Tuesday 22 December 2015

உயிருள்ள ஜனாஸாக்கள்


பக்தாதிலிருந்து 40 மைல் தொலை தூரத்தில் ஹஸ்ரத் (ஸல்)மான் பார்ஸி (ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. இதன் காரணமாக அந்த ஊருக்கே (ஸல்)மான் பாக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பழைய பெயர் மதாயின். இது ரொம்ப காலமாக ஈராக்கின் தலை நகரமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலை தூரத்தில் நாயகத்தோழர்களான ஹஸ்ரத் ஹுதைபத்துல் யமான் (ரலி) ஹஸ்ரத் ஜாபிர் ப்னு அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ருகள் உள்ளது. அருகே தஜ்லா நதி ஓடுகிறது.


ஹஸ்ரத் ஹுதைபா (ரலி) அவர்கள் கப்ரில் தண்ணீர் புகுந்தது. ஹஸ்ரத் ஜாபிர் (ரலி) அவர்களின் கப்ரிலும் அது வெளிப்பட்டது. இந்த நிலையில் முதலாம் பைசல் மன்னர் மற்றும் ஈராக் தலைமை முஃப்தி ( நீதிபதி ) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இரு ஸஹாபாக்கள் தோன்றி எங்களின் கப்ருகளை இடமாற்றுங்கள் என்று கூறினார்கள்.
முஃதி சாஹிப் அவர்கள் கப்ரை தோன்றி புனித உடல்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற ஃபத்வா கொடுத்தார். மன்னர் அதற்கான தேதி முடிவு செய்து பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சியினை காண துருக்கி மற்றும் எகிப்து நாட்டிலிருந்து அரசாங்க தூது குழுவினர் குறிப்பிட்ட தேதியில் வந்து சேர்ந்தனர். வெளிநாடுகளிலிருந்து எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு கொள்கை கோட்பாடுகளில் உள்ளவர்களுமாக சுமார் ஐந்து லட்சம் பேர் மதாயினில் ஒன்று கூடினர்.

அந்த சிறிய நகரம் ரண்டாம் பாக்தாதாக காட்சி அளித்தது. ஹிஜ்ரி 1350. துல்ஹஜ் மாதம் கடைசி பத்தில் 1932 ஏப்ரல் மாதம் திங்கள் கிழமை பகல் 12. மணிக்கு உலக நாடுகளின் தூதர்கள் ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னர் பைசல் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஹஸ்ரத் ஹுதைபா (ரலி) அவர்களின் புனித உடலும் பின்னர் ஜாபிர் (ரலி) அவர்களின் பூத உடலும் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.
மன்னர் பைசல் ஈராக்கின் தலைமை முஃப்தி துருக்கி குடியரசின் அமைச்சர் முக்தார் பட்டத்து இளவரசர் பாரூக் ஆகியோர் புனித உடல்களை மிகுந்த மரியாதையோடு பெற்று அதற்காக விசேசமாக உருவாக்கப்பட்ட கண்ணாடி பேழையில் வைத்தார்கள்.

அந்த இரு ஸஹாபாக்களின் புனித உடலை பொதிந்திருந்த கஃபன் துணி மட்டுமல்ல அவர்களின் தாடி முடி கூட நல்ல நிலையில் புத்தம் புதிதாக இருந்ததை பார்த்தால் பதிமூன்று நூற்றான்டு காலத்திற்கு முன்புள்ள பழமை வாய்ந்த ஒரு ஜனாஸாவாக அது இல்லாமல் சில மணி நேரத்திற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதை போன்று புதிய ஜனாஸாக்களாக இருந்தது.

இதில் மிகுந்த ஆச்சரியத்திற்குரிய விசயம் என்னவென்றால் அந்த இரு ஸஹாபாக்களின் கண்கள் புத்துயிரோடு ஒளி வீசிக்கொண்டிருந்தது தான். பல பேர் அதில் பார்வையை செலுத்தினர். ஆனால் அவர்களால் கூர்ந்து பார்க முடியவில்லை. பெரிய டாக்டர்கள் எல்லாம் இதைக் கண்டு வியந்தனர். ஏனெனில் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் அதன் பார்க்கும் சக்தியை இழந்து விடும்.

ஆனால் இங்கு பதிமூன்று நூற்றாண்டு காலமாகியும் அவர்களின் கண்கள் அப்படியே கெடாமல் உள்ளது. ஜெர்மனை சார்ந்த கண் மருத்துவ நிபுணர் இதை கண்ணுற்று உடனே அந்த இடத்திலேயே தலைமை முஃப்தியின் கரம் பற்றி முஸ்லிமாகிவிட்டார். இஸ்லாம் சத்தியமானது என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு என்ன தேவையிருக்கிறது. என்று கூறினார்.

புனித பேழையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவர்களின் முகத்திலிருந்து கஃபன் விலக்கப்பட்டது. அந்த புனித உடலுக்கு இராக் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் கூட்டம் கூட்டமாக வந்து எல்லோரும் ஜனாஸாவை பார்த்து மெய்சிலிர்த்து செய்வதறியாது திகைத்து நின்றனர்.

வாழ்க்கையின் கிடைப்பதற்கரிய பாக்கியம் கிடைக்கப் பெற்றதை எண்ணி எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினர். பின்னர் எல்லோரும் கூட்டமாக சேர்ந்து ஜனாஸா தொழுகை நிறைவேற்றினர். மன்னர்களும் உலமாக்களும் புனித உடல்கள் வைக்கப்பட்டிருந்த அந்த பேழையை தங்களின் தோள் மீது சுமந்தனர்.

பிறகு உலக நாட்டு தூதர்கள் உயர் அதிகாரிகள் தோள்கொடுக்க தொடர்ந்து மற்றவர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கப்பெற்றது. விமானங்கள் பூக்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தின. வழிநெடுக பெண்களும் பேழையை ஜியாரத் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்திற்குள் இரண்டும் சல்மான் பாக் கப்ருஸ்தானை அடைந்தது.
அல்லாஹு அக்பர் என்னும் முழக்கம் விண்ணைப்பிளக்க இஸ்லாத்தின் யிருள்ள இரு தியாகிகளின் புனித உடல்கள் ஹஸ்ரத் (ஸல்)மான் பார்ஸி (ரலி) அவர்களின் கப்ருக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் பாக்தாத் திரையரங்குகளில் இந்த பிலிம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கண்ணுற்ற பாக்தாத் வாழ் முஸ்லிமல்லாத பல பிரமுகர்களின் குடும்பங்கள் இஸ்லாத்தில் இணைந்தன.

தகவல் மஆரிப் மாத இதழ். ஜனவரி 1979 ஆஜம்கட் - ஸஉபி.
ஆதாரம். ஏக் - ஆலமீ - தாரீக். ( ஓர் உலக வரலாறு.)

இறைவழியில் உயிர்நீத்த ஷுஹதாக்கள் தியாகிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த சமீப காலத்து நிகழ்ச்சி சரியான சான்று. சத்திய இஸ்லாத்தின் சத்தான சான்றுகள் இது மாதிரி நிறைய இருக்கின்றன. அவற்றில் மேலும் சிலவற்றை பார்ப்போம்.

நபித்தோழர்களில் அப்துல்லாஹ் ப்னு அம்ர் (ரலி) அம்ரு ப்னு ஜமூஹ் (ரலி) ஆகிய இரு ஸஹாபிகள் உஹது போரில் உயிர் நீத்த தியாகிகள் ஆவர். நீரோடைக்கருகில் இருந்த இவ்விருவரின் கப்ருகளை வெள்ளம் அரித்து விட்டது. இவ்விருவரின் புனித உடல்களையும் வேறு இடத்தில் அடக்கம் செய்வதற்காக கப்றை தோண்டிய போது சிறிதும் சிதையாமல் உடல்கள் அப்படியே இருந்தன. இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அக்காயத்தின் மீது தன் கையை வைத்த வண்ணம் அவர் உயிர் நீத்திருந்தார். அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மீண்டும் கப்ரை தோண்டிய பொழுது அந்த கையை எடுத்து விட்ட போதும் காயத்தின் மீதே அவர் திரும்பவும் கையை வைத்துக் கொண்டார். அடக்கம் செய்யப்பட்டதற்கும் தோண்டி எடுக்கப்பட்டதற்கும் இடையே 46 ஆண்டுகள் கழிந்திருந்தன.
         (ஆதாரம். முஅத்தா ப்னு மாலிக்.  பாடம்.  அல்ஜிஹாது.)
இவ்வாறே ஜாபிர் (ரலி) அவர்களது தகப்பனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் கப்ரை அடக்கம் செய்யப்பட்டு ஆறு மாத காலம் கழித்து ஒருமுறையும், 40 வருடங்கள் கழித்து இரண்டாம் முறையும், 46 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையும் ஆக மூன்று தடவை தோண்டி எடுத்து இடம் மாற்றி இருக்கிறார்கள்.  மூன்று முறை தோண்ட போதும் அவர்கள் உயிரோடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹஸ்ரத் ஜாபிர் அவர்கள் அறிவிக்கிறார்கள். என் தநையார் தான் கூறியபடியே உஹது போரில் உயிர் நீத்தவர்களில் முதல் நபராக இருந்தார். ஒரே கப்ரில் அவருடன் மற்றவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டனர். இதை என் மனம் விரும்பவில்லை. ஆறு மாதங்களுக்கு பின் உடலைத் தோண்டி எடுத்தேன். காதில் ஏற்பட்டிருந்த சிறு மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இன்றி உடல் உறுப்புகள் அனைத்தும் அப்படியே இருந்தன.
                                      (ஆதாரம்.  புகாரி.)
ஹஸரத் முஆவிய (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் உஹது வழியாக வாய்க்கால் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் யாருக்கு கப்ரு உள்ளதோ அவர்கள் அதை தோண்டி எடுத்து வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பொது அறிவிப்பு ஒன்று செய்யப்பட்டது. இப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் தனது தகப்பனாருடைய கப்ரை தோண்டி வேறு இடத்திற்கு மாற்றினார்கள். இது இரண்டாவது முறை. இது அடக்கம் செய்யப்பட்டு 40 வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்தது.

வெள்ளப்பெருக்கு எடுத்து கப்ருக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் தனது தகப்பனாரின் கப்ரை தோண்டி வேறு இடத்திற்கு மாற்றினார்கள். இது மூன்றாவது முறை. இது 46 வருடங்களுக்கு பிறகு நடந்தது.

மேற்படி இரண்டு ஹதீஸ்கள் பல ஆதாரத் தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. பைஹகி, தாரமீ, இப்னு அபீஷபா போன்ரவர்களின் கிதாபுகளிலிருந்து ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் தனது புகாரி விரிவுரையிலும், மேற்படி ஹதீஸ்களை பல ஆதாரத் தொடருடன் எடுத்து எழுதியுள்ளார்கள். 
இது சம்பந்தமாக வரும் பல்வேறு ஹதீஸ்களில் அந்த ஷுஹதாக்கள்
தியகிகளின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது போல் புதிதாக இருந்தது. அவர்கள் தூங்க கூடியவர்கள் போன்று இருந்தார்கள். சாதாரணமாக மரணித்தவர்களின் உடல் மரத்துப் போகும். உறுப்புகள் விரைத்துப் போகும், இரத்தம் உறைந்து குன்றிப் போகும். ஆனால் இந்த ஷுஹதாக்கள் பற்றி வருகிற போது அவர்களது உடல் சிதையாமல் இணைந்தே இருந்தது. மெல்லினமாக உறுப்புகள் வளையும் விதத்தில் இயல்பாக இருந்தது.

காயம்பட்ட இடத்திலிருந்த கையை நாங்கள் எடுத்து விட்ட போதும், காயத்தின் மீதே கையை திருமபவும் வைத்துக் கொண்டார்கள். இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. உஹதில் வாய்க்கால் தோண்டும் போது ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் கால் வெளிப்பட்டது. அதில் இரத்தம் கொட்டியது. தோண்டப்பட்ட மண்ணில் கூட கஸ்தூரி மணந்தது. எனெறெல்லாம் வரும் மணி வாசகங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.
இந்த வகையில் இன்னொரு வீரத்தியாகி ஹஸ்ரத் குபைப் (ரலி) அவர்கள் பற்றிய செய்தி ஆய்ந்துணரத் தக்கது. ஹஸ்ரத் குபைப் (ரலி) அவர்கள் கழு மரம் ஏற்றப்பட்டு அம்பெய்து கொல்லப்பட்டார்கள். அப்போது அவர்களின் திருமுகத்தை கிப்லா அல்லாத திசையில் திருப்பி வைத்தார்கள். பின்னர் வந்து பார்த்தால் அந்த முகம் கிப்லாவை முன்னோக்கி இருக்க கண்டார்கள்.

தொடர்ந்து பல முறை முகத்தை வேறு திசையில் திருப்பி திருப்பி வைத்துப் பார்த்தார்கள். பின்னர் அவர்கள் தங்கள் இயலைமையை ஒப்புக் கொள்ள வேண்டிவந்தது. இருந்த மேனிக்கு அப்படியே விட்டு விட்டார்கள். ஹஸ்ரத் குபைப் (ரலி) அவர்களின் உடல் கழுவில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை பாதுகாப்பதற்கு நாற்பது வீரர்கள் அதை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். மதினாவில் நபி (ஸல்) அவர்கள் யார் அந்த உடலை கீழே இறக்கி கொண்டு வருவாரோ அவருக்கு சுவனம் உண்டு என்று சுபச் செய்தி சொன்னார்கள்.

இதை கேட்ட சுபைர் (ரலி) அவர்கள் நானும் எனது தோழர் மிக்தாத் ப்னு அஸ்வத் (ரலி) அவர்களும் இதற்கு தயார் என அறிவித்து பகலில் ஒளிந்த இரவில் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட பலகையை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கி கொண்டிருந்தார்கள். அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அப்பலகையிலிருந்து - அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது அந்த புனிதமான உடல் புதுசா ஃபிரெஷ்ஷாக உடல் சிதையாமல் இணைந்து இருந்தது.
கொல்லப்பட்டு அதுவரை 40 நாளகியும் அதில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. நிறம் இரத்த நிறமாக வாடை கஸ்தூரி வாடையாக இருந்தது. அதை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார். அப்போது அவர்கள் விழித்துப் பார்த்த போது குபைபை காணவில்லை. உடனே குறைஷிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று சுபைர் (ரலி) அவர்களை மடக்கிய போது அவர் ஜனாஸாவை தரையில் போட்டார். பூமி அவரை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே அவரை பளீவுல் அர்ள் (பூம் விழுங்கியவர்) என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.
وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ ۗ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
மேற்கூறிய வசன விரிவுரையிலும் (காசின் 194/1.) ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களின் அல் இஸாபாவிலும் இந்த செய்தி காணப்படுகிறது.
இது மாதிரியான செய்திகளும் திருகுர்ஆனின்
وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِن لَّا تَشْعُرُونَ
2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ
3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِم مِّنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
3:170. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
மேற்கூறிய வசனங்கள் நிதர்சனமான தெளிவுரையாக இருக்கிறது. அந்த வசனங்களில் ஷுஹதாக்கள் உயிரோடு வாழ்கிறார்கள். அவர்களுக்கு அவர்களது இரட்சகனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறது. இன்னும் அவர்களிடம் சென்று சேராத - இதுவரை மரணிக்காத அவர்களைச் சார்நதவர்களைப் பற்றி செய்திகள் அவர்களுக்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருக்கும் அளப்பறிய அருளைக் கொண்டு ஆனந்தமுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்கள் இருக்கிறார்கள்.

எனவே அவர்களை மரணித்தவர்கள் என்று சொல்ல வேண்டாம். என்றெல்லாம் வருகிறது. இது சத்திய இஸ்லாமின் சத்தான சான்றாக இருக்கும். அல்குர்ஆனின் உண்மைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
மௌலவி அல்ஹாபிழ்S.A.  முஹம்மது ஹனீஃப் பைஜி.
பேராசிரியர்மன்பவுஸ்ஸலாஹ் தூத்துக்குடி.

No comments:

Post a Comment