Tuesday 22 December 2015

அகம் அல்லாஹ்வின் அர்ஷ்!

சூஃபி இப்ராஹிம் ஹள்ரத்
              நாஜிர், ஹமீதிய்யா அரபி பாடசாலை, கோபாலபட்டிணம்

                            " قلب المؤمن عرش الله"
முஃமினுடைய கல்பு அல்லாஹ்வின் அர்ஷாகும் என்ற நபிமொழியின் கருத்தை அறிய வேண்டுமாயின் கல்பு, அல்லாஹ், அர்ஷ் ஆகிய இம்மூன்றைப் பற்றியும் சிறிதளவேனும் விளங்கிக் கொள்வது அவசியமாகும். அப்போது தான் இம்மூன்றுக்கிடையிலான தொடர்பு எத்தகையது ...?  என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கல்பு என்றால் இருதயம் என்று ஒரு பொருள் உண்டு. அது மனிதனின் நெஞ்சின் இடது பாகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சதை துண்டு. அதன் நடுவில் சிறிது வெற்றிடமும் அதில் கருநிற ரத்தமும் காணப்படும். இந்த இதயம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் இறந்த விட்ட மைய்யித்துகளுக்கு கூட உண்டு. ஆனால் முஃமினுடைய கல்பு அல்லாஹ்வினுடைய அர்ஷ் என்ற வாசகத்தில் குறிக்கப்படுகின்ற கல்பு என்ற வார்த்தை இருதயம் என்ற பொருள் கொண்ட மேற்கூறிய சதைதுண்டு அல்ல என்பதை புரிந்து கொண்டால் தான் நபிமொழியின் கருத்து புலனாகும்
الرَّحْمَٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ
20:5. அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
என்ற திருமறை வசனத்திற்கு விளக்கம் தந்த விரிவுரையாளர்கள் அல்லாஹுதஆலா அர்ஷின் மீது ஆதிக்கம் செலுத்தினான் என்று கூறினர். அல்லாஹ்வின் படைப்புகளில் மிகப்பெரியதும் இதர படைப்புகளை தன்னுள்ளடக்கியதுமான ஒரு படைப்பே அர்ஷ் என்பது. அந்த அர்ஷின் மீது அல்லாஹ்வின் ஆதிக்கம் நிலை பெற்று விடும் போது அதனுள் அடக்கமாகிய குர்ஸ், லவ்ஹுல் மஹ்பூல், கலம், ஏழு வானம், ஏழு பூமி இன்னும் அனைத்து படைப்புகள் மீதும் அவன் ஆதிக்கம் பெற்றுள்ளான் என்பதையே இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.
உதாரணத்திற்கு "உலகை ஆண்ட மன்னர்என்ற வார்த்தைக்குள் உலகின் எல்லா பகுதிகளும் அடங்கி அதுவெல்லாம் அந்த மன்னரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. என்பதை போல இங்கும் விளங்க வேண்டும். எதனளவிலும் தேவையற்ற அல்லாஹ் அவன் அமர்வதற்கு அர்ஷ் (அரியாசனம்) மீது தேவையாகுவது எவ்வாறு சாத்தியமாகாதோ அது போலவே சதைப்பிண்டமாகிய இருதயத்திலும் அவன் இடம்பெற முடியாது. ஏனெனில் அரூபியானவனும் வரையறைக்கு அப்பாற்பட்டவனுமாகிய அல்லாஹு தஆலா உருவமைப்பு கொண்ட வரையறைக்குட்பட்ட மனிதனின் இதயமாகிய சதைதுண்டை தனது அர்ஷ் என்று எவ்விதம் கூற இயலும்..?  என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
எனவே இங்கு கூறப்படுகிற கல்பு என்னும் வார்த்தைக்கு பொருள் கூற முற்பட்ட நம் முன்னோர்கள், அது அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட கண்ணால் காண முடியாத ஒரு வஸ்து எனவும் சதை பிண்டமாகிய இருதயத்திற்கும் அவ்வஸ்திற்கும் நெருக்கமான இணைப்பு உண்டு எனவும் கூறியுள்ளனர். அந்த இணைப்பு இல்லையெனில் இருதயம் இயங்காது என்பது உறுதி. இதற்கு ரூஹ் என்றும் சொல்லப்படும்.
இதனை எளிதில் விளங்கிக் கொள்ள ஒரு உதாரணம். மின் விளக்கு. நமது கண்களுக்கு புலப்படுகின்ற மின் விளக்கு எரிய வேண்டுமென்றால் அதற்கு மின் கடத்திகள் வழியாக கண்களுக்கு புலப்படாத மின்சாரம் செல்ல வேண்டும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் விளக்கு எரியாது. அதுபோல மனித உடலாகிய மின் விளக்கு இயங்குவதற்கு இருதயம் என்ற மின் கடத்தி வழியாக (ரூஹ்) கல்பு என்ற மின்சாரம் செல்ல வேண்டும். மனிதனின் நெஞ்சில் இடது பாகத்தில் அமைந்துள்ள சதை துண்டாகிய இருதயத்தை இயங்கச் செய்வதே இந்த மின்சாரம் தான்.
இந்த இடத்தில் இன்னொரு விசயத்தை விளங்கியாக வேண்டும். ரூஹ் என்பது வேறு, மூச்சு, சுவாசம், உயிர் என்பது வேறு. ரூஹ் என்பது மனிதனுக்கு சொந்தமானது. மூச்சு, சுவாசம், உயிர் இவை அனைத்து  உயிரினங்களுக்கும் பொதுவானது.  மூக்கன் வழியாக இருதயத்திற்கு சென்று வருகிற காற்று ஒரு திடப்பொருள் ஆனால் ரூஹ் என்பது திடப்பொருள் அல்ல. இது திடப்பொருளான மின்கம்பி வழியாக செல்கின்ற திடப்பொருளில்லாத மின்சாரத்தை போன்றது. ரூஹை பற்றி அதிகப்படியான விபரங்கள் மனிதனுக்கு தரப்படவில்லை என்பது அல்லாஹ்வின் தீர்ப்பு எனவே சுருக்கமாக விளங்கியதைக் கொண்டு முஃம்னிடைய கல்பு அல்லாஹ்வினுடைய அர்ஷ் என்பதற்கு முஃமினுடைய இதயத்தை இயங்கச் செய்கின்ற ரூஹானது அல்லாஹ்வின் ஆதிக்கம் நடைபெறுகிற இடமாகும் என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு ஆதிக்கம் இடம் பெற்றவர்கள் சம்பூர்ண முஃமின்களாக இருப்பார்கள்.
அவர்கள் நின்றாலும், அமர்ந்தாலும், குனிந்தாலும், நிமிர்ந்தாலும், உண்டாலும், பருகினாலும், உறங்கினாலும், விழித்திருந்தாலும் அவர்களின் இதயம் சார்ந்த சிந்தனை ஓட்டம் அல்லாஹ்வை பற்றியதாகவே இருக்கும். அவர்களின் பார்வை, கேள்வி, பேச்சு, நடை, செயல் அனைத்துமே அல்லாஹ்வின் வல்லமையை வெளிப்படுத்தும் ஆதாரங்களாக அமைந்திருக்கும்.
நாயகம் திருமேனி (ஸல்) அவர்களின் அனைத்து இயக்கமும் இதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. அல்லாஹ்வின் வல்லமையை குத்ரத்தை வெளிப்படுத்தும் சம்பூர்ண ஆதாயமாக திகழ்ந்தார்கள். தங்களின் அருமை தோழர்களையும் அவ்வழியிலேயே நடத்தாட்டி பயிற்சியளித்தார்கள். எனவே ஸஹாபாக்களும் தங்களின் தகுதிக்கேற்றவாறு உன்னத நிலைகளை அடைந்தார்கள் மற்ற நபிமார்களைக் கொண்டு ஈமான் கொண்டவர்களே இத்தகைய உயர்நிலைகளை அடைந்திருந்ததாக குர்ஆன் சான்று பகரும் போது பனி இஸ்ராயில்களுடைய நபிமார்களின் அந்தஸ்தை பெற்ற ஸஹாபாக்கள் ஏன் அடைய முடியாது.
பல்கீஸ் உடைய சிம்மாசனத்தை வெகு சீக்கிரத்தில் என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது யார் என்று நபி சுலைமான் அலை கேட்டபோது அங்கிருந்த சக்தி வாய்ந்த இப்ரீத் என்ற ஜின் இந்த சபை கலைவதற்குள் கொண்டு வருகிறேன் என்றது. ஆனால் அங்கு அமர்ந்திருந்த ஒரு ஞானி கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வந்து சேர்த்தார்.
قَالَ عِفْرِيتٌ مِّنَ الْجِنِّ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّي عَلَيْهِ لَقَوِيٌّ أَمِينٌ
27:39. ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.
قَالَ الَّذِي عِندَهُ عِلْمٌ مِّنَ الْكِتَابِ أَنَا آتِيكَ بِهِ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَٰذَا مِن فَضْلِ رَبِّي لِيَبْلُوَنِي أَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ
27:40. இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்என்று (ஸுலைமான்) கூறினார்.

என்று குர்ஆன் சான்று பகர்கிறதே இது யாருடைய சக்தி..?  மனித சக்தியா அல்லது இறை சக்தியா..?   சிந்திக்க வேண்டாமா..
மரண தருவாயில் தனது அருமை மகளார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்து மரண வஸிய்யத் செய்த அமீருல் முஃமினீன் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தாம் விட்டு செல்லும் பொருளுக்கு உனது இரு சகோதரர்களும், இரு சகோதரிகளும் வாரிசாவார்கள் என்று கூறிய போது அது கேட்டு வியந்த ஆயிஷா (ரலி) அவர்கள், எனக்கு அஸ்மா (ரலி) வை தவிர வேறு சகோதரி யார்..?  எனக்கேட்ட போது தமது மற்றொரு மனைவியின் வயிற்றில் கருவாகியிருந்த குழந்தையை சுட்டிக் காட்டினார்கள். வயிற்றிலிருக்கும் பெண் ஆணா, பெண்ணா..என்று அறிய லட்சக்கனக்காண ரூபாய் மதிப்புள்ள ஸ்கேன் கருவியின் முன் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் இந்த சமுதாயம் ஹஸ்ரத் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் இந்த பார்வையை பற்றி என்ன கூறுகிறது..?  இது மனித சக்தியா..? அல்லது இறை சக்தியா..? சிந்திக்க வேண்டாமா,,?
ஒவ்வொரு ஆண்டும் நைல் நதி வற்றிப்போகும் போது பருவமடைந்த பெண்ணொருத்தியை அலங்கரித்து அவளை நைல் ஆற்றுப் படுகையில் உயிரோடு போட்டால் தான் நைல் நதி ஓடும் என்ற நிலையில் நைல் நதிக்கு நேரில் கடிதம் எழுதி அதன் மூலம் மூடப்பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இன்று வரை வற்றாத ஜீவ நதியாக ஓடச்செய்தார்களே உத்தமர் உமர் (ரலி) அவர்கள் (தப்ஸீர் இப்னு கஸீர் 4/464) து மனித சக்தியா இறை சக்தியின் வெளிப்பாடா...? உணர்வு பெற வேண்டாமா..?
மதினாவிலிருந்து சுமார் 300 மைல்களுக்கு அப்பால் நஹாவந்த் என்ற இடத்தில் யுத்தம் செய்து கொண்டிருந்த படைத்தளபதி ஹஸ்ரத் ஸாரியா (ரலி) அவர்களையும் படைகளையும் மதினாவில் மஸ்ஜிதே நபவியின் மிம்பர் படியில் நின்றவாறே பார்த்து வெள்ளிக்கிழமை குத்பாவுக்கிடையே " யாஸாரியா... அல் ஜபல் என்று எச்சரிக்கை விடுத்தார்களே ஸைய்யிதினா உமர் (ரலி) அவர்கள் இந்த பார்வை பேச்சு யாருடைய சக்தியை வெளிப்படுத்துகிறது...?  முன்னூறு மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த சப்தத்தை செவிமடுத்தார்களே அந்த தளபதி ஹஸ்ரத் ஸாரியா (ரலி) அவர்களின் செவிப்புலன் யாருடைய சக்தியை பிரகடனப்படுத்துகிறது சிந்தித்துணர வேண்டாமா..? ( அறிவிப்பு பைஹகி மிஷ்காத் 546 )
உமரின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது பொய்யாகி விடுமா..?
தூக்கு மேடையில் ஏற்றப்பட்ட ஹஸ்ரத் குபைப் (ரலி) அவர்களது உடல் எதிரிகளின் அம்புகளால் சல்லடையாய் துளைக்கப்பட்ட போது தமது யிர் பிரியும் முன் ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு அந்த வீரத்தியாகி குபைப் (ரலி) அவர்கள் கூறிய ஸலாமை பெருமானார் (ஸல்) கேட்டு "வஅலைக்கும் ஸலாம் யாகுபைப் " என்று பதிலளித்தார்களே  இது யாருடைய சக்தியின் வெளிப்பாடு...?சிந்தித்து உணர்வு பெற வேம்டாமா...?
                                                                            ( ஆதாரம் பத்ஹுல்பாரி 7 : 307)
வரலாற்றில் சில துளிகள் தான் இவை. ஆனால் முஃமின்களின் கல்புகளை ஆட்சி பீடமாக்கி அவர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் செயல்களையும் தனது வல்லமை வெளிப்படும் தலங்களாக (மழ்ஹராக) ஆக்கிய வல்ல அல்லாஹ்வே புகழுக்குரியவன்.
மேற்கூறியவாறு ஈமானுடைய சம்பூர்ணத்துவம் அடையப்பெறாதவர்களின் கல்புகள் ஷைத்தானின் சிம்மாசனங்களாக ஆகிவிடுகின்றன. அவர்களின் பார்வை, பேச்சு, கேள்வி, நடை, செயல்கள் அனைத்துமே ஷைத்தானித் தன்மைகளை வெளிப்படுத்துவதாகவே அமையும்.
وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَٰنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ
43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
ஆதமுடைய மக்களின் கல்புகளை ஷைத்தான்கள் நெருங்காமல் இருந்தால் வானங்களின் ஆட்சியை பார்த்து விடுவார்கள் என்ற நபிமொழியும் இதையே உணர்த்துகிறது.
ஷைத்தான் உங்களின் பயங்கர எதிரி என்று அல்லாஹு தஆலாவே பகிரங்கமாக அறிவித்த பிறகும் ஷைத்தானை வரவேற்று தங்களின் இதயாசனங்களில் அமர்த்தி ஆட்சி புரியச்செய்யும் அவல நிலை என்று நீங்குமோ அன்று தான் அகம் அல்லாஹ்வின் அர்ஷ் என்ற சத்திய நிலை சாத்தியமாகும். இல்லையேல் அது எட்டா கனியாகவே இருக்கும்.

எலாம் வல்ல அல்லாஹு தஆலா சத்தியத்தை விளங்கிட நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்

No comments:

Post a Comment