Tuesday 29 December 2015

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்


ந்தியா எனப்படும் பாரதத்தில் மக்களாட்சி சிறப்புடன் நடைபெறுவதற்காக உரிமையியல் சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் செயல் முறையில் இருப்பதோடு இந்திய அரசியலமைப்புச் சட்டம் (Constitution Of Indian)  என்ற சட்டமும் இருப்பதை நாம் அறிவோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 26-11-1949.ம் ஆண்டு அரசியல் நிரணய சபையால் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை காரணமாக பாரத நாட்டில் பலர் விடுதலை வேட்கையின் அறப்போராட்டத்தில் பலியாகி இருக்கின்றனர்.

"ஆடுவோமே பண் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே பாரதி பாடினார்.
பெற்ற விடுதலையை பேணி பாதுகாக்கவும், உரிமைகளை மக்கள் உணர்ந்து செயல்படவும், அரசியல் சட்ட வல்லுனர்களால் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்குள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 85 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 235 ஆண்டுகளில் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் 31 முறைகள் தான் திருத்தப்பட்டுள்ளது. அதிலும் ஒரு திருத்தம் தேவையற்ற பிரிவுகளை நீக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் தெளிவாக அறிய வேண்டும்.
இந்திய மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து நீதி கிடைக்க வேண்டும். அனைத்து நம்பிக்கையுடைய மக்கள் எழுதவும், பேசவும், சுதந்திரம் தர வேண்டும். தரத்திலும், தகுதியிலும் வாய்ப்பிலும் சமத்துவம் இருக்க வேண்டும். தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாட்டையும், நிலைநிறுத்த சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

தியாக உணர்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடைப்படை உரிமைகள், வழிகாட்டு நெறிமுறைகள், அடிப்படை கடமைகள் ஆகிய பல முக்கியமான அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டம் மூன்றாம் பாகம் பிரிவு எண் 14.லிருந்து பிரிவு எண் 18.வரை   "சம உரிமை" என்பது பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது.
"இந்தியாவில் உள்ள எவருக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் தர அரசு மறுக்கக்கூடாது." (பிரிவு எண். 14.)

சமயம், சாதி, இனம், பால், பிறப்பிடம் அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவும், எந்தக் குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது.

அரசியல் சாசனம் சட்டத்தில் பிரிவு எண் 19.ல் இருந்து 22 வரை "சுதந்திரமாக இருக்கும் உரிமை." பற்றியும், பிரிவு எண் 25.லிருந்து 28.வரை "வழிபாட்டுச் சுதந்திரம்" பற்றியும் பிரிவு எண்.29.லிருந்து 30.வரை.  "கலை கல்விக்கான உரிமை" பற்றியும் பிரிவு எண் 31 லிருந்து 35 வரை "சொத்துரிமை" பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள உரிமைகளை சிறுபான்மை மக்களால் சுதந்திரமாக அனுபவிக்க முடிகிறதா என்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அரசியலமைப்புச் சட்டம் சிதைக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழும்.

"சமயங்களை பெருமைப்படுத்தாவிட்டாலும், சிறுமை படுத்தக்கூடாது." என்று காந்தியடிகள் கூறினார்.

அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் கருப்பு நாளாக பதிவு செய்யப்பட்டு விட்டது. கிருத்துவ பாதிரியார்களும், கன்னி மாதர்களும் கொல்லப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சமய சார்பின்மையை கேலிக்கூத்தாக்கியது.

640 துண்டுகளாக இருந்த இந்தியா ஒன்றானது என்பதோடு, 56 மன்னர்கள் ஆண்ட தமிழகமும் ஒரு ஆட்சியில் வந்தது. ஆனால் மக்கள் ஒன்றுபடவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கமாக இருந்தும், மக்களும், ஆட்சியினரும் அதை உணராததன் விளைவாக சமயபூசல்கள் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

புகை வண்டி நிலையம், அஞ்சல் அலுவலகம், வழக்கு மன்றம், அரசு அலுவலகங்கள் ஆகியவை எல்லா சமய மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமானவை. ஆனால் பெருமாபாலான பொது இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வழிபடும் படங்களும், சிலைகளும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். இத்தகைய போக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் இலக்குக்கு ஏற்புடையதாக இல்லை.
பிரிவு எண் 25 (1) ல் வழிபாட்டுச் சுதந்திரம் என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு தரப்படுகிறது.

"பொது ஒழுங்கு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கும், இந்த பகுதியில் கூறப்பட்டுள்ள மற்றவற்றுக்கும் ஆட்பட்டும், எல்லோரும் தம் மனசாட்சிப்படி செயல்படுவதற்குரிய சுதந்திரம் உடையவர்கள். தம் மதத்தை தழுவ, மேற்கொள்ள மற்றும் பரப்புவதற்கு உரிமை உடையவர்கள்."

இன்றைய நிலையில் ஒரு இந்தியக் குடிமகன், தான் சார்ந்திருக்கிற மதக்கொள்கைகளை சுதந்திரமாக பரப்புவதற்கோ, தான் விரும்புகிற மதத்தை ஏற்றுக் கொள்வதற்கோ அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளை சுதந்திரமாக பெற முடியாமல் தயங்குகிறான்.
வழிபாட்டுத் தலங்களான கோயில்கள், மாதா கோயில்கள், பள்ளி வாசல்கள், சீக்கிய கோயில்கள் என்று பல வழிபாட்டுத் தலங்கள் நாட்டில் இருந்தாலும், உத்திரப் பிரதேச மாநிலம் போன்ற சில இடங்களில் பள்ளி வாசல்களை புதியதாக கட்டுவதற்கும், விரிவு படுவதற்கும், திருத்தி அமைப்பதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்து பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்.

எந்த இடத்தில் வேண்டுமானாலும், தெரு ஓரங்களாக இருந்தாலும் மற்ற மத வழிபாட்டுத் தலங்களை கட்டுவதற்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் முஸ்லிம்கள் புதிதாக ஒரு இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்குதான் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளையெல்லாம் அரசின் கவனத்திற்கு எந்த அளவுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று அறிய முடியவில்லை. அரசின் கவனத்திற்கு வந்தாலும் அரசு ஆவணம் செய்து உதவுகிறார்களா என்பதும் தெரியவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஆழமான தத்துவத்தை அரசும் மக்களும் உணர்ந்திருந்தால் 50 ஆண்டுகளாக மதத்தின் பெயரால் சுதந்திரம் களவாடப்படாமல் இருந்திருக்கும். மகாத்மா காந்தியடிகளை நாம் காப்பாற்றியிருப்போம். பாபரி மஸ்ஜிதை பாதுகாத்திருப்போம், தீவிரவாதம் தொலைந்து போயிருக்கும்.

உரிமைகளை விட கடமைகள் பெரிது அது எல்லோருக்கும் பொதுவானது.
"யாதும் ஊரே, யாவரும் கேளீர்." என்று பகர்ந்த பூங்குன்றனார் வாழ்ந்த தமிழகம், அமைதிப் பூங்காவாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு எண் 47,
"போதையூட்டும் மது வகைகளையும், உடலுக்கு தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும், மருந்துக்காக அன்றி வேறு விதமாக பயன்படுத்துவதை தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்." என்று கூறுகிறது.

தொட்டிலை ஆட்டி விட்டு தூங்கப் போகிற பிள்ளையையும் கிள்ளி விடுவதைப் போல் ஒழுக்க நெறி மேம்பாட்டு முயற்சியை விட, வரிகள் மூலம் அரசு வருமானத்தின் நோக்கமே அதிகமாக தென்படுகிறது. அரசு அனுமதி பெற்று உயர்வகை மது வகைகளை குடிக்கிறார்கள். அப்பாவி அன்றாடம் காய்ச்சிகளோ விஷச்சாராயம் சாப்பிட்டு சாகிறார்கள்.
உரிமையியல் சட்டத்தில் முஸ்லிம்களுக்கென்று தனியாக இருப்பது போலவே கிருஸ்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் இருக்கின்றன. ஆனால் அனைத்து சமய மக்களும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற தனியார் சட்ட ஷரத்துகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல் எழுகிறது. இந்தப்போக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பொது நோக்கையே சிதைத்து விடும். என்பது மட்டுமல்ல இந்திய சமுதாயத்தின் ஒற்றுமையும் சீரழிந்து போகும்.


நான் நானாக, நீ நீயாக தனித்தன்மையைப் பாதுகாத்து நாம் ஒன்றாக செயல்பட்டு நாட்டைப் பாதுகாப்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கமாகும்.
வழக்கறிஞர் அல்ஹாஜ் ஏ.எம்சயீத்,
         தலைவர் J.M.H. அரபிக் கல்லூரி, நீடூர் - நெய்வாசல் .

No comments:

Post a Comment