Monday 28 December 2015

தொண்டராக வாழ்ந்த தலைவர்


ரு நாட்டையாளும் அதிபர் தனக்கு நெருக்கமானவராக, தனது நம்பிக்கைகுரியவராக தனக்கும், மக்களுக்கும் மத்தியில் நல்ல தொடர்பை ஏற்படுத்துபவராக இருக்க ஒருவரை தோர்ந்தெடுத்தால் உண்மையில் அந்த நபர், சிறப்பான தன்மையுடையவராக சிறந்த ஆற்றலுடையவராகத்தான் இருப்பார். அவர் தனது செயலால் நம்பிக்கைகுரியவராக விளங்கி அதிபருக்கு மிகவும் நெருக்கமானவராகி விடுவார்.


                   நாட்டை ஆள்பவரின் நிலை..?
நாட்டை ஆளக்கூடியவர் மிகவும் பெரிய அறிவாளியாகவோ, ஆற்றலுடையவராகவோ இல்லை என்றால், தனது எதிரியையே தனக்கு நெருக்கமானவராக ஆக்கி கொள்ளும் நிலையை நாம் பார்க்கிறோம். தனக்கு நெருக்கமானவனே தனக்கு எதிராக நடந்து கொள்ளும் நிலையை அறிந்தும் அவனை தன்னிடமிருந்து வெளியேற்ற முடியவில்லை, காரணம் அவனால் தனது அரசியல் செல்வாக்கு குறைந்து போகுமோ என்ற பயம். இது நாட்டை ஆளக்கூடிய தகுதியற்றவர்களின் பலஹீனம்.

                     உண்மையான அரசன்.
அகிலம் அனைத்தையும் படைத்து அதன் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் தன் கையில் வைத்திருக்கும் அல்லாஹ் பரிபூரண அறிவுடையவன். அவனது அறிவு படைப்பினங்கள் யாவற்றின் மீதும் சூழ்ந்துள்ளது. கரையிலும் கடலிலும் இருக்கின்ற ஒவ்வொன்றையும் அறிகிறான். அவன் பரிபூரண ஆற்றலுடையவன். அகிலமனைத்தையும் ஒரு சொல்லி அழித்து, மறு சொல்லில் அனைத்தையும் உண்டாக்ககூடியவன்.
சர்வ வல்லமை மிக்க இறைவன், தனக்கு நெருக்கமானவராக தனக்கும் மக்களுக்கும் மத்தியில் தூதுவத்தை சேர்த்து வைக்க கூடியவராக ஒருவரை தேர்ந்தெடுக்கிறான் என்றால் அவர் சிறந்தவராக சிறப்பான தன்மையுடையவராக, உயர்ந்த குணமுடையவராகத் தான் இருப்பார்.

               படைப்புகளில் சிறந்தவர் நபி (ஸல்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எல்லா படைப்புகளை விட சிறப்பையும் உயர் அந்தஸ்த்தையும் வழங்கி, தனக்கு நெருக்கமானவராக அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான். தனக்கும் நபிக்கும் இருக்கும் நெருக்கத்தை, உயர் அந்தஸ்த்தை வெளிக்காட்டத்தான் மிஃராஜிற்கு அழைப்பு விடுத்ததைப் பற்றி கூறும் போது,


" தனது அப்தை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்." என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். இறைவனிடம் இருக்கும் அந்தஸ்த்துகளில் மிக உயர்ந்தது "அப்திய்யத்" என்பது தான் அதை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளான்.

               பரிபூரணம் நிறைந்த நபி (ஸல்)
நபி (ஸல்) அவர்களின் பரிபூரணத்தன்மை அவர்களிடம் மறைமுகமாக இருக்கவில்லை. சூரியனைப் போன்று வெளிச்சமாகவே இருந்தது. நாயகத்திற்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள், நண்பர்கள் எதிரிகள் அனைவரும் அவர்களின் பரிபூரணத்தன்மையை அறிந்து வைத்திருந்தனர்.
"அஸ் ஸாதிக்  அல் அமீன்" உண்மையாளர் நம்பிக்கையாளர் என்ற பட்டத்தை ஒரு கூட்டம் சூட்டவில்லை. மக்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் தன்மைகளை அனுபவ ரீதியாகவும், கண்கூடாகவும், கண்டபிறகே "அஸ் ஸாதிக் அல் அமீன்" என்று அன்பாக அழைத்தார்கள்.

                    சிறந்த தலைவர் நபி (ஸல்)
படைப்புகளில் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) உலகின் இறுதித் தூதராக வந்து, இறைத்தூதுவத்தை மக்களிடம் சிறப்பாக சேர்த்து வைத்ததோடு மட்டுமல்லாமல், நாகரீகத்திலும், ஒழுக்கத்திலும் மிகத்தாழந்த நிலையில் வாழ்ந்தவர்களை தங்களது கடும் உழைப்பினாலும், உயர்ந்த குணத்தினாலும் அவர்களை உலகிற்கே நாகரீகத்தையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் உயர்ந்த தோழர்களாக, தொண்டர்களாக குறுகிய காலத்திலே உருவாக்கி உலகின் சிறந்த தலைவர் என்பதை காட்டினார்கள்.
உலகில் வாழ்ந்த எந்த தலைவரும் தனக்குப் பின் தன் தொண்டர்களை பின்பற்றுங்கள் என்று கூறிய வரலாறு கிடையாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
أصحابي كالنجـــوم بأيهم اقتديتم اهتديتم

"எனது தோழர்கள் விண்ணில் மின்னும் நட்சத்திரங்கள், அவர்களைப் பின்பற்றினால் நேர்வழி பெறுவீர்கள்."

                தொண்டராய் வாழ்ந்த நபி (ஸல்)
தலைவர்களுக்கெல்லாம் தலைவராய் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனித கோடிகள் யாவருக்கும் பொதுவாக, இதற்கு முன் உலகில் எவரும் புரிந்திராத மகத்துவமிக்க தொண்டினை புரிந்து சென்றுள்ளார்கள். ஈருலகத் தலைவர் நபி (ஸல்) அவர்கள் தொண்டர்களில் ஒரு தொண்டராக வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) வர்கள் தோழர்களோடு ஒரு பயணத்தில் இருக்கும் போது ஓரிடத்தில் தங்கினார்கள். உணவிற்காக ஒரு ஆட்டை அறுக்க வேண்டி வந்தது. இந்த உணவு ஏற்பாட்டு வேலைகளை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவில் ஒரு தோழர் ஆட்டை அறுப்பது எனது வேலை என்றார். இன்னொருவர் அதன் தோலை உரிப்பது எனது வேலை என்றார். மற்றொருவர் அதை சமைப்பது எனது பொறுப்பு என்றார்.  நபி (ஸல்) அவர்கள் சமைப்பதற்கான விறகுகளை காட்டிலிருந்து சேகரித்து வருவது எனது வேலை என்றார்கள். இறைத்தூதர் அவர்களே....!  வேலை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். தாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று தோழர்கள் தடுத்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "எனக்கு தெரியும் நீங்கள் எல்லா வேலைகளையும் செய்வீர்கள் என்று. எனினும் உங்களுக்கு மத்தியில் நான் தனித்தவனாக இருப்பதை விரும்பவில்லை. அல்லாஹ் தனது அடியான் அவனது தோழர்களுக்கு மத்தியில் தனித்து வித்தியாசப்பட்டு இருப்பதை வெறுக்கிறான்." என்று கூறினார்கள்.

                  நிகரில்லா தலைவர் நபி (ஸல்).
உலகில் தலைவராய் தோன்றுபவர்களெல்லாம் தனித்தன்மையோடு வாழ்வதை விரும்புவார். சாமர்த்தியமாக எல்லா வேலைகளையும் தொண்டர்களிடம் வாங்கிக் கொள்வார்கள். எதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கண்ணியமிக்க சிறந்த தலைவர். தோழர்கள் அவர்களுக்கு கொடுத்த கண்ணியத்தைப் போன்று உலகில் எந்த தலைவருக்கும் ஏன்..?  உலகை ஆண்ட அரசனுக்கும் கூட யாரும் கொடுத்ததில்லை.

நபி (ஸல்) அவர்கள் தனக்காக உடல், உயிர், பொருள் அனைத்தையும் அற்பணிக்கும் தொண்டர்கள் இருந்தும் எல்லா வேலைகளிலும் தோழர்களோடு தோளோடு தோள் நின்று வேலைகளில் பங்கு கொள்வார்கள்.

            மஸ்ஜித் கட்டிடப் பணியில் நபி (ஸல்).
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்த போது முதன் முதலாக "குபா" என்ற ஊரில் பதினான்கு நாட்கள் தங்கினார்கள். அந்நாளில் இறைவணக்கத்திற்கு ஒரு பள்ளிவாசலைக் கட்டத் துவங்கினார்கள். கட்டிடத்திற்கு தேவையான கற்களை தோழர்கள் கொண்டு வரும் போது, தாங்களும் பெரும் பெரும் கற்களை தோளில் சுமந்து வந்தார்கள். இதைக் கண்டதும் தோழர்கள் இறைத்தூதரே எங்கள் தாய் தந்தையர் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இதற்கு நாங்கள் இருக்கிறோம் என்று வேதனையோடு கூற தோழர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் கல்லை சுமந்து மஸ்ஜிதுன் நபவி பள்ளியின் கட்டிடப் பணியிலும் தோழர்களோடு சேர்ந்து சாதாரணத் தொண்டராக முழுமையாக ஈடுபட்டார்கள்.

                அகழ் தோண்டும் பணியில் நபி (ஸல்).
அரேபிய நாட்டின் எல்லா கூட்டத்தினரும் ஒன்று திரண்டு மதினாவை தாக்க வரும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்ததும் மதினா நகரை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அருமைத் தோழர் (ஸல்)மான் பார்ஸி (ரலி) அவர்கள் மதினாவின் எல்லையோரம் அகழ்த் தோண்டி பாதுகாக்கலாம் என்ற ஆலோசனை கூறியதும் அதை ஏற்றுக் கொண்டு, மூவாயிரம் தோழர்களை நகரை விட்டு வெளியில் கொண்டு வந்து பத்து முழம் நீளம் ஐந்தடி ஆழம் என்று பங்கு வைத்து கொடுத்து அகல் தோண்ட உத்தரவிட்டார்கள். தானும் சாதாரண தொண்டரைப் போன்று மண்வெட்டியை தூக்கினார்கள். அதழ்த் தோண்ட ஆரம்பித்தார்கள். தோண்டிய மண்ணை கூடையில் அள்ளி தலையில் தூக்கி மேல் வந்து கொட்டிய போது தலையிலும் தாடியிலும் நெஞ்சிலும் மண்படிந்திருந்தது. இது அவர்களின் சத்திய வரலாற்றில் அதிசய உண்மையாகும்.

         தொண்டரின் உயர்வுக்கு வழிகாட்டிய நபி (ஸல்).
இன்றைய உலகின் தலைவர்கள் தங்களது வாழ்வின் நலனையே கவனிக்ககூடியவர்களாக இருக்கின்றார்கள். தொண்டர்களின் வாழ்வின் உயர்வைப் பற்றி சிந்திக்கவோ அதற்கான முயற்சியில் இறங்கவோ முடியாத தலைவர்களைத்தான் உலகில் பார்க்க முடிகிறது.
ஹஸ்ரத் அனஸ் ப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அன்சாரி தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கவலையான முகத்துடன் வந்து இறைத்தூதரே எனக்கு உதவுங்கள் என்று வேண்டினார். நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து உன்னிடம் என்ன இருக்கிறது...?  என்னிடம் ஒரு போர்வை, ஒரு உணவுப் பாத்திரம் இதைத் தவிர என்னிடம் ஒன்றுமில்லை என்றார். நாயகம் (ஸல்) அவர்கள் அவரது உணவுப் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்து அதை தோழர்களுக்கு மத்தியில் இரண்டு திர்ஹத்திற்கு ஏலம் விட்டு இரண்டையும் அன்சாரி தோழரிடம் கொடுத்து ஒரு திர்ஹத்திற்கு உனது வீட்டிலிருப்பவர்களுக்கு உணவு வாங்கிக் கொள், மற்றொரு திர்ஹத்திற்கு மரம் வெட்டும் கோடாலி வாங்கி வா என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அன்சாரி தோழர் கோடாலியை கொண்டு வந்து கொடுத்ததும் தங்களது திருக்கரத்தினால் கோடாலிக்கு கைப்பிடி செய்து வைத்து தோழரிடம் கொடுத்து காட்டிற்கு சென்று மரம் வெட்டி விற்று வாழ் என்று வாழ்த்தி உங்களை இந்தப் பக்கம் பதினைந்து நாட்களுக்கு நான் பார்க்க கூடாது என்று கூறி அனுப்பி வைத்தார்கள். சென்றவர் மரத்துண்டுகளை வெட்டி கடைத்தெருவுக்கு கொண்டு வந்து விற்று வந்தார்.

இரு வாரங்கள் கழிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து வருமானக் கணக்கை ஒப்படைத்தார். எல்லா செலவுகளும் போக மீதம் பத்து திர்ஹம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்த அன்சாரி தோழரைப் பார்த்து, பிச்சை எடுத்து தன்னை இழிவாக்கிக் கொள்வதை விட இந்த ஹலாலான உழைப்பு மிகவும் சிறந்தது எனக் கூறினார்கள்.

இஸ்லாம் அனுமதித்த வழிகளில் உழைத்து கண்ணியத்தையும் வாழ்வின் உயர்வையும் தோழர்கள் பெறுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உற்சாக மூட்டினார்கள்.

மௌலானா மௌலவி M.K. அலாவுத்தீன் பாகவி
இமாம் மஸ்ஜித் ஜாவித்சென்னை.)

No comments:

Post a Comment