![]() |
MANBAUS SALAH ARABIC COLLEGE TUTICORIN, TAMILNADU, INDIA |
நன்மையின் ஊற்று பிறப்பெடுத்த வரலாறு
கல்வித் தந்தை அல்ஹாஜ் A.M ஷம்சுத்தீன், B.A. , அவர்கள்.
தலைவர், மன்பவுஸ்ஸலாஹ், தூத்துக்குடி.2.
அல்லாஹ்வின்
அருளால் அண்ணல் நபி ஸல் அவர்களின் அருளாசியால் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது நமது மன்பவுஸ்ஸலாஹ்
அரபிக்கல்லூரி. இந்த தருணத்தில் இந்த நன்மையின் ஊற்று பிறப்பெடுத்த வரலாற்றை நமது
நினைவுகளில் அசைபோட்டுக் கொள்வது நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது இனி
கடக்க வேண்டிய தூரத்தை துரிதப்படுத்த உதவும்.
24/10/1976. அன்று தான் மன்பவுஸ்ஸலாஹ் என்னும் பொங்கும்
பூம்புனல் பிரளயம் எடுத்த திருநாளாகும். இன்று இம்மதரஸா 25 ஆண்டுகள், மார்க்க
சேவையில் பெரும் பங்காற்றி மாபெரும் மார்க்க அறிஞர்களை உருவாக்கியிருக்கிறது.
இன்று இம்மதரஸா 25 ஆண்டுகள் முடிந்து வெள்ளிவிழா கொண்டாடுவதை நினைக்கும் பொழுது,
துவக்க நாளன்று நானும் பல பெரியோர்களும் இந்த கியாமத் நாள் வரை நீடித்து நிலைத்து
சன்மார்க்க சேவை செய்ய வேண்டுமென்று இறைவனிடம் கையேந்தினோம். அதனை இறைவன் ஏற்றுக்
கொண்டான் என்பதற்கு அறிகுறியாக இந்த 25 ஆண்டுகள் வெகு சுலபமாக கடந்து நடைபெற்றுக்
கொண்டு வருகிறது.
இந்த மதரஸாவை
நினைவிற்கூறும் விதமாகவும் வருங்கால சந்ததியினர் இதன் வரலாற்றை அறிய வேண்டும் என்ற
நோக்கத்தில் வெள்ளிவிழா மலர் வெளியிட்டு அதில் மதரஸாவின் வரலாற்றின் விபரங்களை
சிறு குறிப்பாக்க தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மலரில் பல்வேறு தலைப்பில் பல மார்க்க அறிஞர்களின் கட்டுரைகள்
அமைந்திருக்கிறது. இந்த சிறப்பான அம்சம் இந்த மலரை ஒவ்வொருவரும் தன் வீட்டில்
வைத்து பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நிச்சயமாக இந்த மலர் மார்க்க
விசயத்தில் நறுமணம் தருகிறது என்பதில் ஐயமில்லை.
1962 ம் ஆண்டு
எங்களின் வர்த்தக நிறுவனமான ஏ.எம் அஹமது கம்பெனியின் கிளை தூத்துக்குடியில்
ஆரம்பிக்கப்பட்டு அதன் பொருப்பாளராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். முற்றிலும்
மார்க்க விசயங்களில் முழுமையாக ஈடுபட்டு ஐந்து கடமைகளையும் இறையருளால் சிறப்பாக
கடைபிடித்து வந்த எனக்கு இந்த ஊர் முஸ்லிம்களின் மார்க்க ஈடுபாடுகளை ஊன்று கவனித்த
போது அது மனதிற்கு பெரும் கவலையைக் கொடுத்தது.
சிலர்
தொழுகையிருந்தும் தொழ பள்ளிவாசல் இல்லாமல், பலர் தொழுகை மற்றும் மார்க்க
விசயங்களில் அதிக ஈடுபாடு இல்லாமல் இறையச்சம் இல்லாமல் இருந்து வந்தார்கள்.
அவர்கள் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியவர்களாக இருந்து வந்தார்கள்.
நாடு சுதந்திரம்
அடைவதற்கு முன் இந்த ரில் மேமன் முஸ்லிம்கள் பெரிய வியாபாரிகளாக
இருந்திருக்கிறார்கள். சவுத் ராஜா தெரு, எம்பரார் தெரு, பெரைரா தெரு, பீச் ரோடு
ஆகிய இடங்களில் அவர்களுடைய வியாபாரம் சிறப்பாக நடந்திருக்கிறது. தற்பொழுது INDIAN
CHAMBER OF COMMERCE என்ற பெயரில் நடந்து வரும் வியாபாரிகள் சங்கத்தை
நிறுவியதும் முஸ்லிம்களே.
இதன் முதல்
தலைவரும் முஸ்லிமாகவே இருந்திருக்கிறார். நாடு சுதந்திரம் அடைந்த பின் எல்லா மேமன்
முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு சென்று விட்டதாக இங்குள்ள சகோதர மத பெரிய
வியாபாரிகள் மூலம் தெரிய வந்தது. அந்த சூழ்நிலையில் இருந்த உள்ளூர்
முஸ்லிம்களுக்கு மார்க்க பற்றுதலும், ஐந்து கடமைகளையும் நிறைவேற்ற தூண்டுகோலாக
இருக்க ஒரு அரபி மதரஸா நிறுவ வேண்டுமென்ற ஒரு எண்ணத்தை அல்லாஹ் என் உள்ளத்தில்
ஏற்படுத்தினான்.
இந்த நல்ல
நோக்கத்தை நிறைவேற்ற எண்ணி தெற்கு புதுத்தெரு குர்ஆன் மதரஸா கட்டிடத்தில் ஒரு
ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டு அதில் அக்கால ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர்
மர்ஹும் ஜனாப் P.A. அப்துல் கபூர்
மற்றும் காரியதரிசி உறுப்பினர்கள் மற்றும் மர்ஹும் ஹாஜி K.M. அப்துல் காதிர்,
ஜனாப் B. காதிர் முஹைதீன், அல்ஹாஜ் A. அப்துல் கபூர் சாஹிப் மற்றும் அனைத்து தெரு
ஜமாத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் ஒன்று கூடி பல மணி நேரம் விவாதித்து
கடைசியாக ஆண்களுக்கு ஒரு அரபி மதரஸா ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.
அந்த கால
கட்டத்தில் ஜாமிஆ பள்ளி நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள் தேர்தல் நடத்துவதில்
சகோதரர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டு ஜமாத்தார்களுக்கிடையே பிளவும் ஏற்பட்டது.
கோர்ட்டுகளுக்கு வழக்குகள் போய் நிர்வாகத்திற்கு பலமுறை இடையூறு ஏற்பட்டதால்
கூடியிருந்த அனைவருமே இந்த நிர்வாகத்தை தனி நிர்வாகமாக SOCIETY ACT படி சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு பதிவு
செய்ய வேண்டுமென்று விரும்பினார்கள்.
இதல்லாமல் ஒரு
கல்வி ஸ்தாபனம் கல்வியாளர்கள் பற்றாளர்கள் கொண்டு நிர்வகிப்பது தான் அதன்
தொய்வில்லாத தொடர் சேவைக்கு வழிவகுக்கும். இந்த வகையில் பொதுமக்களின் நேரடி
தலையீடின்றி கல்வி வளர்ச்சியை மட்டும் குறியாக கொண்ட கல்வித்தாகமுடைய அதற்காக உடல்
பொருள் ஆவி அனைத்து வழிகளிலும் உழைப்பெடுக்க வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள்க்
கொண்டு ஒரு தனி கமிட்டி அமைத்து செயல்பட்டால் கல்வி ஸ்தாபனத்தின் எதிர்காலம்
பிரகாசமாக அமையும்.
இதற்கு நல்லொரு
உதாரணம் தமிழகத்தின் தாய் கல்லூரியாம் வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத் அரபிக்
கல்லூரி. அங்கு பள்ளிவாசல் கமிட்டி வேறு மதரஸா கமிட்டி வேறு. அது இன்று நூற்றாண்டை
கடந்து வீறு நடை போடுகிறது. இதன்படி மதரஸாவிற்கென ஒரு தனி கமிட்டி நிறுவப்பட்டு
அது SOCIETY ACT படி பதிவு
செய்யப்பட்டது. இந்த மதரஸாவின் தலைவராக நானும் காரியதரிசியாக ஜனாப் K.M. அப்துல் காதர் ஹாஜியார் அவர்களும்
நியமிக்கப்பட்டோம். ஜாமிஆ பள்ளியின் தலைவர், காரியதரிசி ஆகிய இருவரும் இந்த
மதரஸாவின் உதவி தலைவராகவும் உதவி காரியதரிசியாக இருக்க வேண்டுமென்று முடிவு
செய்யப்பட்டது.
தெற்கு புது
தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான அரபி மதரஸா கட்டிடத்தில் தேவையான
மராமத்து செலவுகளைமதரஸா கமிட்டியால் செலவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஒரு
சிறந்த ஆசிரியரை நியமிக்க வேண்டுமென்று காயல்பட்டிணம் சென்று மர்ஹும் செய்யது
இப்ராஹிம் ஆலிம் அவர்களின் ஆலோசனைப்படி மர்ஹும் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது
நூஹு ஹழ்ரத் அவர்களை நாஜிராக நியமனம் செய்து முதன் முதலாக 7 மாணவர்களைக் கொண்டு
இம் மதரஸா தெற்கு புது தெரு மத்ரஸா கட்டிடத்தில் 24/10/1976 ( ஹிஜ்ரி 30/10/1396. ) அன்று
திறக்கப்பட்டது. அந்த முதல் ஏழு மாணவர்களில் இன்றய மன்பவுஸ்ஸலாஹ் முதல்வர் மௌலானா
மௌலவி அஹ்மது ஹழரத் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதரஸாவின் அன்றாட
செலவுகளுக்கு ஈடு செய்யும் வகைக்கு தூத்துக்குடியில் சென்னா வியாபாரம் செய்த
மர்ஹும் அல்ஹாஜ் அப்துல் காதர் அவர்கள் எட்டையாபுரம் ரோட்டில் தன் வீட்டு COMPLEX ல் ஒரு கிட்டங்கியை மதரஸாவுக்காக ஒதுக்கி அந்த
வகையில் மாதம் ரூ 1000/- அளித்து
வந்தார்கள். நானும் என் கம்பெனியில் துறைமுகத்தில் கப்பல் இறக்குமதி வேலையில் உணவு
தானியங்களை மழையிலிருந்து பாதுகாப்பதற்காக தார்பாய்களை சில சமயங்களில் வாடகைக்கு
எடுத்தும் சில சமயங்களில் சொந்த தார்பாய்களையும் உபயோகித்து வந்தோம். தில்
மதரஸாவுக்கென்று எங்கள் கம்பெனி சார்பாக 30 தார்பாய்களை ஒதுக்கி அதிலிருந்து
கிடைக்கும் வாடகையாக ரூ 1000. மாத வருமானமாக மதரஸாவுக்கு செலுத்தி வந்தோம்.
காலப்போக்கில்
மதரஸாவின் போதனா முறைகளில் முன்னேற்றம் கண்டு பல மாணவர்கள் மதரஸாவில் சேர
விரும்பினார்கள். இட வசதி போதாதினாலும் மதரஸா ஒரு தெருவில் வீட்டுக்குள்
அமைந்திருப்பது பொது மக்களின் கவனத்திற்கு வராமலும் இருந்தது. இதனால் இந்த மதரஸாவை
பள்ளிவாசலுக்கு கொண்டு போனால் பொது மக்களின் தொடர்பு ஏற்பட்டு அதனால் மதரஸாவுக்கு
உதவிகள் கிடைக்குமென்றும் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் விருப்பத்தை
தெரிவித்தோம். அந்த நேரத்தில் பள்ளிவாசலிலும் தொழுகைக்கு இடமில்லாமல் பள்ளிவாசல்
பள்ளிவாசல் விஸ்தரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.
ஜாமிஆ பள்ளிவாசல்
தலைவர் மர்ஹும் ஜனாப் P.A. அப்துல் கபூர்
மரைக்காயர் அவர்கள் பள்ளிவாசல் பக்கத்தில் மதரஸாவுக்கென தனி கட்டிடம் கட்டுமாறும்
பள்ளிவாசல் நலனை கருத்தில் கொண்டு அதை மதரஸா அமைப்பில் கட்டாமல் பள்ளிவாசல்
உபயோகத்துக்கும் ஏற்ற வகையில் கட்ட வேண்டும். இந்த வகையில் மதரஸாவின் புதிய
கட்டிடம் வடிவமைக்கப்படும் போது வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கும் பயன்படுத்திக்
கொள்ள முடியும். மற்ற நேரங்களில் அரபிக்கல்லூரியும் இங்கு நடத்த முடியும் என்று
விருப்பம் தெரிவித்தார்கள்.
அதன்படி
கட்டுமானம் கட்டுவதற்கு மதரஸா நிதியிலிருந்து பெருந்தொகை செலவிடப்பட்டது. ஜாமிஆ
பள்ளிவாசல் நிதியிலிருந்தும் கட்டுமான பணிக்கு கொடுக்கப்பட்டது. இரண்டு
ஸ்தாபனங்களின் பேருதவியைக் கொண்டு அல்லாஹ் இப்பொழுது நடந்து வரும் மதரஸா
கட்டிடத்தை கட்டுவதற்கு உதவி செய்தான்.
காலப்போக்கில்
மாணவர்களின் எண்ணிக்கை கூடியதாலும் நிர்வாக செலவு கூடியதாலும் மேலும்
மாணவர்களுக்கு வீடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவு நிறுத்தப்பட்டு மதரஸாவிலேயே
உணவு சமைத்துக் கொடுக்கும்படி வசதி செய்யப்பட்டதால் மாத வருமானம் ரூ 2000. கொண்டு
மதரஸாவை நடத்துவது சிரமாமயிருந்தது. ஜாமிஆ மஸ்ஜித் நிரவாக சபையும் மன்பவுஸ்ஸலாஹ்
நிர்வாக சபையும் ஒன்று கூடி நிதி பற்றாக்குறை இருப்பதால் மார்க்க கல்வியில் மதரஸா
சிறந்து விளங்குவதால் இதனை நல்லவிதமாக நடத்த வேண்டுமென்று முடிவு செய்து மதரஸா
உஸ்தாதுமார்கலின் மாத ஹதியா, மின்சார செலவு, மற்றும் இதர செலவுகளை பள்ளி
நிர்வாகத்திலிருந்து செய்வதாக ஒத்துக் கொண்டு தீர்மானமும் நிறைவேற்றி செயல்படுத்தப்பட்டது.
மேலும் மதரஸா
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெரும் வரை இந்த உதவிகள் தொடர வேண்டும் என்றும்
தீர்மானிக்கப்பட்டது. தற்பொழுது பள்ளிவாசலிலிருந்து உஸ்தாதுமார்களின் மாத
ஹதியாவிலிருந்து முக்கால் பகுதியை ஜாமிஆ பள்ளி நிர்வாகம் ஏற்று நடத்தி வருகிறது.
மதரஸா நிர்வாகம் அவ்ரகளுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது.
செலவுகள் கூடிக்
கொண்டே போனதினால் இதற்கு நிரந்தர வருமானம் ஏற்பாடுத்த வேண்டும் முடிவு செய்தனர்.
ஜாமிஆ பள்ளிக்கு எதிரிலுள்ள கட்டிடங்கள் விலைக்கு வாங்கி அதில் ஷாப்பிங்
காம்ப்ளக்ஸ் கட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு பெருந்தொகை தேவைப்பட்டதால்
மர்ஹும் K.M. அப்துல் காதர்
ஹாஜியார் அவர்கள் மதரஸாவிற்காக தன் வீட்டிற்கு பக்கத்தில் ஒதுக்கிய கிட்டங்கியை
அவர்கள் தங்கள் சொந்த உயோகத்துக்கே வைத்துக் கொண்டு அதற்கு சந்தை விலை மதிப்பு
செய்து அந்த தொகையை கிரேட் காட்டன் ரோட்டில் மதரஸாவிற்கு வாங்கும் கட்டிடத்திற்கு
கொடுத்தார்கள்.
A.M. அஹமது
கம்பெனியிலிருந்தும் நிதி உதவி பெற்று இந்த இரண்டு உதவியைக் கொண்டு ஷாப்பிங்
காம்ப்ளக்ஸ் கட்டிடம் வாங்கப்பட்டது. இந்த கட்டிடங்களை கட்டுவதற்கு CENTRAL WAKF
BOARD ல் இருந்து 12 வருட கால
கடனாக ரூ 11,00,000 பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த மதரஸாவுக்கு
K.M. அப்துல் காதர்
ஹாஜியார் அவரகளுக்கு பிறகு அவருடைய மகனார் K.M.A. மீரான் அவர்கள் காரியதரிசியாகவும், மதரஸாவின்
வளர்ச்சிக்கு பெரும் உதவியாகவும் இருந்து வருகிரார்கள். M.S. தாஜுத்தீன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்
சிலர் மிகுந்த ஆர்வத்துடன் மதரஸா வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிரார்கள். அல்லாஹ்
அவர்கள் சேவைக்கு நற்கூலியை கொடுப்பானாக.
தற்சமயம்
மதரஸாவின் நிதி விலைவாசி உயர்வாலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதாலும் போதியதாக
இல்லை. ரமழான் மாதத்தில் வெளியூரிலிருந்து வசூலிக்கப்படும் தொகையும், ஷாப்பிங்
காம்ப்ளக்ஸிலிருந்து உத்தேசமாக மாதம் 20,000 வாடகை வந்தாலும், இந்த நிதி
பற்றாக்குறையை ஈடு செய்ய முடியவில்லை. மதரஸாவின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து மாத
வாடகை ஒழுங்காக வசூலாவது இல்லை. சுமார் 2,00,000 வரை நிலுவையிலிருக்கிறது.
தூத்துக்குடி
மதரஸா ஆரம்பிக்கப்பட்டு அங்கு திருக்குர்ஆனுடைய விரிவுரையும் விளக்கங்களும்
மற்றும் மாணவர்கள் தினமும் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்வதும் அந்த ஊருக்கு பெரிய
பரக்கத்தாக அமைந்திருக்கிறது. இந்த பரக்கத்தின் பலனை கீழ் கண்டவறரின் மூலம்
உணரலாம். ஜாமிஆ பள்ளிவாசல் பழைய கட்டிடம் ஓட்டுக்கூரையில் சிறு பள்ளியாக
அமைந்திருந்தது. அதனை விரிவுபடுத்த வேண்டுமென்று சொல்லி வந்தேன். பலரும் அதையே
விரும்பினார்கள். ஜாமிஆ பள்ளிவாசலிலும் அந்த நேரத்தில் சுமார் 1,00,000 வரை
நிதியிருந்தது.
அதனை வைத்து
அல்லாஹ்வை நம்பி பள்ளி கட்ட ஆரம்பிக்கலாமென்று சொல்லி ஒரு ஜும்ஆ முடிந்ததும்
என்கையால் முதல் ஓடு இறக்கப்பட்டது. அனைவரும் துஆ செய்தோம். ஜாமிஆ பள்ளி தலைவர்
அவர்களிடம் பள்ளியை கட்டிமுடிக்க தேவையாந நிதியை வசூலிக்க ஒரு யோசனையும் சொன்னேன்.
அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் ஜாமிஆ பள்ளிவாசலின் புதிய கட்டிடம் இந்த இரண்டு
தொகையைக் கொண்டே கட்டி முடிக்கப்பட்டது. வெளி ஆள் யாரிடமும் வசூல் பண்ணவில்லை.
இநத தருணத்தில்
மஸ்ஜிதே நூர் என்ற ஒரு பள்ளிவாசல் 1973 ல் புதிய துறைமுக பகுதியில் எங்கள்
கம்பெனியால் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு பல முஸ்லிம் சகோதரர்கள் இருந்தும்
தொழுகைக்கு இடமில்லாமலும் ஜும்ஆவுக்கு டவுணுக்கு போக முடியாமலும் சிரமப்பட்டுக்
கொண்டிருந்தார்கள். எங்கள் கம்பென் புதிய துறைமுகத்தில் கடலில் கருங்கல் மற்றும்
மண்ணைக்கொட்டி கடலை தரையாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில்
நல்ல கருங்கல்லையும் தரம் குறைவானது என்று இன்ஜினியர்கள் சிலர் கடலில் கொட்ட
அனுமதிக்கவில்லை. அப்படி ஒதுக்கிய கல்லை சேர்த்து அப்பகுதியில் ஒரு பள்ளியை
உருவாக்க அல்லாஹ் உதவி செய்தான். அல்லாஹ்வின் உதவியால் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல்
துறைமுகத்துக்கு வரும் சமுதாய மக்களுக்கு மார்க்க கடமைகளை நிறைவேற்ற பேருதவியாக
இருந்து வருகிறது. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. எல்லோருக்கும் அல்லாஹ் உதவி
செய்வானாக.
மதரஸாவின்
வளர்ச்சியோடு 1.) பிரையன்ட் நகரில்
மஸ்ஜிதே பிலால் என்ற பள்ளிவாசலும் 2.) ஸ்பிக் நகரில்
ஒரு பள்ளிவாசலும். 3.) அண்ணா நகரில்
முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளிவாசலும். 4.) சிவந்தாங்குளத்தில்
மஸ்ஜிதே தக்வா பள்ளிவாசலும். 5.) ஜாஹிர் ஹுஸைன்
நகரில் ஒரு பள்ளிவாசலும். 6.) முத்தம்மாள்
காலனியில் மஸ்ஜிதுல் முகர்ரம் என்ற பள்ளிவாசலும். 7.) காதிரிய்யா தைக்கா என்ற இடத்தில் மஸ்ஜித்
கட்டப்பட்டு இப்பொழுதும் அங்கு தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
மில்லர்
புரத்தில் மஸ்ஜிதே அஃலா என்ற பள்ளிவாசல் உருவாகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு
மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்ட தெர்மல் பவர் ஸ்டேசனை சேர்ந்த கேம்ப் 1 ல் ஒரு
பள்ளிவாசலும் கேம்ப் 2 ல் ஒரு பள்ளிவாசலும் கட்டி முடிக்கப்பட்டு எல்லாயிடங்களிலும்
தொழுகை மற்றும் அமல்கள் சிறப்பாக நடைபெறருக் கொண்டு வருகிறது. இதனை அல்லாஹ்
கியாமத் நாள் வரை நடைபெற அல்லாஹ் உதவி செய்வானாக.
மதரஸாவின்
தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பிறகு மேற்படி 10 புதிய பள்ளிவாசல்கள்
உருவாகியிருக்கிறது. மதரஸா ஆரம்பித்த போது சிறியதாக இருந்த ரஹ்மத்துல்லாஹ் புரம்
பள்ளிவாசல், முஹம்மது ஷாதுலிய்யாபுரம் பள்ளிவாசல் இப்போது விஸ்தரிக்கப்பட்டு ஜும்ஆ
பள்ளியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களிடையே மார்க்க பற்றுதல் மேலேங்கியிருக்கிறது
என்பது தெளிவாகிறது. இதற்கு காரணம் இந்த ஊரில் மார்க்க ஒளியை பரப்ப ஏற்றி வைத்த
மன்பவுஸ்ஸலாஹ் என்ற தீபம் தான் என்பது வெள்ளிடை மலை.
அந்த காலத்தில்
பொருளாதாரத்தில் நமது முஸ்லிம்களின் நிலைமை ரொம்பவும் பரிதாபமான நிலையில்
இருந்தது. பலர் கடல் தொழிலிலும் உப்பளத் தொழிலாளியாகவும் இருந்து வந்தார்கள். வசதி
உள்ளவர்களென்று சொல்வதற்கு இரண்டு கம்பெனியை தவிர வேறு யாரும் இல்லை. இந்த
கம்பெனியைக் கொண்டு உள்ளூர் ஏழைகளுக்கும் வெளியூரிலிருந்து பள்ளிவாசல் மற்றும்
மற்ற தேவைகளுக்காக வரும் ஏழைகளுக்கும் உதவி செய்து வந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இன்று நம் சகோதர
மக்கள் வியாபாரத்திலும் மற்றும் பல துறைகளிலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு
இருக்கிறார்கள். இவைகளெல்லாம் மதரஸா ஆரம்பித்ததால் மார்க்க சேவையும் பொருளாதார
முன்னேற்றமும் ஏற்படும் என்ற எண்ணுடைய எண்ணம் நிறைவு பெற்றிருக்கிறது. என்பதை
மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வளவு
முன்னேற்றத்திற்கும் கரணமாயிருந்த இந்த மதரஸாவை தேடி மார்க்க கல்விக்காக
வருடந்தோரும் பல மாணவர்கள் வருகிறார்கள். இட நெருக்கடி காரணமாக 50 - 60
மாணவர்களுக்குள்ளாகவே சேர்க்க முடிகிறது. மார்க்க கல்வி தேடி வருகிறவர்களை
இடமில்லை என்று திருப்பி அனுப்புவது மார்க்கத்திற்கு புறம்பானது. இந்த
மதரஸாவுக்கென்று புறநகரில் கல்லூரிக்கு ஏற்ற சூழலில் ஒரு தனி கட்டிடம் அமைத்து
அதில் அதிகமான மாணவர்களை சேர்த்து சிறந்த ஆலிம்களை உருவாக்க வேண்டும்.
தற்போதய
மன்பவுஸ்ஸலாஹ் கட்டிடத்தில் மதரஸாவின் ஒரு சிறு பிரிவை நடத்த வேண்டும். மதரஸாவின்
கட்டுமான பணியை பூர்த்தி செய்து தர அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக. நாம்
அதற்காக முயற்ச்சிப்போமாக. துஆ செய்வோமாக. இந்த மதரஸாவுக்கு உதவி ஒத்தாசைகள்
செய்து வருகிற ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் உள்ளூர்
வெளியூர் சந்தாதரர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு அவர்களின் ஈருலக நல்வாழ்விற்காக
எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். அருள் செய்வாய் யா அல்லாஹ்.
ஈராண்டுகள் என்னை சுமந்த தாய்
ReplyDelete