Monday 28 December 2015

இஸ்லாமியப் பார்வையில் இன்பச் சுற்றுலா


மனித குல நல்வாழ்வுக்கு வழிகூறும் இஸ்லாம் மனித உணர்வுக்கும், இயல்புக்கும் மரியாதை தர தவறியதில்லை.

பசி, தாகம் ஏற்படும் போது அதை தணித்துக் கொள்ள முனைவதும் பருவ வயதை அடையும் போது பாலியல் உறவு எண்ணம் பிறப்பதும் மனித இயல்புதான். இம்மாதிரியான இயற்கையான உணர்வுகளுக்கு இஸ்லாம் ஒரு போதும் தடை விதித்ததில்லை. மாறாக முறையாக அனுமதியளித்து ஒரு சில வரம்புகளையும் விதித்ததிருக்கிறது. வரம்பு கூட இல்லையானால் அது மிருக வாழ்க்கையாகி விடுமல்லவா...?


இந்த வகையில், அன்றாடம் தன் பொறுப்புகளில் கவனம் செலுத்தி குறுகிய வட்டத்துக்குள் இயந்திர வாழ்க்கை வாழும் மனிதனுக்கு ஓய்வு பெற்று சகஜ சூழலுக்கு அப்பாற்பட்டு உல்லாச உலா சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது மனித இயல்பு தான்.
அரசு சார்பிலேயே சுற்றுலாவுக்கென ஒரு இலாகா ஒதுக்கப்பட்டிருப்பதும், சுற்றுலா மையங்களின் சீரமைப்பு பணிக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவதும் இன்ப உலாவின் மீது மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இயற்கையான தாகத்தை நிருபிக்கிறது.

மற்ற இயல்பான ஆசைகளுக்கு இஸ்லாம் வழிவிட்டிருப்பது போல் இதற்கும் வழி வகை செய்துள்ளது. அதே சமயம் வரம்பு விதித்துள்ளது.

قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
நபியே...நீர் அவர்களை நோக்கி நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து, பொய்யாக்கி கொண்டிருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள் எனக் கூறும்.   ( அல்குர்ஆன்.  6 - 11)
فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ
22:45. அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).

أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
22:46. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
இது போன்ற இறைவசனங்கள் சுற்றுலா நன்நோக்கு கொண்டதாகவும், படிப்பினை பெறும் விதத்திலும் அமைந்தால் அது மார்க்க ரீதியாக வரவேற்க்கப்படும் என்று விளக்குகிறது.

சுற்றுலாவுக்கென உள்ள இயற்கை எழில் நிறைந்த பல இடங்கள், நீரருவிகள், நீர்த்தோக்கங்கள், கடலோரக்கரைகள், பூஞ்சோலைகள் ஒவ்வொன்றும் வெறும் கண்டுகளிக்க மட்டுமா..?  இல்லவே இல்லை.
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ரம்மியமான காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை மட்டுமல்ல அல்லாஹ்வின் வல்லமையையும் மனித நல்வாழ்விற்கு தேவையான எண்ணற்ற பல படிப்பினைகளையும் படித்து தெரிந்து தெளிவு பெறுவதற்குரியவைகளாகும்.
         
                           பூஞ்சோலை.
ஒரே மண்ணில் ஒரே நீரில் வளர்ந்து பல வண்ண மலர்களாக காட்சி தரும் பூஞ்சோலை அல்லாஹ்வின் ஆற்றலை எடுத்தோதிக் கொண்டிருக்கின்றது. பூக்களில் சில மொட்டாகவும், இன்னும் சில மலர்ந்தும் வேறு சில உலர்ந்தும் காணப்படுவது மனித வாழ்வின் மூன்று கட்டங்களை நினைவூட்டுகின்றன.
மலர்ந்த வண்ணம் காட்சி தரும் மலர்கள் கண்டு நாம் மகிழ்ச்சி அடைவதின் மூலம் "உன் சகோதரன் முன் மலர்ச்சியோடு நீ காட்சி தருவதும் அவருக்கு நீ செய்கிற தர்மம்." என்ற நபி மொழியில் விளங்கப்படும் உயர்ந்த பண்பாட்டு பாடத்தை புரிய முடிகிறதல்லவா...?
பல இன மலர்ச் செடிகளும் தாவரங்களும் அதன் கொடிகள், கிளைகள் காற்றின் அழுத்ததிற்கு வசப்பட்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் போது, நாம் எல்லாம் ஒரு தாய் மக்கள். நமக்கிடையில் மோதல்கள் எதற்கு என்று கூறும் வண்ணம் மோத வரும் அச்செடியை கட்டி அணைத்து முத்தி அனுப்பும் அந்த காட்சி

"அல்லாஹ்வுக்கு அடியார்களாக உங்களுக்கிடையில் சகோதரர்களாக வாழுங்கள்."

"உனக்கு தீங்கு செய்தவனுக்கும் நீ நன்மை செய்திடு."
போன்ற நபிமொழிகள் கூறும் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் போதிப்பது புலப்படவில்லையா...?
கல், கரடுகளிலும், புல், புதர்களிலும் சில மரங்கள் நெளிந்தும் பிணைந்தும் வளர்ந்திருக்கும் வாகை பார்த்தால் அவைகளுக்கிடையில் எல்லைத் தகராறே இல்லை என அறிய முடிகிறதல்லவா...?
 
                                                               நீர்த்தேக்கம்.
எங்கிருந்தோ உருண்டோடி வரும் நீர் தேக்கி வைக்கப்பட்டு பல மக்களுக்கு பயன் தரும் நீர் தேக்கத்தைப் பார்க்கிறோம். பூரிப்படைகிறோம்.
ஆனால் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப பயன்தரும் இது, மனித வாழ்வில் உணர்ச்சிகள் ஏற்படலாம். ஆனால் அவைகளுக்கு அணை போட்டு தேக்கி நேரம் காலம் சூழ்நிலையெல்லாம் அனுசரித்து அதை பிரயோகித்தால் மிகவும் பயனளிக்கும் என்பதை ஒலிக்கிறது.
ஒரு கணவன் மனைவியிடம், ஆசிரியர் மாணவரிடம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பெரியவர் சிறியவரிடம் காணும் தவறுகளினால் உடனே தண்டிக்க, வேண்டுமென்ற உணர்வு ஏற்படத்தான் செய்யும். அப்போது நாம் மேற்கொள்ள வேண்டிய நிதானப்பாடம் இதன் மூலம் கிடைக்கிறது.
அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீர் வேறொன்றை இயக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் மின்சாரம் தயார் செய்ய முடிகிறது. மின்சாரத்தால் உலகமே பிரகாசிக்கிறது.

மனிதனும் தான் நன்மை செய்வதோடு பிறரையும் நன்மை செய்ய தூண்டுபவனாக இருந்தால் பாவங்களால் இருண்டு விட்ட இந்த உலகம் நல்லவர்களால் பிரகாசமடையும் என்ற படிப்பினை தருகிறதல்லவா...?

                                                              நீரருவி :
தனிவை நோக்கி ஆரவாரத்தோடு பொங்கி வரும் நீர்வீழ்ச்சியைப் பார்க்கிறோம். பரவசமடைகிறோம். முண்டி அடித்து உற்சாக குளியல் போடுகிறோம்.
பணிவாக நடக்க தயாராகி விட்டவர்களை மக்கள் தலை மேல் தூக்கி வைத்து மதிக்கத் தயாராக உள்ளார்கள். இப்படி ஒரு பாடத்தை சிந்திக்கத் தெரிந்த மனிதன் எவரும் பெற்றதுண்டா...?

                                                                 கடல் :
கடல், இப்படி எதுவரை கட்டுப்பாட்டுடன் இருக்குமோ அதுவரை அதை வெகு தூரத்திலிருந்தும் கூட சந்திக்கச் செல்கிறோம். ஆனால் கடல் எல்லை மீறும் போது அருகில் வசிப்போர் கூட கிடைத்ததை கையில் எடுத்துக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என துண்டக் காணோம் துணியக் காணோம் என தப்பியோடுவதை பார்க்கிறோம். கட்டுப்பாட்டுடன் இருக்கும் கடலை மனிதன் விரும்புகிறான். வரம்பு மீறும் போது வெறுக்கிறான் என்பதிலிருந்து கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக வாழும் மனிதனை அல்லாஹ் விரும்புகிறான். ஷைத்தானின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு எல்லை மீறுபவனை அல்லாஹ் விரும்புவதில்லை என்பதை புரிய முடிகிறது.

                       உயிரியல் பூங்கா :
சுற்றுலாத் துறையில் உயிரியல் பூங்காவும் ஒரு முக்கிய அங்கம். அங்கிருக்கும் விதவிதமான வன விலங்குகளையும் அதிசியமான உயிரினங்களையும் கண்டு ரசிக்க விரும்பாதவர்கள் யாருமில்லை.
ஆனால் வெறும் ரசனையோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறோம். அங்கு அடைக்கப்பட்டு இருப்பவைகளில் சில படுத்த வண்ணமே உயிர் வாழ்கிறது. இன்னும் சில குனிந்த வண்ணம், வேறு சில நிமிர்ந்த வண்ணம் உயிர் வாழ்வதைப் பார்த்து எல்லா நிலைக்கும் இசைவாக நம்மை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை எண்ணிப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செய்ய வேண்டாமா..?

தன் பராமரிப்பில் இருக்கும் அந்த உயிரினங்களின் வாழ்வை காப்பாற்ற மனிதன் என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்யவேண்டியதிருக்கிறது...?  அவைகளின் இரைக்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது...?
ஆனால் அது போன்ற பல கோடி உயிரினங்களின் உணவை எளிதாக வழங்கும் அல்லாஹ்வின் அபரிமிதமான ஆற்றலை விளங்க முயற்ச்சிக்க வேண்டாமா...?

                           எதை ரசிப்பது ?
நில நடுக்கத்தால், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வேடிக்ககையிலும் வேடிக்ககையே..!
இஸ்லாமிய பார்வையில் இந்த அசட்டுத் தனமான துணிச்சல் அபத்தமானது.

யுத்ததிற்காக தபூக்கை நோக்கி படை பரிவாரங்களோடு சென்ற நபி (ஸல்) அவர்கள் (மதினாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலிருக்கும்) ஹிஜ்ர் என்னுமிடத்தை அடைகிறார்கள்.
இறை நிராகரிப்பில் அத்துமீறி நடந்த ஸமூத் கூட்டம் இறைவன் புறத்திலிருந்து வந்த பேரிடி முழக்கத்தால் அழிக்கப்பட்ட இடம் தான் அது.
எனவே அந்த இடத்தில் யாரும் தங்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை போன்று உங்களுக்கும் ஏற்பட்டு விடுமோ...?  என்று அச்சத்தால் அழுதவண்ணம் சீக்கிபம் கடந்து செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறி  துண்டால் தன் தலையை மறைத்தவாறு அவ்விடத்தை வேகமாக கடந்தார்கள்.
                                  ( நூல் புகாரி )
فَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا وَهِيَ ظَالِمَةٌ فَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَقَصْرٍ مَّشِيدٍ
22:45. அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).

أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
22:46. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
மேற்கூறப்பட்ட நிகழ்ச்சி மற்றும் வசனங்களின் மூலம் மனித சமுதாயம் வேதனைக்குள்ளாந இடங்களுக்கு சென்றால் இது போன்ற பய உணர்வுகள் பொங்க வேண்டும்.

அநியாயத்தால் ஏற்படும் விளைவு என்ன என்று பாடம் பெற வேண்டும்.
அப்பொழுது தான் சுற்றுலாவினால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கும் என்பதை உணர்துகின்றன.

எனவே கூடி, கும்மாளமிட்டு, மார்க்க முறையின்றி சுற்றித் திரிந்து, வெறும் செலவும் களைப்பும் மட்டுமே மிஞ்சுகிற அர்த்தமற்ற சுற்றுலா முறையைக் கைவிட்டு பக்குவம் நிறைந்த படிப்பினைகள் மிகுந்த அறிவுக்கும் ஆன்மாவுக்கும் பயன்தரும் வண்ணம் நம சுற்றுலாக்களை அமைக்க முயல்வோமாக..!    ஆமீன்.

மௌலவி அல்ஹாபிழ் V.S. முஹம்மது யூஸுஃப் தாவூதி. வடகரை.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்... அல்ஹம்து லில்லாஹ்...

    இந்த ஆக்கத்தில் கட்டுரையாளரின் பெயர் ( பேராசிரியர், மன்பவுஸ்ஸலாஹ், தூத்துக்குடி.) என்ற அடைமொழி இல்லாமல் மிகச்சரியாக பதிந்திருப்பதாக பார்க்கிறேன்.
    வேறு சில ஆக்கங்களில் பேராசிரியராக (இப்போது) இல்லாதவர்களும் பேராசிரியராக ...!
    அரும்பாடு பட்டு இப்படி அழகாக முறைப்படுத்த உதவியவர்வகளுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்.

    ReplyDelete