Thursday 10 December 2015

அன்னிய அழகு

மவ்லானா மவ்லவி முஹம்மது இக்பால் காஸிமி,
பேராசிரியர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத், வேலூர்.

பார்ப்பவர்களுக்கு தான் அழகாக தோன்ற வேண்டும். மற்றவர்கள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். விரும்பி பாராட்ட வேண்டும். அழகையும் நல்ல குணங்களையும் போற்ற வேண்டும். என்னதான் கூச்சமும் வெட்கமும் தடுத்தாலும் ஒரு வாலிப பெண்ணிண் உள்ளத்தில் தவழும் இயல்பான ஆசைகள் தான் இவை. தேடி வந்து தன்னை ஏற்றுக் கொள்பவனிடத்தில் தன்னை பரிபூரணமாக அர்பணித்துக் கொள்கிறாள்.
சகலமும் கொடுத்து விடுகிறாள். தன்னை மறந்து உள்ளத்தால் கரைந்து இந்த புனித சங்கமத்தால் பூரிப்பு அடைகிறாள். இது தான் இயற்கை. படைத்தவன் விதித்த நியதி.
ஆகவே புதுப்பெண் அலங்காரம் ஆதிகாலத்திலிருந்து அவள் வாழ்க்கையின் மிக முக்கியமான விசேஷமான குடும்ப நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. உயிர்த் தோழி முதல் மூதாட்டி வரை அதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நகை உடை மட்டுமல்லாமல் சிகை அலங்காரம் முக அழகு, நறுமணம் கைகளில் மருதாணி பூசுவது போன்றவை ஒவ்வொன்றும் தனி கலையாக உருவெடுத்துக் கொண்டது. தேர்ச்சி பெற்றவர்கள் தேடி அழைக்கப்படுவார்கள். விசேஷ குறிப்புகள் கொண்ட புத்தகங்கள் வெளியாயின.

மேற்கத்திய கலாச்சாரம் பரவி பெண்கள் கல்வி, தொழில் உத்தியோகம்  போன்ற பல காரணங்களுக்காக ஆண்களுக்கு மத்தியில் சகஜமாக பழக ஆரம்பித்ததும் நிலமை மாறிப்போனது. எந்த வயதிலும் தான் அழகாக தோன்ற வேண்டும் என்ற நப்பாசை செயற்கை அழகை நாடியது. அழகிற்கும் பெண் தோற்றத்திற்கும் அளவுகோல்கள் விதிக்கப்பட்டன. நாடக மேடைகளிலும் சின்ன பெரிய திரைகளிலும் செயற்கை அழகிகள் தோன்றி கவற்சி மாயை உருவாக்கி விட்ட லக்ஸ் சோப்பு முதல் "பேர்அன்லவ்லி" கிரீம் வரை நடிகைகளை இந்த செயற்கை அழகை, தான் உருவாக்க முடியும் என்று தம்பட்டம் அடித்தன.

வெட்கத்தை மறந்து தன் அழகை வெளிப்படுத்த வேண்டும்.  என்ற போக்கு பேஷன் என்ற பெயரில் இயற்க்கைகு மாற்றமாக போராடத்தூண்டியது. இளம் பெண்களின் சாப்பாடு குறைந்து வெறும் ஒரு சேண்ட்விச் ஒரு பெப்சியுடன் நின்றுவிட்டது. குழந்தை பெற்று எடுப்பதையோ பால் ஊட்டுவதையோ புறக்கணித்தார்கள். இயற்கை பிரசவத்தை தவிர்க்க பல கருகலைப்புகளை ஏற்றுக்கொண்டார்கள். ரெவ்லான் மறரும் ஷாஹ்நாஸ் ஹுஸைன் அழகு சாதனங்கள் பெண் உலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் கணிசமான வருமானத்தை பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் இந்திய பெண்கள் உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தெருதெருவாக அழகிப்போட்டிகள் ரம்பமாகி விட்டன. பேஷன் ஷோ மற்றும் மாடலிங் பெண் இனத்தை கேவலமான சதை கண்காட்சியாக மாற்றிவிட்டது.

பெண்ணழகும் இயல்பான தோற்றமும் உலக சந்தையில் ஏலபொருட்கள் ஆகிவிட்டன. இல்லத்தரசியாகவும் பாசத்தாயாகவும் இருப்பதற்கு பதிலாக ஆண்வர்கத்தின் மனோ இச்சைகளுக்கு இறையாகி விட்டாள் பெண்.
அலங்கார  புதுபெண்ணாகவும், அழகியாகவும், மாடலாகவும், பேஷன் நிறைந்த புதுமைப்பாவையாகவும் அவளை மாற்றிவிட காலத்தேவைகளுக்கேற்ப உருவான ஒரு நவீன தொழில்தான் அழகு நிலையம் அல்லது பியூட்டி பார்லர். நகம் வெட்டி நிறம் பூசுவது, சிகை அலங்காரம், பேசியல் அதாவது முகப்பசைகளை திரவகங்களால் அகற்றி ரசாயன அழகுச் சாதனைகளை கொண்டு மினுமினுக்கச் செய்வது. கண் புருவங்களை குறைத்து மெலிதாக்கி கூர்மைப்படுத்துவது, செயற்கை eyelarhes  பொருத்தி கருமைப் பூசி கண்களை அழகு படுத்துவது, லிப்ஸ்டிக் பூசுவது, சில இடங்களில் உடற்பயிற்சி மூலம் உடலை டிரிம் செய்து மெலிதாக்குவது போன்ற பல சேவைகளை தகுந்த பணத்தை வாங்கிக் கொண்டு அளிக்கப்படுகின்றன.

பர்தாவை கண்டிப்புடன் கடைபிடிக்கும் இஸ்லாமிய மார்க்கம் தேவையில்லாத செயற்கை அழகுக்கு எதிராகத் தான் இருக்கிறது. ஆனால் எளிமையான இயற்கை அழகை அது ஆராதிக்கிறது. ஆம் தன் கணவனின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அவனுக்காக மட்டும் தன்னை எல்லாவிதத்திலும் அலங்கரித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. புதுப்பெண் அலங்காரமும் இதில் அடங்கும். ஆனால் முடிகளை வெட்டுவதோ, மாற்று முடியை சேர்த்து ஜடை பின்னுவதோ, சாயம் டை பூசுவது, புருவங்களை குறைப்பதோ, நகங்களை வளர்த்து லேசில் அகற்ற முடியாத பாலிஸ் பூசுவதோ, பச்சை குத்துவதோ, கூடாது.
இதெல்லாம் ஹராமான காரியங்கள் என்றும் இயற்கை சிருஷடித்த படைப்பை மாற்றி அமைப்பதாகவும் தீய சாத்தானின் செயல்களாகவும் திருமறையிலும், மாநபி மொழிகளிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளன.
ஆண்கள் பெண்களை போலவும், பெண்கள் ஆண்களை போலவும் தன் தோற்றத்தையும் உடை நடையை மாற்றிக் கொள்வதும் கூடாது.                                     (நூல் புகாரி முஸ்லிம்.)
மற்றும் பல ஹதீஸ் கிதாபுகளில் இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சபிக்கப்பட்டவர்களாக குறிப்பிட்டுள்ளார்கள்

இயற்கை படைத்த சிருஷடிக்கு மாற்றமான செயல்களில் ஈடுபட மனிதர்களை தான் தூண்டிவிடுவதாக ஷைத்தான் சபதம் செய்திருக்கிறான். என்று கூறப்பட்டுள்ளது.

மட்டகரமான இச்செயல்களை அலங்கரித்துக் காட்டி மோசடி செய்வான் என்றும், அவனிடம் நம்பி நட்பு பாராட்டுபவர்கள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் அடுத்த வசனம் எச்சரிக்கிறது.
ஆக பேஷன் என்ற பெயராலும், மாடலிங் நடிப்பு அல்லது அழகு அலங்காரம் என்று ஏமாந்து இயற்கைகுப் புறம்பான வெட்கக்கேடான செயல்களில் ஈடுபடுவது மார்கத்திற்கும் உயர்பண்புகளுக்கும் எதிரான செயல்கள் என்று தெளிவாகிறது. இது போன்ற செயல்களுக்காக பியூட்டி பார்லர் திறப்பது அதில் வேலைபார்ப்பது அங்கே சென்று மார்கத்திற்கும் இயற்கை படைப்பிற்கும் மாற்றமான அலங்காரம் செய்து கொள்வது ஹராமாகும்


மற்றபடி சுகாதாரம், உடல் சுத்தம் எளிமையான இயற்கை அலங்காரம்  செய்து கொள்வதற்கு பியூட்டி பார்லர் செல்ல அங்கே வேலை பார்க்க தொழில் நடத்த அனுமதி உண்டு. அன்னிய பெண்களுக்கு முன்பும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தான் உடலை காண்பிக்கலாம். பர்தா முறைகளை கடைபிடிப்பது அவசியம்.

No comments:

Post a Comment