Monday 28 December 2015

இஸ்லாமிய பார்வையில் எல்லாம் இறைமைத்தனம்.


 லைலா மஜ்னூன் கதை உலகத்தின் மிகப் பிரபல்யமான காதல் உவமைக்கு எடுத்துக் கூறப்படும் மிகச் சிறந்த கதையாகும்.  கைஸுல் மஜ்னூன் என்ற அந்த வாலிபரின் காதல் நிலை கட்டுமீறி போன போது அவருடைய தந்தையிடத்தில் பல நண்பர்கள் துஆக்கள் ஏற்கபடும் இடங்களில் முதலிடமாக கஃபா என்னும் இறையில்லமும் கருதப்படுகிறது. அந்த இடத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று பிரார்த்திக்க வையுங்கள். இறைவன் நாடினால் லைலாவின் பாசத்திலிருந்து உங்கள் மகன் விடுபடலாம் என்று கூறினார்கள்.
இதை கேட்ட அவருடைய தந்தை அல்மலூஹ் என்பவரும் அவ்வறே செய்யலாம் என்று எண்ணி தனது மகன் கைஸை மக்காவிற்கு அழைத்துச் சென்று கஃபாவின் திரையை பிடித்துக் கொண்டு
"இறைவா... லைலாவிலிருந்தும் அவள் காதலிலிருந்தும் என்னை விடுவிப்பாயாக." என்று துஆ செய்யும்படி கூறினார். இதைக் கேட்ட கைஸுல் மஜ்னூன் உடனே கஃபாவின் திரையை பிடித்துக் கொண்டு
"இறைவா... லைலாவையும் அவளுடைய நெருக்கத்தையும் என் மீது அருள்வாயாக என்று கூறினார்." இதைப் பார்த்த தந்தை அல்மலூஹ் அதிசயித்துப் போய் நின்றார்.

ஒரு கவிஞர் கூறினார்.
"அன்பை குவளை குவளையாக அருந்தினேன். அந்த குவளையும் தீரவில்லை. என் தாகமும் அடங்கவில்லை."    

காதல் நெருப்பில் கரிந்து கொண்டிருந்த கைஸுல் மஜ்னூன் தனது நினைவாக லைலாவிற்கு நினைவுப் பொருள் என்று கூறி ஒரு பாத்திரத்தை அனுப்பினான். அதை பெற்றுக் கொண்ட லைலா அதை தூக்கி எறிந்து சுக்கு நூறாக உடைத்து விட்டாள். இதை அறிந்த நண்பர்கள் மஜ்னூனை ஏளனம் செய்தார்கள்.

என்னவே உன் மீது லைலாவிற்கும் காதல் உண்டு என்று பிதற்றிக் கொண்டிருந்தாய். அவளோ உன் நினைவுப் பொருளையே தூக்கி எறிந்து சுக்கு நூறாக உடைத்து அவமானப்படுத்தி விட்டாள் என்று கூறினார்கள். இதை கேட்ட மஜ்னூன் கூறினான் உங்களுக்கு எங்கே புரியப் போகிறது அவள் மொழி...? எனக்கும மட்டும் தான் புரியும் அவள் மொழி என்று கூறிவிட்டு அவள் பாத்திரத்தை உடைத்தது என் மீதுள்ள வெறுப்பால் அல்ல மாறாக என் இதயம் மஜ்னூன் மீதுள்ள காதலால் இந்த பாத்திரத்தைப் போல சுக்கு நூறாக உடைந்துள்ளது என்றல்லவா அவள் உணர்த்துகிறாள் என்று கூறினானாம் மஜ்னூன்.
இதைத்தான் இன்றய கவிஞன் பாடினான்.

" மானை கண்டால் லைலா...
மயிலைக் கண்டால் லைலா.."

இத்துணை விரிவாக லைலாவின் கதையை இங்கு ஏன் எழுதுகிறேன் என்றால் பைத்தியம் என்று பெயரெடுத்த ஒருவன் தனது அனைத்திலும் லைலாவின் ஊடுருவலை எப்படி காண்கிறான் என்பதை புரிந்து கொள்வதற்காகவே எழுதினேன். அப்படியானால் பகுத்தறிவு மார்க்கம் என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாம் தனது அடிப்படை தன்மையான இறைகாதலை இறைமைத்தனத்தை எல்லாவற்றிலும் அது எப்படி ஊடுருவி உள்ளது என்பதை வாசகர்கள் புரிய வேண்டும் என்பதற்க்காகத் தான்.

ஒரு கவிஞர் கூறினார்.: "அனைத்தின் அசைவிலும் அமைதியிலும் அல்லாஹ்விற்கு நிரந்த சாட்சிகள் உள்ளன. எல்லா வஸ்துவிலும் அவன் ஒருவனென்று அறிவித்துக் கொண்டிருக்கும் அத்தாட்சி உள்ளன."
இஸ்லாம் முதன் முதலில் இறைவன் உண்டு என்று கூறுகிறது. பின்பு அவன் ஒருவன் என்று கூறுகிறது. அதன் பின் எல்லாமும் அவனே என்பதை விளம்புகிறது. ஆதலால் இஸ்லாமிய அல்லது ஒரு முஸ்லிமுடைய பார்வையில் எல்லாமும் இறைமைத்தனம் கொண்டதே என்பது புலப்படுகிறது. மனிதன் தன் உள்ளத்தில் ஓரத்தில் நினைக்கும் எண்ணம் கூட இறைவன் நினைத்த பின்பே ஏற்படுகிறது என்பதை திருக்குர்ஆனின் வசனங்கள் கூறுகின்றது
 وَمَا تَشَاؤُونَ إِلَّا أَن يَشَاء اللَّهُ رَبُّ الْعَالَمِينَ



"உலகை படைத்து பரிபாலிக்கிற அல்லாஹ் நாடினால் அன்றி நீங்கள்  நாட(வும்) முடியாது"
                             அத்தியாயம் - 81 வசனம் - 29.

                        அவனே எல்லாமும்.
மனிதனும் சரி மற்றவைகளும் சரி எல்லாமும் ஒரு ஒப்புக்த்தான் மற்றபடி ஆக்கம் எல்லாமும் இறைமைத்தனத்தால் தான் உருப்பெருகிறது என்பதை திருக்குர்ஆன் நன்கு விளக்கிக் காட்டுகின்றன. காமத்தின் கடைசி நிகழ்வாக மனிதன் தனது விந்துத் துளிகளை ஒரு பெண்ணின் பெட்டகத்துக்குள் புகுத்துகிறான் அவ்வளவு தான் அவனால் முடிந்தது. அதன்பின் அவனுக்கு ஒரு துளியும் தொடர்பில்லாமல் போய்விடுகிறான். ஆனால் இறைமைத்தனம் அங்கே அரசோச்சுகிறது. நஞ்சுக் கொடிக்குள் பிஞ்சு அவயங்கள் கொண்ட ஒரு கொஞ்சும் குழந்தையை இறைமைத்தனம் உருவாக்கி விடுகிறது.
இதையே திருக்குர்ஆன் இப்படி விளக்குகிறது.

أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
மனிதன் வாழ்வதற்கு உணவு தேவை அதை நிறைவு செய்வதற்காக விதைகளை பூமியில் விதைக்கிறான். ஆனால் வித்துக்களை விதைப்பது மட்டுமே அவனால் சாத்தியமானதாக உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு வித்துக்களை பூமிக்குள் புதைத்து விடுகிறான் ஆனால் அதை முளைக்க வைப்பதற்கு அவனால் எந்த ஒன்றும் செய்ய முடிவதில்லை. அதிலும் இறைமைத்தனம் தான் வேலை செய்கிறது. அதுவால் தான் தானியங்களை வெளிக்கொணர முடிகிறது.
அதை திருக்குர்ஆனின் ஒரு வசனம் இவ்வாறு தெளிவுபடுத்துகிறது.

أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

வித்துக்களை முளைக்க வைத்ததோடு மட்டும் இறைமைத்தனம் முடிவதில்லை ஏனெனில் இறைவன் நாடினால் விளைந்த கதிர்களையும் வீணாக்கி விட முடியும் அப்போது மனிதன் புலம்பி நிராசையாகி விடுவான் என்பதையும் திருக்குர்ஆன் நமக்கு இயம்புகிறது.
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
உணவுக்குப் பின் மனிதன் வாழ்வதற்கு நீர் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு சொட்டு நீரையாயினும் மனிதனால் உற்பத்தி செய்ய முடிகிறதா...?  நிலத்தை தோண்டி நீர் தேடியும் வறட்டு பாறைகளால் நீர் தடுக்கப்பட்ட போது எவ்வளவு விரக்தியடைகிறான்.

மழைவேண்டி பிரார்தித்து மேகம் கருத்த போதும் கூட ஒரு சொட்டு நீரை கூட உதிர வைக்க முடிகிறதா...? ஒரு கோடி மனிதர்கள் ஒன்று சேர்ந்தால் கூட முடியுமா...?
ஆனால் இவைகள் எல்லாம் இறைமைத்தனத்தால் மிக எளிதாக முடிந்து விடுகிறது இதையே இறைவன் இப்படி கூறுகிறான்.
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
56:70. நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
மனித உணவின் ஆக்கம் நெருப்பில்லாமல் நிறைவடைவதில்லை. தானியங்களையும் நீரையும் சேர்த்து நெருப்பில் வைத்து சமைத்த பின்பே உணவு நிறைவடைகிறது. தானியங்களும் நீரும் எவ்வளவு தூரம் மனிதனுக்கு தேவையோ அதே அளவு நெருப்பும் தேவைப்படுகிறது. ஆனால் உலகமே ஒன்று கூடினாலும் அந்த நெருப்பை உண்டாக்கிக் கொள்ள முடியுமா...?  மனிதத்தால் இது ஒரு போதும் நடக்காது. தே நேரம் இறைமையால் அது நடக்கும் என்பதை வான்மறை விளக்கி காட்டுகிறது.
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

விளக்கில் ஒளியாக இறையாமையே பிரகாசிக்கிறது, கனியின் சுவையாக, மலரின் மணமாக, நிலவின் அழகாக, நீரின் குளிராக இப்படி இஸ்லாமிய பார்வையில் இறைமைத்தனமே எதிலும் இடம் பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

"எல்லாமும் அழிந்து போகும் உன் இறைவன் திரு வடிவு மட்டுமே நிலைத்திருக்கும்." என்பது ஓர் இறைவசனமாகும்.
இந்த மில்லினியம் வெள்ளி விழாவில் இஸ்லாமிய பார்வையில் எல்லாவற்றிலும் இறைமைத்தனமே மிச்சமிருக்கிறது என்ற இனிமையை புரிந்து மகிழ்வோமாக.

அல்ஹம்து லில்லாஹ்      அல்லாஹு அக்பர்.
மவ்லானா S. அப்துல் ஜப்பார் பாகவி
பேராசிரியர், J.S.M. அரபிக்கல்லூரி, புதுக்கோட்டை

No comments:

Post a Comment