அதற்கான பயிற்சி தான் சூபியிஸம் என்ற பெயரால் தரப்படுகிறது.

 வேறு எண்ணம் ஏதும் ஏற்படாமல் இரண்டு ரக்அத்துத் தொழுவது சராசரி மனிதனுக்கு சாத்தியமில்லாதத்தாக இருக்கும் போது சூபியிஸத்தில் பயிற்சி பெற்றவர் தொழும் தொழுகை எதிலும் வேறு எண்ணமே ஏற்படுவதில்லை. சூபியிஸத்தில் பயிற்சி பெற்றவர்களின் சரித்திரங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும்.

 ஷைத்தானுக்கு சவால்.
فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

16:98. மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.

சாமானியர் தொழும் போது துவக்கத்தில் அவூது பில்லாஹ், பிஸ்மி சொல்லவே செய்கிறார். ஆனால் ஷைத்தான் அவர்களை விட்டு போவது இல்லை. இறைவனை தவிர அனைத்து எண்ணங்களையும் அவன் அவர்களுக்கு தோன்றச் செய்து விடுகிறான். ஆனால் தஸ்கியத் என்ற மனப்பயிற்சி பெற்றவர்கள் அருகில் ஷைத்தான் நெருங்குவது கூட கிடையாது.

இந்த முரண்பாட்டிற்கான காரணத்தை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் ஒரு உவமை கூறி விளக்குகிரார்கள். வீதியில் இருவர் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கையில் இறைச்சியும் 2 ரொட்டி துண்டுகளும் இருக்கின்றன. மற்றவர் கையில் எதுவுமில்லை.

இறைச்சியும் 2 ரொட்டி துண்டையும் எடுத்துச் செல்பவரை ஒரு நாய் பின் தொடர்கிறது. அவர் அதை விரட்டுகிறார். அந்த நாய் அவரை விட்டு போக மறுக்கிறது. திரும்ப திரும்ப விரட்டுகிறார். அவர் விரட்டும் போது விலகுவதை போன்று பாசாங்கு செய்து விட்டு திரும்பவும் அவர் பின்னாலே வருகிறது. கையில் ஒன்றுமில்லாதவர் பின்னாலும் ஒரு நாய் பின் தொடர்கிறது. அவர் விரட்டுகிறார். உடனே நாய் அவரை விட்டகன்று விடுகிறது.

சில சிறுவர்களை கண்டால் நாய் வேறு திசையில் ஓடுவதை காணலாம். அச்சிறுவனிடம் கல்லடி பட்டு நேற்று கால் ஒடிந்தது. அதன் நினைவில் இருக்கிறது.

இந்த முரண்பாடு போன்றதுதான் ஷைத்தானின் செயல். வினோதமுமாகும். ஷைத்தானுக்கு தேவையான மன அழுக்காறுகளை சுமந்திருப்பவர்கள் எத்தனை தடவை அவூது பில்லாஹ் பிஸ்மில்லாஹ் சொன்னாலும் ஷைத்தான் அவர்களை விட்டு செல்வதில்லை. ஆனால் மன அழுக்காறுகள் நீங்கப் பெற்றவர்கள் ஒரு தடவை அவூது சொன்னாலே ஷைத்தான் அகன்று விடுகிறான். உமர் (ரலி) போன்ற சிலர் ஒரு பாதையில் சென்றாலேயே கல்லைக் கண்ட நாய் போன்று ஷைத்தான் காற்று பிரிந்த நிலையில்  வேறு பாதையில் ஓடி மறைகிறான்.

அர்த்தமுள்ள இறை வேட்டல்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.


அல்குர்ஆனின் அறிவிப்பை பெற்று விட்ட நாம் எத்தனையோ தடவைகள் துஆ செய்கிறோம். காலங்கள் பல கடந்தும் கூட நமது துஆக்கள் அங்கீகரிக்கப்பட்டு விட்டதா...? இல்லையா..? என கண்டு கொள்ள முடிவதில்லை. ஆனால் சூபியிஸப் பயிற்சி பெற்ற இறைநேசர்களின் துஆ அங்கீகரிக்கப்படுவதை அவர்களால் கண்கூடாக காண முடிகிறது. இது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆடையில் புழுதி படர்ந்து தலை அலங்கரிக்கப்படாது பிறர் வீட்டு வாசலுக்கு சென்றால் விரட்டப்படும் நிலையிலுள்ள சிலர் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஒரு காரியத்தை கூறுவார்களாயின் அவர்கள் சொன்னதை போன்று அக்காரியத்தை அல்லாஹ் ஆக்கி வைக்கிறான்.
    அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம்.

அண்ணலார் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அழுத்தத்தை கவனிக்க வேண்டும். அவர்கள் துஆ செய்யும் வரை கூட அல்லாஹ் தாமதிப்பதில்லை. அவர்கள் சொல்லி விட்டதை அல்லாஹ் அப்படியே நிகழ்த்தி காட்டுகிறான்.

சிந்திக்க வைக்கும் சில வசனங்கள்.

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

29:45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابًا مُّتَشَابِهًا مَّثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ ۚ وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ
39:23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.

அறிந்து கொள்ளுங்கள்...! அல்லாஹ்வை திக்ரு செய்வது கொண்டு மனங்கள் அமைதி பெறுகின்றன. இவைபோன்ற எண்ணற்ற திருவசனங்கள் சூபியிஸத்தில் ஈடுபாடு இல்லாத சாமானியர்க்கு கேள்விக்குறியாகவே இருக்கின்றன. காலங்காலமாகத் தொழுது வரும் சிலர் மானக்கேடான காரியங்களிலிருந்தும், மார்க்கம் விலக்கிய காரியங்களிலிருந்தும் இன்னும் விலகாமலிருக்கிறார்களே..? அது எப்படி முடியும்..? தொழுகை அவர்களை தடுக்கவில்லையா..அல்லாஹ் என்று ஆயிரம் முறை கூப்பிட்டாலும் நமது உள்ளம் அச்சம் கொள்ள மறுக்கிறதே..? அது ஏன்...?

உடலினுள் எய்யப்பட்ட அம்பை உறுவி எடுக்க முடியாத போது  " நான் தொழுகிறேன் அப்போது எடுத்து விடுங்கள் வெண்ணையிலிருந்து உரோமத்தை நீக்கியது போன்று என் உடம்பிலிருந்து அம்பை நீக்கி விடலாம்"  என்று நமது  முன்னோர்கள் கூறியிருக்கிறார்களே..! அவ்வாறு நிகழ்ந்துமிருக்கிறதே..! நான் குர்ஆன் ஓதும் போதும் தொழும் போதும் அந்த மாற்றம் எனது மேனியில் ஏற்படுவதில்லையே..! அது ஏன்...!

அல்லாஹ்....! அல்லாஹ்...என்று ஆயிரமாயிரம் தடவை கூறியும் என் மனம் அமைதி காணமறுக்கிறதே..!

துற்குணங்கள் என்பது ஆலகால விஷமாகும். அபூர்வமாக செய்யப்படும் நல்அமல்களைக்கூட அது பாழ்படுத்தி விடுகிறது. துற்குணங்கலை அகற்றப்படாமல் நல்அமல்களை செய்து கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குறியவர்களே ஆவர்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

2:264. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.

மேற்கண்ட இரு குணங்கள் அகற்றப்படாத வரை தருமத்தால் எவ்வித பயனும் அடைய முடியாது.

புகழை விரும்பும் தன்மை எல்லா மனிதனிடத்திலும் இயற்கையிலேயே அமையப் பெற்றதாகும். ஆண்டி முதல் அரசந் வரை புகழை விரும்பாதவர் எவரும் இல்லை. ஹாஜியார் புகழை விரும்ப மாட்டார் என்று பிறர் சொல்ல சந்தர்ப்பம் அளிப்பதே கூட அந்த வகையில் புகழை விரும்பியதாகி விடுகிறது. அவ்வாறு புகழை விரும்பும் மனோ நிலையில் காரியமாற்றுவது தியாகங்களின் தழும்புகளை காயப்படுத்தி விடுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  எனது சமூகத்தவரிடம் இரண்டு குணங்கள் இடம் பெறுவதை நான் மிகவும் அஞ்சுகிறேன். பிறர் மெச்சுவதற்காக அமல் செய்வதும் ஆசை தூண்டியதெல்லாம் செய்வதுமாகும். கருமையாந இருள் சூழ்ந்த இரவில் கரும் பாறை ஒன்றில் ஊர்ந்து செல்லும் கறுப்பு எறும்பை கண்டு கொள்வது எவ்வளவு சிரமமோ அதுபோல ஒருவரிடத்தில் அந்த குணங்கள் இருப்பதை கண்டு பிடிப்பது அவ்வளவு சிரமமாகும்.
  ( அறிவிப்பாளர். ஷத்தாத் ப்னு அவ்ஸ் (ரலி)  நூல் இப்னு மாஜா.)

பெருமையும் தான் செய்யும் காரியம் சரியாகத்தான் இருக்கும் என்ற மனப்பான்மையும் மற்றவர்களை மட்டமாக கருதுவதும் ஒட்டுமொத்தமாக எல்லா நற்ச்செயல்களையும் பாழ்படுத்தி விடக்கூடியவையாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெருமை என்பது எனக்கு சொந்தமான சால்வை. அதை என்னிடமிருந்து பறித்து. தான் அணிந்து கொள்ள விரும்புபவர்களை நான் நரகத்திற்கு அனுப்பாமல் விட மாட்டேன்.
      அறிவிப்பாளர்.  அபூ ஹுரைரா (ரலி) நூல்  முஸ்லிம்.


பெருமைதானே ஷைத்தான் செய்திருந்த அமல்களையெல்லாம் அழித்து அவனை அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளாக்கியது.

நபி (ஸல்) அவர்கள் பனுஇஸ்ரவேலர்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரின் சரித்திரத்தை தன் நண்பர்களுக்கு சொல்லிக் காட்டினார்கள். அவர் மொத்தம் 99 கொலைகள் செய்திருந்தார். பின்னர் அவர் மனம் திருந்தினார். தனக்கு இறை மன்னிப்பு கிடைக்குமா..? என ஏங்கினார். காண்பவரிடமெல்லாம் விளக்கம் கேட்டார். மலை உச்சியில் ஒரு வணக்கசாலி இருப்பதாகவும் அவரிடம் கேட்டால் மன்னிப்பு உண்டா என தெரியவரும் என்று மக்கள் கூறினார்கள். அவரிடமும் சென்று கேட்டார். உனக்கு மன்னிப்பு கிடைக்காது என்று அந்த வணக்கசாலி கூறிவிட்டார். அதனால் கோபம் வந்த அந்த கொலைகாரன் அந்த வணக்கசாலியையும் கொன்று 100 கொலைகள் செய்தவரானார்.

பின்னர் தன்னை சந்தித்த அறிஞரிடம் இது குறித்து கேட்டார். நிச்சயம் உனக்கு மன்னிப்பு கிடைக்கும். இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான் என்று அந்த வணக்கசாலிக்கு யார் சொன்னது..?  அல்லாஹ்வின் அருளை தடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் யார் கொடுத்தது..? என்று கூறி அந்த அறிஞர் கோபித்தார்.. இன்னமலை தொடரில் வணக்கசாலியான அறஞர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களிடம் சென்றால் நிச்சயம் உனக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான வழிவகையைக் கூறுவார்கள். என்றும் கூறினார்.

கொலையாளி அந்த மலை தொடரை நோக்கி பயணமானார். செல்லும் வழியில் அவர் மரணமடைந்து விட்டார். அவரது உயிரை அருள் சுமக்கும் மலக்கு சுமந்து செல்வதா..? வேதனையின் மலக்கு எடுத்து செல்வதா..? என்பது சிக்கலாகி விட்டது.

எனக்கு மலக்குகள் அல்லாஹ்விடம் தீர்ப்பு கேட்டார்கள். கொலையாளி புறப்பட்ட இடத்திலிருந்து போய் சேரும் இடம் வரை முழம் போடுங்கள். சரிபாதியைக் கடந்து விட்டால் அவர் உயிரை அருள் சுமக்கும் மலக்கு எடுத்துச் செல்லட்டும். என்று அல்லாஹ் தீர்ப்பு கூறினான். அளந்து பார்த்த போது அவர் சரிபாதியை விட ஒரு ஜான் அதிகம் கடந்திருந்தார். எனவே அவர் உயிரை அருள் மலக்குகள் கண்ணியமாக சுமந்து சென்றார்கள்.
   ( அறிவிப்பாளர். அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல் புகாரி முஸ்லிம்.)

வேறு ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது. இந்த தகவலை தந்த போது நபிகள் நாயகம் (ஸல்) சிரித்தார்கள். நண்பர்கள் காரணம் கேட்டார்கள். இல்லை 100 கொலை செய்தவர் சுவனம் செல்கிறார். அவருக்கு இறை மன்னிப்பு கிடைக்காது என்று சொன்ன தவசாலி நரகம் செல்கிறார். அதை நினைத்த போது சிரிப்பு வந்தது. என்று அண்ணலார் பதில் கூறினார்கள்.

தவம் செய்தால் மட்டும் போதாது. அந்த தவத்தை பாழ்படுத்தும் செயல் ஏதும் செய்யாமலிருப்பது அவசியம் என்பதை மேற்காணும் நிகழ்வு உணர்த்தவில்லையா..? பலகாலம் தொழுது வருபவருக்கு நாம் தான் ஒழுங்கானவர் மற்றவர்களெல்லாம் நரகத்துக்கு செல்வார்கள். என்ற எண்ணம் ஏற்பட்டு விடுவதை காணுகின்றோம். பாவம்...! அவ்வாறு எண்ணுபவர்கள் வணக்க வழிபாட்டிற்காக தாங்கள்பட்ட கஷ்டங்களெல்லாம் கானல் நீருக்கு சமமானது என்பதை அவர்கல் புரிய மறுக்கிறார்கள்.

பேரழிவின்பால் போய் சேர்க்க கூடிய இத்தகைய குணங்களை அகற்றுவது தலையாய கடமை அல்லவா...? சாதாரணமாக ஒரு கிளியை பேச பழக்குவதாக இருந்தாலேயே என்ன சிரமப்பட வேண்டியிருக்கிறது..? வேட்டையாடுவதற்காக ஒரு நாயை அதன் இயற்கைக் குணத்தை விட வைப்பதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது. அவ்வாறு இருக்கையில் தன்னைப் பிறர் குறை சொல்லப்பிடிக்காத மனித குணங்களை மாற்றுவது எளிதான காரியமா,,? அந்த மனமாற்றத்தை செய்விக்கும் ரஸவாத வித்தைதான் சூபியிஸம் என்பது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒருவனின் மேனியில் நோயின் அறிகுறி தோன்றினால் அவனுக்கு வெளிப்பூச்சு மருந்து கொடுத்து குணப்படுத்த முயலுவதை வணக்க வழிபாடுகளுக்கு ஒப்பிடலாம். அந்த நோயின் மூல காரணமென்ன...? என கண்டறிந்து அந்த காரணத்தை களைய முயற்சிகள் மேற்கொள்வதுதான் சூபியிஸம் என்பது.

ஒருவர் தொழுது கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் காண நேர்ந்தது. அவர் ஆடையிலும் மேனியிலும் விளையாடிக் கொண்டிருந்தார். " இவர் உள்ளத்தில் இறையச்சம் நிறைந்திருந்தால் இவரின் உறுப்புகள் விளையாடாது " என்று கூறினார்கள்.

உறுப்புகளோடு விளையாடுவது தடுக்கப்பட்டது என்று கூறிக்கொண்டிருப்பதை விட உள்ளத்தில் இறையச்சம் ஏற்படுத்துவது தான் பயனளிக்கும் என்பது அண்ணலாரின் அறிவுறுத்தலாகும். ஆம் இரண்டாவதை செய்வதற்கு பெயர் தான் சூபியிஸம்.

சூபியிஸம் பற்றி சில வரிகள்.

மனிதனிடம் அகற்றப்பட வேண்டிய குணங்கள் அநேகம் உள்ளன. அது போன்று இடம் பெறச் செய்ய வேண்டிய குணங்களும் திகம். அதற்கான வழிமுறைகள் தான் சூபியிஸம் எனப்படும்.

சூபியிஸம் பற்றி அநேக நூல்கள் உள்ளன. குறிப்பாக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதிய இஹ்யா உலூமித்தீன் என்ற நூலின் மூன்றாம் நாலாம் பாகங்கள் சாமானியரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூபியிஸத்தில் மிக முக்கியமான அம்சம், ஞான வழி பெரியார் ஒருவர் கண்காணிப்பில் தனது குணங்களை சரி செய்வதாகும். இதற்கு பைஅத் என்று கூறப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் பைஅத் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது, அவர்களுக்கு பைஅத் செய்து கொடுக்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَن لَّا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ۙ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
பெண்களுக்கு இவ்வாறு பைஅத் செய்து கொடுக்க உத்தரவானதை அறிந்த ஆண்களும் பைஅத் செய்ய விரும்பினார்கள். அண்ணலாரும் செய்து கொடுத்தார்கள். உபாதத் ப்னு ஸாமித் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். நூல் இப்னு கஸீர்.

இந்த பைஅத் இஸ்லாமான பிறகு தான் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. " ஈமான் கொண்ட பெண்கள் பைஅத் செய்ய வந்தால் என்ற வசனம் இக்கருத்தை ஊர்ஜிதம் செய்கிறது.

ஒருவர் இஸ்லாமாகி விட்டாலே இஸ்லாத்தின் எல்லா சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவராகிறார். திரும்பவும் அவரிடம் பைஅத் செய்ய வேண்டிய அவசியமென்ன..?

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. தன்னை அகமும் புறமும் முற்றிலும் கண்காணிக்கும் நிலையிலுள்ள ஆன்மீகப் பெரியவரிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும். என்பதே பொருளாகும்.

பைஅத் செய்து கொடுப்பவர் தன்னிடம் தீட்சை பெற்றவர்களை முழுமையாக கண்காணித்து ஷரீஅத் சட்டத்தை முழுமையாக பேணி வரச்செய்வதுடன் முழுமையான குணசீலராக மாற்ற முயலுவார். மேலும் அவர்களின் குணமாற்றங்களுக்காக துஆ செய்து வருவார். இக்கருத்தை மேற்காணும் வசனத்தில் இடம் பெற்றுள்ள " வஸ்தஃபிர் லஹுன்னல்லாஹ் " என்ற வாக்கியம் குறிக்கிறது. ஆனால் இத்தகைய பயிற்சியாளர்கள் தற்காலத்தில் மிகவும் குறைந்து விட்டார்கள் என்பதற்காக அந்த கலை தேவையில்லாதது என்று கொள்ள முடியாது.

மேலும் சூபியிஸம் என்பது குடும்ப வாழ்க்கைக்கு மாறுபட்ட துறவறத்துக்கு பெயரல்ல. மேலும் ஷரீஅத்தை முழுவதுமாக மன ஒன்றுதலுடன் பின்பற்ற செய்வதற்கு பெயரே சூபியிஸம். ஷரீஅத்தில் முரண்பாடு செய்பவர்க்கு சூபியிஸத்தில் வேலையில்லை. எனவே சூபியிஸம் என்பது துறவரம் என்றோ அல்லது ஷரீஅத்திற்கு முரண்பட்டது என்றோ கருதி சூபியிஸத்தை குறை கூறல் ஆகாது.

தரீக்காக்கள்.

சூபியிஸம் என்ற பாட்டை நாயகம் (ஸல்) அவர்களிடம் துவங்கி, அலி (ரலி) அவர்கள் அதை மக்களிடம் வெகுவாக பரப்பி வந்தார்கள். காலப்போக்கில் அதன் முக்கியத்துவம் குறைந்து விடாதிருக்க பல ஆன்மீகப் பெரியார்கள் பாடுபட்டார்கள். தாங்கள் எந்த திக்ருகளை எந்த முறையில் உபயோகித்து இறையன்பை பெற்றார்களோ, அதை தன் மாணாக்கர்களுக்குப் போதித்து வந்தார்கல். அவரவர்கள் அனுபவத்தில் கண்ட வழி தரீக்க என்ற தனிவழிப்பட்டது.

இந்த வகையில் நாற்பதிற்கும் மேற்பட்ட தரீக்காக்கள் தோன்றியுள்ளன. காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்திய்யா, ரிபாயிய்யா, போன்ற சில தரீக்காக்களே பிரபலமாக நீடித்து பின்பற்றப்பட்டு வருகிறன. தரீக்காக்கள் வேறாக இருந்தாலும் லாஇலாஹா இல்லல்லாஹ். அல்லாஹ் போன்ற திக்ர்கள் தான் அனைத்திற்கும் மூலமாகும்.

ஞானத்தின் உட்பிரிவுகள்.

சூபியிஸத்தில் மிக முக்கியமானது மனதின் குணங்களை செம்மைபடுத்தி அதன்பின் அல்லாஹ்வின் மீது அன்பு கொள்ளச் செய்வதாகும். அவ்வாறு அன்பு செலுத்தும் போது அன்பின் ஆழம் பலதரப்பட்ட பெயர்களைக் கொண்டு குறிக்கப்படுகின்றன.

சிற்சில சமயங்களில் அன்பும், ஆசையும் கட்டுக்கடங்காது போகும் போது நாவால் உரைத்த சொற்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை தந்து விடுகின்றன. மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) போன்றோர் "அனல்ஹக்என்றுரைத்ததை இதற்கு உவமையாக கொள்ளலாம். அது அறிவின் துணை கொண்டு உண்மையை திடப்படுத்தும் பேச்சல்ல. அல்லாஹ்வின் ஆசை என்ற மயக்கம் தெளிந்தால் அவர்களே அப்படிச் சொன்னதற்காக வெட்கப்படுவார்கள். அத்தகைய பேச்சுக்களை ஆதாரமாகக் கொண்டு சூபியிஸத்தை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.

அருமை நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை பிரிந்த போது உமர் (ரலி) அவர்கள் வாளை ஓங்கிக் கொண்டு "முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று எவராவது சொன்னால் அவர் தலையை கொய்து விடுவேன்" என்று ஓங்காரமிட்டது இந்த வகையை சார்ந்ததாகும். பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள் உண்மையை தெளிவுபடுத்திய போது உமர் (ரலி) வருத்தப்பட்டார்கள்.

பாவ வழி சென்ற ஒருவன் திரும்பி வரும் போது அல்லாஹ் மிக மகிழ்ச்சியடைகிறான். என்பதை விளக்கப் புகுந்த நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஒரு உருவாக்க கதை படைத்தார்கள்.

அரபக பாலைவனத்தில் ஒருவன் குதிரை பயணம் மேற்கொண்டான். ஓரிடத்தில் குதிரையை கட்டிப் போட்டு சற்று நேரம் கண்ணயர்ந்தான். அவன் கண் விழித்த போது குதிரையை காணோம். அதிர்ச்சி அடைந்த அவன் செய்தவறியாது திகைத்து போனான். குதிரை இல்லாது செல்ல வேண்டிய இடத்தை அடையவும் முடியாது. புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் முடியாது. உணவில்லாமல் உயிர்வாழவும் முடியாது. தவிக்கு எவரும் வருவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது.

ஏனெனில் பாலைவன பகுதியில் பல வருடங்கள் ஆனாலும் மனித நடமாட்டத்தை காணமுடியாது. தடுமாறிய அவன் சற்று முற்றும் தேடினான். பசி மயக்கத்தில் மீண்டும் கண்ணயர்ந்து விட்டான். கண் விழித்த போது அவன் குதிரை நிற்கிறது. குதிரையில் உள்ள உணவு பொருட்கள் உட்பட அனைத்தும் அப்படியே இருந்தன. குதிரை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

" இறைவா.... நீ என் அடிமை. நான் உன் எஜமான்." இந்த வார்த்தை வெளியிடும் போது அவன் எந்தளவுக்கு மகிழ்ச்சி அடைந்திருந்தானோ அநதளவுக்கு இறைவனும் மகிழ்ச்சியடைகிறான்.
             ( அறிவிப்பாளர். அனஸ் (ரலி) நூல் புகாரி )

வல்ல (ரஹ்)மான் நம் விசயத்திலும் அத்தகைய மகிழ்ச்சி அடைவானாக ஆமீன்.

No comments:

Post a Comment